விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: கடக ராசி
மாத்ருகாரனாகிய சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இதுவரை லாப ஸ்தானத்திலிருந்த குருபகவான் மே 14ஆம் தேதி முதல் விரயஸ்தானத்திற்கு வருகிறார் மேலும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாகவும், பிறகு டிசம்பர் 5ஆம் தேதி முதல் வக்ரகதியில் மீண்டும் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.
ராகு-கேதுக்கள் முறையே உங்கள் ராசிக்கு 9,3 இடங்களில் இருந்து 8,2ம் இடத்திற்கு மே 18ஆம் தேதி முதல் வருகிறார்கள். இவ்வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
இவ்வருடம் குடும்பத்தில் சுப விரயங்கள் நடக்கும். தந்தையார் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. நீங்கள் சம்பாதிக்கும் பணம் கடன் கட்டுவதற்கும், மருத்துவ தேவைக்கும், தொழில் போட்டியை சமாளிக்கவும் செலவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
ரத்த ஓட்டத்தில் சிறு கோளாறுகள் ஏற்பட்டு பிறகு சரியாகும். வீடு, மனை ரிப்பேர் செய்யலாம். புது வாகனம் வாங்கவும், பழைய வாகனம் வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகளுக்கு தகுந்த மருந்து கிடைக்கும். அக்டோபர் நவம்பர் மாதங்களில் மனக்குழப்பங்கள் அதிகமாகும்.
மாணவர்கள் நன்கு கருத்துடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். உங்களுக்கு குருபலம் இல்லாவிட்டாலும் வரனுக்கு குரு பலம் இருந்தால் திருமணம் முடிவாகும். இருசக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் வெகு தூரம் செல்வதை தவிர்க்கவும்.
பரிகாரம்
பிரதி வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபமும், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபமும் வைத்து வழிபட்டு வரவும். ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை திருநாகேஸ்வரம் சென்று பாலாபிஷேகம் செய்வது நலம்.
மொத்தத்தில் இந்த வருடம் 50 சதவீதம் நற்பலன்களை நல்கும் வருடமாக உங்களுக்கு அமையும்.