மகப்பேறு-மணப்பேறு அருளும்- திருமயிலாடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்ளிடம் செல்லும் பேருந்தில் ஏறி புத்தூர் கடைத்தெரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் திருமயிலாடி உள்ளது.
புராணத்துடன் தொடர்புடைய பழமையான கோயில்களில் பக்தி அதிர்வுகள் அதிகம் இருக்கும். அத்தகைய தலங்களுள் ஒன்று திருமயிலாடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
திருக்கயிலையில் பார்வதி தேவியிடம் திருவிளையாடல் புரிய நினைத்த சிவபெருமான் இணையில்லாத பேரழகு வடிவானவன் நான் தான் என்று கூற உமாதேவியும் இல்லை இல்லை நானே அழகில் சிறந்தவள் என்று கூறினார் யார் அழகு என்ற விவாதம் தொடர ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட சிவபெருமான் மறைந்து போனார் பெருமானை காணாமல் தவித்த உமாதேவி தன் தவறு உணர்ந்து மயில் வடிவம் எடுத்தாள்.
கண்ணுவ மகரிஷி ஈசனை நினைத்து யோக சாதனை புரிந்த கண்ணுவாச்சிபுரம் என்ற தளத்திற்குச் சென்றாள்.அங்கே மயில் வடிவிலேயே மகேசனை துதித்தாள். அகமகிழ்ந்த அரனார் சுந்தர மகாலிங்கமாக அழகு திருவடிவுடன் அம்பிகைக்கு காட்சி அளித்தார்.
சிவனின் சுந்தரவடிவம் கண்டதேவி தனது தோகையை விரித்து ஆனந்த நடனம் புரிந்தாள். அன்று முதல் இந்தத் தலம் திருமயிலாடி என்ற பெயர் பெற்றது.
மணப்பேறு மகப்பேறு அளிக்கும் பெரும் வரப்பிரசாதமாக திகழ்கிறார் மூலவர் சுந்தரேஸ்வரர் வழிபடும் பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் இவ்வாலயம் வந்து மகேஸ்வரனுக்கு மனம் குளிர விபூதி அபிஷேகம் செய்து தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார். பின்னர் அந்த திருநீரை பிரசாதமாகப் பெற்று தங்கள் பூஜை அறையில் வைத்து வணங்க அவர்களுக்கு வாழ்வில் மேலும் பல நற்பலன்கள் கிடைக்கிறதாம்.
சிவராத்திரி அன்று சிறப்பு அர்ச்சனை ஆராதனைகளுடன் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
கடன் பிரச்சனைகளை எதிரி தொல்லை நீங்க இங்குள்ள பாலமுருகனை வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பாலமுருகனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மகிழ்கிறார்கள்.
இத்தல யோக தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபட்டால் எல்லா விதமான கிரக தோஷங்களும் நீங்குவதாக நம்பிக்கை.
இங்குள்ள பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி நாளில் பன்னீர் இலையில் பணத்தை வைத்து அதை பைரவர் பாதத்தில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் சேரும் என்கிறார்கள் கண் திருஷ்டி, பில்லி, சூனியம் அகலவும் பைரவரை வணங்குகின்றனர்.
ஆண்டுக்கு ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது மாதந்தோறும் முதல் வெள்ளிக் கிழமைகளில் கஜலட்சுமி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தேவை இருக்கலாம் அப்படி இருந்தால் நீங்களும் ஒருமுறை திருமயிலாடி சென்று தெய்வங்களை தரிசித்து வாருங்கள் உங்கள் தேவைகளை நிச்சயம் நிறைவேறச் செய்வார்கள் இங்கு அருளும் தெய்வங்கள்..
ஆலயம் இருக்கும் இடம்
மீண்டும் அடுத்த ஆலயத்தில் சந்திப்போம்..