எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
சோழநாட்டில் எண்கண் நாடு, எண்கண் ஆகிய பெயர்களில் விளங்கிவந்த பவித்ரமாணிக்க சதுர்வேதிமங்கலம்’ என அழைக்கப்பட்டு, மனுநீதி சோழனின் தலைமை அமைச்சர் உபயகுலாமன் பிறந் ததும், அருணகிரிநாதரால் பாடப்பெற்றதும் தஞ்சை பெருவுடையார் கல்வெட்டில் ‘சத்திய சிகாமணி வளநாட்டு எண்கள் எண்கண்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததும் இந்த ஊர்தான்! இதுதவிர, ராஜராஜ சோழனால் நிபந்தம் அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உடையது “எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்”.
முத்தரச சோழன் (பொரவச்சேரி)-சிக்கல் ஆறுமுகனின் சிலை வடிக்க சில்ப முனிவன் என்ற கலைஞனின் உதவியை நாடினான். அந்த கலைஞனும் தனது திறனை எல்லாம் காட்டி வள்ளி, தெய்வானை உடன் மயிலில் உலாவரும் ஆறுமுகனை வடிவமைத்தார். இதுபோன்ற அழகான
சிலையை மீண்டும் யாரும் வடிவமைத்த பெருமை தன்னைத் தவிர யாருக்கும் கிடைக்கக் கூடாது என எண்ணி சிற்பியின் கை கட்டைவிரலை வெட்ட உத்தரவிட்டான். கட்டைவிரல் வெட்டப்பட்ட சிற்பி எட்டுக்குடியில் அதேபோல முருகன் சிலையை வடிவமைத்துக் கொடுத்தான்.
இதைக் கேள்விப்பட்ட முத்தரச சோழன் சிற்பியின் கண்களைக் குருடாக்கினான்.சோழ மன்னனுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிற்பி, தன் மகள் உதவியுடன் மீண்டும் அதேபோன்ற சிலையை உருவாக்கினான். முருகனுக்கு கண் திறக்கும்போது மகளின் கையில் உளிபட்ட ரத்தம் கொட்டியது. அந்த ரத்தம் சிற்பியின் கண்களில் பட்டபோது, கட்டைவிரலையும் பார்வையையும் முருகன் அருளால்பெற்றான். அந்த சிற்பியின் சமாதி கோயில் ஸ்தல விருட்சமான வன்னி மரத்தடியில் உள்ளது என்பர்.
இந்தக் கோயிலில் தினமும் 6 கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. மாதாந்திர கார்த்திகை பூஜை சிறப்பாக நடைபெறும். பங்குனி 8-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு பிரம்மபுரீஸ்வரருக்கு சூரிய பூஜை நடைபெறும்போது சூரியக் கதிர்கள் பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகின்றன.
கந்த சஷ்டி விழா 8 நாள்களும், தைப்பூசத் திருவிழா 14 நாள்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
‘கண் நோயால் பாதிக்க பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் நோய் நீங்குகிறது. செவ்வாய்க்கிழமை விரதமிருந்து வழிபடுவோர் உடல் நோய்கள் நீங்கி நலத்துடன் வாழ் வார்கள். செவ்வாய் தோஷபரிகாரம் பெற்றுத் திருமண வாய்ப்பு உருவாகிறது.
வளர்பிறை சஷ்டி திதியில் விரதமிருந்தால் நல்ல புத்திரப்பேறு கிடைக்கிறது. கார்த்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்தால் 16 பேறு கிடைக்கின்றன. வியாழக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து வழிபடுவோர் குருதோஷம் நீங்கி நல்ல ஞானம், கல்விய றிவு பெற்று வாழ்வர்’ என்பது ஐதீகம்.
உற்சவர் ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 9 நாள்களுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடவாசல் வட்டத்தில் உள்ளது இத்தலம். தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் முகந்தனூர் கிராமத்தில் இருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலும் கும்பகோணம் திருவாரூர் சாலையில் காப்பணாமங்கலம் கிராமத்துக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவி லும் இத்தலம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு-94366 278531