குரு பெயர்ச்சி பலன்கள்-மேஷம்- பலன்கள்-பரிகரங்கள்
நினைத்ததை நடத்திக் காட்டும் ஆற்றல் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!!!
இதுவரை 11 இல் இருந்து நற்பலன்களை உங்களுக்கு வழங்கிவந்த குருபகவான் 13.04.2022 முதல் உங்கள் ராசிக்கு 12ம் இடமான மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
இந்த காலத்தில் உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் தசாபுக்தி நன்றாக இருந்தால் இந்த பலனில் நிச்சயம் மாறுதல் இருக்கும்.
12ஆம் வீட்டிற்கு வரும் குருபகவான் என்னதான் செய்வார்??
கோச்சாரத்திற்கு 12-ல் வரும் குருபகவான் வீண் செலவுகளை உண்டாக்கிக் இருப்பை கரைய வைப்பார்.
செய்யும் தொழிலில் திருப்தி இல்லாமல் போக வேறு தொழில் தொடங்கலாமா என்ற யோசனையை ஏற்படுத்துவார். அதனால் அலைச்சலும் பொருள் விரயமும் உண்டாகி நிம்மதி பறிபோகும்.
ஒருசிலர் அரசு வழியில் சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
எதிர்பாலினரால் ஒரு சிலருக்கு விரயம் உண்டாகும்.
அடுத்தவருக்கு உதவி செய்யப் போக அதனால் சிரமத்துக்கு ஆளாகும் நிலை சிலருக்கு உண்டாகும்.
எந்த ஒரு செயலிலும் தடை தாமதம் அதனால் அலைச்சல் விரயம் என்று இருக்கும்.
காரணம் குரு பகவான் எந்த இடத்தில் அமர்கிறார் அந்த இடத்திற்கு நற்பலன்களை வழங்காமல் அவர் பார்க்கும் இடங்களுக்கு மட்டுமே நற்பலனை வழங்கக் கூடியவர் என்பது பொதுவான பலன் என்றாலும் குருபகவான் உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நண்பர் என்பதால் உங்களை சங்கடத்தில் விடமாட்டார்.
பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து அந்த இடத்திற்கு உரிய பலனை வழங்கும் குருபகவான் அங்கிருந்து 5, 7 ,9-ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 4-ஆம் இடத்தையும் 6-ஆம் இடத்தையும் 8-ஆம் இடத்தையும் பார்வையிட இருக்கிறார். அந்த இடமெல்லாம் சிறப்படைய போகிறது.
குருவின் 5ம் பார்வை பலன்
தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் உங்கள் நிலையில் பலவித முன்னேற்றங்களை அடைவீர்கள். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் அன்று மீண்டும் சுக வாழ்வில் திளைப்பீர்கள்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.
வீடு இருந்தால் அதை பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். ஒரு சிலர் புதிதாக நிலம் அல்லது வீடு வாங்குவீர்கள்.
ஸ்திர சொத்துக்கள் உங்கள் பெயரில் அமையும்.
கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் ஏற்றம் அடைவார்கள். ஆசிரியர்கள் கல்வி நிறுவன உரிமையாளர்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
தாய்வழி உறவு பலப்படும். தாயாருக்கு ஏற்பட்டிருந்த உடல் பாதிப்பு மாறி சகஜ நிலைக்கு வருவார்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். ஆலயங்களுக்கு சென்று வேண்டுதலை முடிப்பீர்கள்.
குருவின் 7ம் பார்வை பலன்
அடுத்து தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான சத்ரு ரோக ஸ்தானத்தை பார்க்கிறார். அதனால் இதுநாள் வரை உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் அகலும். கடன் தொல்லையாலும் எதிரிகளின் கலக்கத்திலும் பாதிக்கப்பட்டிருந்த நீங்கள் அவற்றில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள்.
நோய் நொடிகளுக்கு ஆளாகி இருந்த நிலை மாறி இப்போது எழுச்சியுடன் நடமாட ஆரம்பிப்பீர்கள்.
எதிர்பாலினரால் அவதியை சந்தித்து வந்தவர்கள் மனம் மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் நிலை மாறும்.
குருவின் 9ம் பார்வை பலன்
தனது 9-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8-ஆம் இடம் ஆயுள் ஸ்தானத்தை பார்க்கிறார். இந்த இடம் அஷ்டம ஸ்தானம் என்று சொல்லலாம். அதனால் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தொல்லைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் அகன்று பயம் விலகும். செய்தொழில் முடங்கி அதனால் வருமானம் குறைந்து வாழ்வா சாவா என்ற நிலையில் அல்லல் பட்டு வந்த உங்கள் வாழ்க்கை இனி சிறப்படையும். வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் முயற்சிக்கு மேல் முயற்சி மேற்கொண்டும் தோல்வி என்று துயரத்தின் சிக்குண்டு வேதனையில் வாடிக் கொண்டிருந்த உங்களுக்கு இக்காலத்தில் அவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். எலியும் பூனையுமாக இருந்த கணவன் மனைவி உறவு பலப்படும். நோய்களுக்கு ஏற்ற சிகிச்சை மேற்கொண்டு குணமடைவீர்கள். உடல் உபாதைகள் அகலும்.
இவையாவும் குருபகவானின் பார்வையால் உங்களுக்கு உண்டாகப் போகும் பொது பலன்கள் ஆகும்.
பரிகாரம்:
உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று ஒருமுறை ஆலங்குடி சென்று ஆபத்சகாயேசுவரரை அர்ச்சித்து வணங்கி வாருங்கள். விரைவில் உங்கள் ராசிக்கு 1-ல் ராகுவும் 7-ல் கேதுவும் சஞ்சரிக்க உள்ளதால் திருநாகேஸ்வரம் கீழப்பெரும்பள்ளம் சென்று ராகு கேதுவை அர்ச்சித்து வருவதுடன், துன்பங்கள் தீர எதிர்ப்புகள் அகல ஐயாவாடியில் உள்ள வனபத்திரகாளியை தரிசித்து வாருங்கள் நன்மையை காண்பீர்கள்..
மற்ற ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2022- 2023 எப்போது சார் போடுவீங்க?
காத்துக் கொண்டிருக்கிறோம்.