திருவாசகம்
பாடல் :
பதப்பொருள்:
நமச்சிவாய வாழ்க – திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க;
நாதன் தாள் வாழ்க-திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க;
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க-இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க;
கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க-திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க;
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க-ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க;
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க– ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
விளக்கம்:
திருவைந்தெழுத்து என்பது தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என முத்திறப்படும். நகரத்தை முதலாக உடையது (நமசிவாய) தூலம் சி’கரத்தை முதலாக உடையது (சிவாயநம) சூக்குமம் அதிசூக்குமம் நகர மகரங்களின்றிச் சிகரத்தை முதலாகவுடையது (சிவாய). இங்குத் தூலவைந் தெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது. உயிர்களுக்கு உலக இன்பத்தைக் கொடுத்துப் பக்குவப்படுத்துவது. இனி, இறைவனது திருமேனியே திருவைந்தெழுத்தாகும் நகரம் திருவடியாகவும், மகரம் உடலாகவும், சிகரம் தோளாகவும், வகரம் முகமாகவும், யகரம் முடியாகவும் சாத்திரம் கூறும்.
இத்துணைப் பெருமையுடையது திருவைந்தெழுத்து ஆகையால், அதனை முதற்கண் வாழ்த்தி, பின்னர் அத்திருவைந்தெழுத்தின் வடிவமாயுள்ள முதல்வனை வாழ்த்தினார்.
“நெஞ்சில் நீங்காதான்’ என்றமையால், இறைவன் அகத்தே நெஞ்சத்தாமரையில் வீற்றிருக்கும் தன்மையையும், ‘கோகழியாண்ட குருமணி என்றமையால். இறைவன் புறந்தே திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டருளின் பெருமையையும் குறிப்பிட்டார்.
வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால் ஆகமமாகி நின்றண்ணிப்பான் என்றார் ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு.
இனி, ‘ஏகன் அநேகன் என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.