செவ்வாய் தோஷம் போக்கும் வெங்காயபள்ளி வேலவன்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடிவாரத்தில் வெங்காய பள்ளி என்ற கிராமத்தில் வேலவன் கோயில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து
ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகளில் பயணித்து ஜோலார்பேட்டை கடந்தவுடன் வரும் பால்நாங்குப்பம் என்ற பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து தனி வாகனம் மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று கோயிலை அடையலாம்.
இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் துன்பப்படும் போது இறைவனே அவதாரம் எடுத்து முன்னின்று தீர்த்து வைப்பார் என்பதற்கு தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அவதாரம் ஓர் எடுத்துக்காட்டு.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சிவயோகி ஒருவர் ஏலகிரி மலை அடிவாரத்தில் மயில்கள் அதிகமாக நடமாடக் கூடிய வெங்காய பள்ளி என்ற இடத்தில் வசித்து வந்தார். தீவிர முருக பக்தரான அவருக்கு தான் வணங்கும் வடிவேலனக்கு ஒரு கோயில் அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதோடு ஆறு ஆதாரங்களை உணர்த்தும் விதத்தில் ஆறுகோண வடிவில் அடித்தளம் அமைத்து, நடுவில் மண்ணின் அடையாளமான சதுர வடிவில் கருவறை அமைத்து, அதில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தை எப்போதும் ஊர் மக்களிடம் கூறிக்கொண்டு இருப்பார். இந்த நேரத்தில் சில காலம் நிட்டையிலிருந்த அவர் ஒருநாள் சமாதி நிலையை அடைந்து விட்டார்.
அதன் பின்னர் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சிவயோகி கூறியபடியே அறுங்கோண வடிவில் அடித்தளம், நடுவே சதுர வடிவில் கருவறை அமைத்து வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து, அறுங்கோணத்தில் உள்ள ஒவ்வொரு முக்கோண பகுதியிலும் ஒவ்வொரு படைவீட்டிலுள்ள மூலவரை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்திவருகின்றனர்.
கோயிலின் முன்பு இரண்டு பெரிய பாறைகளின் மேல் தனித்தனியாக வலது இடது பக்கங்களில் இடும்பன்,கடம்பன் சிலைகள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளன.
கருவறையில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானைஸ் சமேத முருகப் பெருமானை தரிசிக்கிறோம், பின்னர் கோயிலை வலம் வருகையில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்தில் உள்ள முதல் முக்கோணத்தில் திருப்பரங்குன்றம் மூலவரையும், இரண்டாம் முக்கோணத்தில் திருச்செந்தூர் மூலவரையும், மூன்றாம் கோணத்தில் பழனி மூலவரையும், நான்காம் முக்கோணத்தில் சுவாமிமலை மூலவரையும், ஐந்தாம் முக்கோணத்தில் திருத்தணி மூலவரையும், ஆறாம் முக்கோணத்தில் பழமுதிர்ச்சோலை மூலவரையும் தரிசித்துவிட்டு சுற்றி நிறைவு செய்யும்போது அறுபடை வீடுகளை தரிசித்த உணர்வு போன்ற உணர்வு உண்டாவது நிச்சயம்.
செவ்வாய்க்கிழமைகள், சஷ்டி, கிருத்திகை, பங்குனி உத்திரம்போன்ற நாட்களில் சிறப்பு அலங்காரத்துடன் கூடிய ஆராதனைகள் நடைபெறுகின்றன.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து மூலவராக விளங்கும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியமாக படைத்து பூஜித்தால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
குழந்தை பேறு வேண்டுவோர் தேனால் அபிஷேகம் செய்து, செவ்வரளி பூவால் அலங்கரித்து, தினை மாவில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
வாரிசுகள் கல்வியில் சிறக்க குடும்பத்துடன் மலர் காவடி எடுத்து வந்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்வோரும் உண்டு.
ஆறாதாரங்களுக்குமே ஆதாரமான ஆறுமுகன் அருளும் தலம் என்பதால் இங்கேயே அமர்ந்து தியானித்தால் எளிதில் யோகம் சித்தியாகும் என்கின்றனர்…
மீண்டும் அடுத்த ஆலயத்தில் சந்திப்போம்…
Google Map :