குருபெயர்ச்சி பலன்கள் -தனுசு
குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!!
இதுவரையில் உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த குரு பகவான் 13.04.2022 முதல் நான்காம் இடமான மீன ராசியில் பிரவேசிக்க இருக்கிறார்.
ஜாதகத்தில் நான்காம் இடம் சுகஸ்தானம், மாத்ரு ஸ்தானம், வாகன ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தைக் கொண்டு உங்களின் சுகதுக்கங்கள், உங்கள் தாயின் நிலை, வாகன யோகம் உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நான்கில் வரும் குருபகவான் தேவையில்லாத எண்ணங்களை உருவாக்குவார். நிறைவேறாத செயலில் முயற்சியை உண்டாக்கி மனதில் சஞ்சலத்தையும் அமைதியற்ற நிலையையும் உண்டாக்குவார். உடல்நலம் பாதிப்படையும் கூடும் என்பதால் சுகத்தின் மீதான நாட்டமும் போய்விடும். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கூட பகைவர்கள் ஆகும் நிலை வரும்
இல்லையேல் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டிய நிலை வரலாம். அதனால் அவமானத்திற்கும் ஆளாக நேரலாம்.
குருவின் 5ம் பார்வை பலன்
குரு தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் உங்கள் ஆயுள் பலமடையும். தீராத வியாதிகளுக்கு நீங்கள் ஆட்பட்டு இருந்தால் அவற்றில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். அவமானத்துடன் வாழ்ந்த நிலைமாறும். தோல்விகளையே சந்தித்து வந்த நிலை மாறி வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலும் குடும்பமும் நிலைபெறும். இங்கும் அங்கும் என்று அலைந்து திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் இருந்து வெற்றியடைய கூடிய நிலை உண்டாகும்.
குருவின் 7ம் பார்வை பலன்
குரு தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை தொழிலில் தேக்கம் அடைந்து இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமை வெளிப்படும். செயலிலும் வேகம் விவேகம் நிறைந்திருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி வேதனையும் தீர்ந்து ஒரு தெளிவான நிலை உண்டாகும். வருமானம் பலவழிகளில் வர ஆரம்பிக்கும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டு அதனால் புகழும் கௌரவமும் உண்டாகும். வாழ்க்கை தரம் உயரும். நல்ல உடையுடன் பளிச்சென்று தோன்றுவீர்கள். ருசியான உணவு நேரத்திற்கு கிடைக்கும். அரசாங்கத்தால் வெகுமதியும் மூத்தோரின் ஆதரவும் கிடைக்கும்.
குருவின் 9ம் பார்வை பலன்
குரு ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தை பார்க்கிறார். இனி விரையும் எல்லாம் சுபவிரயம் ஆகப்போகிறது. ஒரு சிலர் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் என்று இருந்த நிலை மாறி இனி அவற்றில் மாற்றங் களை சந்திப்பீர்கள். காணாமல் போன பொருள் திரும்ப வரும். கைவிட்டு போன சொத்து ஒரு சிலருக்கு மீண்டும் கைவசம் ஆகும். மனைவி ஒரு இடம் கணவன் ஒரு இடம் என்று வாழ்ந்த நிலைமாறி இருவரும் மகிழ்ச்சியாக வாழும் யோகம் உண்டாகும்.
பலன் தரும் பரிகாரம்
உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று ஒருமுறை ஆலங்குடிக்கு சென்று ஆபத்சகாயேசுவரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்.
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாத்தி மஞ்சள் வஸ்திரம் அணிவித்து பாருங்கள் நன்மைகள் உண்டாகும்.