திருவெம்பாவை பாடல் 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.
பொருள் :
காதார் குழையாடப் பைம்பூண்
கலனாடக்
காதுகளில் பொருந்திய ‘குழை’ என்ற ஆபரணம் ஆட,
பைம்பூண் கலனாடக்
பசும்பொன்னால் செய்யப்பட்ட மற்ற ஆபரணங்கள் அசையவும்,
கோதை குழலாட
கூந்தலில் சூடிய நீண்ட மாலைகள் ஆடவும்,
வண்டின் குழாமாடச்
மாலைகளை மொய்க்கும் வண்டுகளின் கூட்டம் அசையவும்,
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ
மாபாடி
குளிர்ச்சியான நீர் பொருந்திய பொய்கையில் நீராடி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேத நாயகனான சிவபிரானைப் போற்றி, அந்த வேதப் பொருளான சிவபிரான், நமக்கு ஆகும் வண்ணம் பாடி (அதாவது, நாமே சிவனாகும் சிவசாயுஜ்யம் கிட்ட வேண்டும் என்று பாடி),
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத்
தார்பாடி
சோதி உருவான இறைவனின் தன்மையைப் பாடி, இறைவன் திருமேனியில் சூடியுள்ள கொன்றை மாலையைப் பாடி,
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடி
இறைவன் அனைத்திற்கும் முதலாகிய திறனை வியந்து பாடி, இறைவன், அனைத்தையும் ஒடுக்கும் முறைமை குறித்துப் பாடி, பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ
ரெம்பாவாய்
நம்மை நம் பக்குவ நிலைகட்கு ஏற்ப அருள் பாலித்து, ஆன்மீக உயர்நிலைக்கு உயர்த்தியருளும், வளையலை அணிந்த திருக்கரங்களை உடைய அம்பிகையின் திருவடிகளின் தன்மையைப் பாடி ஆடுவாயாக !!