சங்கடங்கள் நீக்கி சந்தோஷமான வாழ்வு அளிக்கும் தொட்டியம் மதுரை காளியம்மன்
சுமார் 400 வருடங்களுக்கு முன் ஒருநாள் தொட்டியம் கிராமத்தில் சின்னான் மற்றும் செல்லான் என்ற இருவர் மதுரைக்கு மகாகாளியம்மன் திருவிழாவிற்கு பறை இசைக்க சென்றார்கள்.அவர்களின் பறை இசை அம்மனை மிகவும் கவர்ந்தது.
கோவில் திருவிழா முடிந்ததும் சின்னான் மற்றும் செல்லான் பயண களைப்பு தீர பறை இசைத்துக் கொண்டே மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் பறை இசையில் மயங்கிய மதுரை காளியம்மன் அவர்களைப் பின்தொடர்ந்து தொட்டியம் வந்து சங்கம் புதரில் ஒரு புற்றில் அமர்ந்தாள்.
அங்கு தினமும் எசங்கராயன் பட்டியில் இருந்து இடையர்கள் மாடுகளை ஓட்டி வந்து மேய விடுவது வழக்கம்.மதுரகாளியம்மன் தொட்டியம் வந்து அமர்ந்தது முதல் மாடுகள் தினமும் புற்றின் மேல் நின்று பாலைச் சுரந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யத் தொடங்கின. இதனை அறியாத மக்கள் சங்கம் புதரில் மறைந்து கொண்டு மாடுகளிடம் யாரோ தினமும் திருட்டுத்தனமாக பாலை கறப்பதாகவும், அதனால்தான் மாடுகளிடம் பால் இல்லை எனவும் நினைத்துக் கொண்டு அப்பகுதி அரசனிடம் சென்று முறையிட்டனர்.
அரசன் தன் படையுடன் சங்கம் புதர் சென்று கள்வர்களை தேடினான். அந்த புகாரில் தன் வாலை சொருகினான். புதருக்குள் இருந்து ரத்தம் பீறிட்டது. அரசன் அதிர்ந்து நிற்க அவன் முன் மதுரகாளியம்மன் தோன்றினாள்.
பயந்துபோன அரசன் “தாயே! நீயே புதிரில் இருப்பதை நான் அறியவில்லை என்னை மன்னித்துவிடு உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி இங்கு வந்து அமர்ந்து இருக்கிறாய்? என்று கேட்டான்.
சின்னான்,செல்லானின் பறை இசையில் மயங்கி இங்கு வந்து புற்றில் அமர்ந்தேன். இந்த மாட்டை அவிழ்த்து விடு அது எங்கெல்லாம் சுற்றி வருகிறதோ அதுவரை எனது எல்லை என்று கூறினாள்.
மாடு பதினெட்டு பட்டி சுற்றி வந்து புதரின் அருகில் நின்றது. இனி இந்த பதினெட்டு பட்டி மக்களும் என் மக்கள் இவர்கள் என்னை வந்து வழிபட இங்கு கோயில் எழுப்ப வகை செய்வாயாக என்று கூறி மதுரை காளி மறைந்தாள்.
காளியின் ஆணையை சிரத்தையுடன் ஏற்று அவளுக்கு திருக்கோயிலை எழுப்பினான் அரசன். அன்று முதல் காளியம்மன் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இன்றும் கருவறையிலுள்ள மதுரைகாளியம்மன் மேனியில் அரசனால் ஏற்பட்ட காயத்தின் வடு உள்ளது.
அம்மனுக்கு உரிய நாட்கள் யாவும் இங்கு சிறப்பான பூஜைகள் நடக்கும். அதோடு ஆனித்திருமஞ்சன விழா இங்கே விசேஷமானது. திருமஞ்சன விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடம், சந்தன குடம் ,அக்னி சட்டி எடுத்து வந்து, அலகு குத்தி வந்து மதுர காளி அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
தொட்டியம் மதுரை காளியம்மனுக்கு வடை மாலை சாத்தினால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கோர்ட்டு வழக்கு இழுபறியாக இருந்தாலும், நம் பக்கம் நியாயம் இருந்த வழக்கு நமக்கு எதிராக நடந்தாலும், மதுரகாளியம்மனை வேண்டி நின்றால் காரியம் ஜெயமாகும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
காளியம்மன் சன்னதிக்கு எதிரே பெரிய குதிரைகள் உள்ளன. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை துண்டு சீட்டில் எழுதி குதிரை சிலையில் கட்டுகிறார்கள். இப்படி வேண்டுவதால் பிரச்சனையும், கஷ்டமும் தீர்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
வழித்தடம்:
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 60 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்தில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. முசிறியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
Google Map -Madura Kaliamman Temple