குருபெயர்ச்சி பலன்கள்-கன்னி
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!!
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான கும்பத்தில் இருந்து வந்த குருபகவான் 13.4.2022 முதல் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.
பொதுவாக 2 ,5, 7, 9 ,11ம் வீடுகளில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் அவர் பார்க்கும் இடங்களுக்கு மட்டுமல்லாமல் நின்ற இடத்திற்கும் சேர்த்து சுப பலன்களை வழங்குவார் என்பது ஜோதிட விதியாகும்
ஒரு ஜாதகனுடைய ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும்போது அவன் நல்ல நெறிமுறைகளில் பற்றுதல் கொண்டு நேர்மையாக நடந்து புனிதனாவான். வாழ்வில் இன்பம் காண்பான்.எல்லையற்ற விருப்பத்துடன் இருப்பான். உயர் தகுதியும் மதிப்புமிக்க பெண்களால் ஆதாயம் அடைவான். வாகன யோகம் அடைந்து யோகம் உள்ள மனைவியை கொண்டவனாக மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் உங்களுக்கு ஏற்றமான பலன்களையே வழங்க உள்ள நேரத்தில் அங்கிருந்து 5,7, 9-ஆம் பார்வையாக உங்கள் ராசியையும் 3-ஆம் வீட்டையும் 11ஆம் வீட்டை பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடங்களெல்லாம் சிறப்படைய போகிறது.
குருவின் 7ம் பார்வை பலன்
தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை பார்வையிடும் போது முதலில் உங்களை ராஜநடை போட வைப்பார். நேற்று வரை உங்களை சர்வசாதாரணமாக எண்ணியவர்கள் உங்கள் திறமையையும் பெருமையையும் உணர்வார்கள். தடைகளாக இருந்ததை எல்லாம் தாண்டி வெற்றி நடை போடுவீர்கள்.
உடலில் புதிய வலிமை குடிகொள்ளும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயது வந்ததும் திருமணம் நடைபெறாமல் தாமதப்பட்டு வந்தவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். பெண்களால் ஆண்களுக்கும் ஆண்களால் பெண்களுக்கும் சந்தோஷமும் நன்மையும் உண்டாகும். விளையாட்டாக ஆரம்பித்த காதல் திருமணம் வரை செல்லும்.
குருவின் 9ம் பார்வை பலன்
தனது ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமாகிய சகோதர தைரியத்தை பார்வையிடும் குருபகவான் உங்கள் துணிச்சலை அதிகரிப்பார். எடுத்த காரியத்தில் வெற்றி நிலையை உண்டாக்குவார். தொழில் விருத்தியாகும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். யோகதுடன் போகமும் நிறையும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் தென்படும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை நிறையும்.
குருவின் 5ம் பார்வை பலன்
தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை பார்வையிடும் குருபகவான் உங்கள் சிந்தனை சக்தியை அதிகரிப்பார். எந்த வழி நல்ல வழி என்று தெரிந்துகொண்டு அந்த வழியில் செல்ல வைப்பார். குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கி கொண்டிருந்தவர்களின் கவலை தீர்ந்து வீட்டில் மழலைச் சத்தம் கேட்கும். மூதாதையர்களின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் முடிந்து சொத்துக்கள் கைக்கு வரும். இறை வழிபாட்டில் மனம் செல்லும். நீதிபோதனை, பிரசங்கம் என்று மற்றவர்களுக்கு நல்ல வழியை காட்டுவீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
திருக்கோவிலூருக்கு அருகில் மணம்பூண்டியில் உள்ள ஸ்ரீஸ்ரீரகூத்மரின் ஜீவசமாதிக்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்று பால் அபிஷேகம் செய்து வாருங்கள் நன்மை எல்லாம் நடக்கும்.