திருவெம்பாவை பாடல் 20
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம்
பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம்
பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
பொருள் :
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
எல்லாப் பொருள்களுக்கும் முதலாக ஆதியாக இருக்கின்ற உன் திருவடி மலர்களுக்கு வணக்கம் !… (இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும்
போற்றி அருளுகநின் அந்தமாஞ்
செந்தளிர்கள்
அனைத்து பொருள்களுக்கும் முடிவாக இருக்கின்ற செந்நிறமான தளிர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம் .. (இறைவா) அவற்றை எங்களுக்கு அருளி ஆட்கொள்ள வேண்டும்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம்
பொற்பாதம்
தோன்றுவதற்குக் காரணமாக நின்ற பொன்னை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம் ..
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
எல்லா உயிர்களும் நிலைபெறும் இடமாக இருக்கின்ற பூப் போன்ற மென்மையான, ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திருவடிகளுக்கு வணக்கம்.
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம்
எல்லா உயிர்களுக்கும் முடிவு எய்துவதற்குக் காரணமாக இருக்கின்ற இணையடிகளுக்கு வணக்கம்.
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
திருமாலும் பிரம்ம தேவனும் எவ்வளவு முயற்சித்தும் காண முடியாத திருவடித் தாமரைகளுக்கு வணக்கம்.
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும்
பொன்மலர்கள் அனைவரையும் ஆட்கொண்டருளும் பொன்மலர்களை ஒத்த திருவடிகளுக்கு வணக்கம்.
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ
ரெம்பாவாய்.
இவ்விதமாக இறைவனைப் போற்றி நாம் அனைவரும் மகிழ்ந்து மார்கழி நீராடுவோமாக!