திருவெம்பாவை பாடல் 16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள்
இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர்
எம்பாவாய்.
பொருள் :
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை
மேகமே !! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேலே எழும்பி, எம்மை உடையவளாகிய உமையவளின் திருமேனி போல் கருநீல வண்ணம் கொண்டாய்.
ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி
எம்மை அடிமை கொண்டவளின் சின்னஞ் சிறிய சிற்றிடை போல் மின்னி விளங்கி, எங்கள் பிராட்டியாகிய அம்பிகையின் திருவடியிலிருக்கும் சிலம்பின் ஒலி போல் இடித்து,
திருப்புருவம்
என்னச் சிலைகுலவி
அம்பிகையின் திருப்புருவம் போல் வானவில் இட்டு,
நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
நம்மை அடிமை கொண்ட அம்பிகையைப் பிரியாத எம் தலைவனாகிய சிவபிரானின் அடியார்களுக்கும்,
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர்
எம்பாவாய்
நமக்கும், அவள் உள்ளம் உவந்து, முந்திச் சுரக்கின்ற இன்னருள் போல, ( மழையாகப்) பொழிவாயாக !..