ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய, அவளின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், 7ம் அதிபதியும், 7ம் வீட்டில் அமையும் கிரங்களும் பலமாக அமைந்திருத்தல் அவசியம்.
நவக்கிரகங்களில் நவநாயகனாக விளங்குபவர் சூரியனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 7ம் வீட்டில் அமையப் பெற்றால், வரக்கூடியவர் முன்கோபக்காரராகவும், நெஞ்சழுத்தம் உள்ளவராகவும், இரக்கக்குணம் இல்லாதவராகவும் இருப்பார். இவரை அனுசரித்துச் செல்வது என்பது சற்று கடினமான காரியமே.
7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இருந்தால் அமைகின்ற கணவர் அழகானவராகவும், தேய்பிறை சந்திரன் இருந்தால் வசதி வாய்ப்பில் சற்று குறைந்தவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார்.
7ம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும், 7ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தாலும் முன் கோபம் கொண்டவராகவும், அதிகார குணம் உடையவராகவும் இருப்பார்.
7ம் வீட்டில் புதன் அமைந்திருந்தாலும், 7ம் வீடு புதனின் வீடாக இருந்தாலும், கணவர் நல்ல அறிவாளியாகவும் வியாபார நோக்கம் உடையவராகவும் இருப்பார்.
பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு குருவின் வீடாக இருந்தாலும் 7ம் வீட்டில் குரு அமைந்திருந்தாலும் கணவர் நல்ல வசதி வாய்ப்புடையவராகவும், பெயர் புகழ் பெற்றவராகவும், எல்லோரையும் அனுசரித்துச் செல்பவராகவும் இருப்பார்.
7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, சுகபோக வாழ்க்கை வாழும் யோகம், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்.
7ல் சனி இருந்தாலும் 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், கறுப்பு நிறமுடையவராகவும், இளைத்த தேகம் கொண்டவராகவும், உரத்த குரலில் பேசுபவராகவும் இருப்பார்.
7ல் சர்ப கிரகங்களான ராகு, கேது அமைந்திருந்தால் கணவர் நல்ல நடத்தை உள்ளவராக இருக்கமாட்டார். குறிப்பாக 7ல் சூரியன், ராகு இருந்தால், பல பெண்களின் தொடர்பும் அதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கக்கூடிய நிலையும் உண்டாகும்.
நல்ல கணவர் அமையும் பெண்ணின் வாழ்க்கையானது இனிமையானதாகவும், மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்கும். அதுவே கணவன் நல்லவராக அமையாவிட்டால் அவளின் வாழ்க்கையே நாசமாகிவிடும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதால் முடிந்தவரை போராடி வெற்றி காணுங்கள்.