விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: சிம்ம ராசி
பித்ருகாரகனாகிய சூரியனை ஆட்சி வீடாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 10மிடம் இருந்த குருபகவான் மே 14 முதல் லாபஸ்தானமாகிய 11மிடம் வருகிறார். மேலும், அக்டோபர் 18ந் தேதி அதிசாரமாக 12மிடம் வருகிறார். பிறகு, மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதியன்று லாபஸ்தானத்திற்கு வருகிறார்.
மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8, 2மிடங்களில் இருந்த ராகு-கேதுக்கள் முறையே 7, 1மிடம் வருகிறார்கள்.
இவ்வருடம் முழுவதும் சனிபகவான் அஷ்டம சனியாக 8மிடம் சஞ்சாரம் செய்கிறார்.
இதன்மூலம் இவ்வருடம் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் முடிவாகும். அஷ்டம சனி நடப்பதால் திருமணம் முடிவான பிறகு தடைகள் உண்டு. ஆகவே, காலதாமதம் செய்யாமல் திருமணத்தை நடத்துவது சுபம்.
ஏப்ரல் 14ந் தேதி முதல் மே 18ந் தேதி வரை ஆரோக்யத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை. சிறுபிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. மனைவியின் ஆரோக்யத்தில் மிகுந்த அக்கறை தேவை. மே 18ந் தேதிக்குப் பிறகு அஷ்டம சனியின் தாக்கம் குறையும்.
தொழில்துறையில் சிறு தடைகளுடன் வளர்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் காரிய தாமதமாகும். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டுப் பிறகு சரியாகும்.
ஆவணி மற்றும் பங்குனி மாதங்களில் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. குழந்தைகள் நல்ல முன்னேற்றம் பெறுவர். கால்மூட்டு, ஜீரண உறுப்புகளில் தொந்தரவு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தொந்தரவு உண்டு. ஆரோக்யத்தில் மிகுந்த அக்கறை தேவை.
பரிகாரம்:
பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றி வரவும்.
பிரதி மாதம் முதல் அல்லது மூன்றாவது சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு ஒரு லிட்டர் தூய்மையான நல்லெண்ணெய் கொடுத்து வெற்றிலை மாலை சாற்றவும்.
மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.