சிவசைலம் பரமகல்யாணி
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிவசைலம்..
சிவபெருமானின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் அது நீங்குவதற்கான பரிகாரத்தையும் அவரிடமே கேட்டான்.
அதற்க்கு எம்பெருமான் நான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் தலத்தில் நந்தியை பிரதிஷ்டை செய்தால் உன் சாபம் நீங்கும் என்றார் ஈசன்.
உடனே தேவசிற்பியான மயனை இங்கு அனுப்பி நந்தி சிலையை வடிக்க செய்கிறார் இந்திரன். சிற்ப சாஸ்திரப்படி ஒரு சிலை எந்த குறையும் இல்லாமல் வடிக்கப்பட்டால் அது உயிர் பெற்று விடும் என்பார்கள். அப்படி நந்தி சிலையும் தத்ரூபமாக வடிக்கப்பட்டதால் உயிர்பெற்று தேவலோகத்திற்கு கிளம்ப,மயன் உளியால் அந்த நந்தியின் உடலில் சிறு கீறல் ஏற்படுத்துகிறான், சிலை பின்னமடைந்ததால் நந்தி அங்கேயே தங்கிவிடுகிறது. அதுதான் இங்குள்ள நந்தி.
எட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னன் சுதர்சன பாண்டியன் நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத அவன் சிவசைலநாதரையும், பரமகல்யாணியையும் வழிபட்டு புத்திர பாக்கியம் பெற்றான். அதற்கு நன்றிக்கடனாக இக்கோயிலைக் கட்டினான்.
மூலவர் லிங்கத் திருமேனியில் சடை காணப்படுகிறது. இதை கருவறை சுவற்றில் பின்புறமுள்ள துவாரம் வழியே தரிசிக்கலாம். சிவசைலநாதர் சடையுடன் காணப்படுவதற்கு காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
மன்னன் சுதர்சன பாண்டியன் இப்பகுதியை ஆண்டபோது தினமும் சுவாமியையும், அம்பாளையும் அர்த்தஜாம பூஜையில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் நெடுநேரமாகியும் மன்னன் கோவிலுக்கு வரவில்லை, இனிமேல் மன்னர் வரமாட்டார் என கருதிய கோயில் அர்ச்சகர் மன்னனுக்கு மரியாதை செய்ய வைத்திருந்த மாலையை கோயிலை சேர்ந்த நடன பெண்ணிடம் தந்துவிட்டார் அவளும் அதை ஆசைஆசையாக தன் கழுத்தில் அணிந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் மன்னரின் குதிரை வரும் சத்தம் கேட்டது .பயந்துபோன பூசாரி நடன பெண்ணிடமிருந்து மாலையை அவசர அவசரமாக வாங்கி கோயிலுக்குள் நுழைந்த மன்னருக்கு அதை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாலையில் ஒரு நீளமான முடி இருப்பது மன்னனின் கண்களில் பட்டுவிட்டது.
அதை அபாசகுணமாக கருதிய மன்னர் மாலையில் எப்படி முடி வந்தது எனக் கேட்டார். தலைமுடி விவகாரத்தில் தனது தலை போய்விடுமே என நினைத்து அர்ச்சகர் சமயோஜிதமாக மன்னா சுவாமிக்கு சடை இருப்பதால் இந்த முடி அங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்றார். அதற்கு மன்னன் என்ன உளறுகிறாய் சுவாமிக்கு சடைமுடியா எங்கே காட்டு என மன்னர் கர்ப்பக்கிரகத்தின் பின்புற சுவற்றில் துளையிடச் சொன்னார்.
அர்ச்சகரோ அரவம் தீண்டியதுபோல் பதைபதைத்தார், சேவகர்கள் பின்புற சுவற்றில் துளையிட அந்த வழியாக பார்த்த மன்னர் ஆச்சரியப்பட்டார். ஏழை அர்ச்சகரை காப்பாற்றும் பொருட்டு சடைமுடியுடன் தரிசனம் தந்தார் சங்கர். இன்றும் அந்த துவாரம் வழியே சுவாமியை தரிசிக்கலாம்.
இத்தல இறைவனுக்கு சொந்த ஊர் சிவசைலம் என்றால், இறைவிக்கு பரமகல்யாணி சொந்த ஊர் அருகில் உள்ள கீழ ஆம்பூர் ஆம்.. அங்குள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலைதான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இறைவி பரமகல்யாணி.
கருவறையில் சிவசைலநாதரும், அவருக்கு இடப்பக்கம் தனிசன்னதியில் பரமகல்யாணியும் வந்தோரை காக்கும் கடவுளாக விளங்குகின்றனர். இவர்களை வழிபட்டு பலர் குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.பாண்டிய நாட்டில் பெரும்பாலும் அம்மன் இரு கரங்களுடன் தான் காட்சியளிப்பாள். ஆனால் இங்கு பரமகல்யாணி நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறாள்.
கருவறைக்கு அருகே மஞ்சளும் உரலும் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக திருமணம் தடை உள்ளவர்கள் அங்குள்ள மஞ்சளை உரலில் போட்டு உலக்கையால் இடித்து அதில் கொஞ்சம் எடுத்து பூசிக் கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை..
Google Map: