திவ்ய தேசம்- திரு ஆதனூர்
திவ்ய தேசம்-11
வேத காலத்திலும் சரி , இப்பொழுதும் சரி ,’ அக்னி’க்கு ஒரு தனி மரியாதை கொடுப்பது உண்டு.உலகில் மிகவும் புனிதமானது , கலப்படம் இல்லாதது. சுத்தமானது என்று நம்புகிற அக்னி பகவானே சாபத்திற்குள்ளாகி அவதிப்பட்ட பொழுது ‘ பெருமாள் ‘ தன் கருணையால் அந்த சாபத்தைப் போக்கியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமான செய்திதான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பஞ்சபூதங்களை விட ஸ்ரீமந் நாராயணன் தான் சகலவிதமான சக்தியைப் பெற்றவன் , பகவானை அணுகினால் நாம் முக்தி அடையலாம்.அவன் எல்லாவற்றுக்கும் மேலானவன் என்பது புரிகிறது.
சுவாமி மலைக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்தில் கொள்ளிடத்திற்கும் காவிரியாற்றுக்கும் இடையே உள்ளது தான் திருஆதனூர் கோயில்.
- மூன்று நிலை இராஜ கோபுரம்
- இரண்டு பிராகாரங்கள் கருவறையில் ஸ்ரீ ஆண்டளக் குமையன் புஜங்க சயனத் திருக்கோலம்.
- தலையின் கீழே மரக்கால்.இடது கையில் ஓலை எழுத்தாணி.
- காலடியில் காமதேனு திருமங்கையாழ்வார்.
- தாயார் ஸ்ரீரங்க நாயகியார்.
- உற்சவர் அழகிய மணவாளன்.
- தீர்த்தம் சூர்ய புஷ்கரணி கோயிலுக்கு தெற்கே தாமரைத்தடாகம்.
- தலவிருட்சம் பாடலிமரம்.
- பிரணவ விமானத் தோற்றம்.
“பார்க்கவ க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோயில் “திரு ஆதி ரங்கேஸ்வரம்” என்று புராணங்களில் குறிப்பிடுவதால் இந்த கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பே கட்டப்பட்டது.திருவரங்க கோயிலில் எத்தனைச் சிறப்புகள் உள்ளதோ – அத்தனைச் சிறப்புக்களும் இந்தக் கோயிலுக்கு உண்டு.
ஒரு சமயம் காமதேனுவுக்கு பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தேவலோகத்தில் பெருமாளைச் சேவிக்க பல தடவை முயன்றும் தோற்றுப் போனதால் மனம் நொந்து அமர்ந்துவிட்டது. அப்போது ‘ பகவானைச் சேவிக்க வேண்டுமென்றால் பூலோகத்திற்குச் சென்று திருஆதனூர் கோயிலில் பிரார்த்தனை செய்தால் பகவான் நிச்சயம் தரிசனம் கொடுப்பார் ‘ என்று அசரீரி வாக்கு கேட்டது.உடனே காமதேனு இந்த தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தது.பகவானும் காமதேனுக்கு காட்சி தந்தார்.
ஒருசமயம் தன்னை விட்டால் சுத்தமானவன் வேறு யாருமில்லை என்ற கர்வத்தில் அக்னி தேவன் அளவுக்கு அதிகமாகவே கொட்டம் அடித்தான் . இதைக் கண்டு ‘மாமுனிவர் துர்வாசர் ‘ உன் கொட்டம் அடங்கிப் போகும்.இனி உனக்கு எரிக்கின்ற சக்தி இல்லை ‘ என்று சாபம் இட்டார்.இதற்குப் பிறகுதான் அக்கினி தேவன் தன் தவற்றை உணர்ந்து சாப விமோசனம் கேட்க காமதேனுவுக்கு காட்சியளித்த திரு ஆதனூர் சென்று பெருமாளை வழிபட்டு வந்தால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம் என்று துர்வாசர் சொன்னார்.அக்னி தேவனும் இங்கு வந்து பெருமாளை வேண்டியதின் பின்னர் அவரது சாபம் விலகியது.
அதனால் தான் என்னவோ இன்றைக்கும் இறைவனது திருவடிக்கருகே அக்னி பகவானின் உருவம் காணப்படுகிறது . இறைவன் பிருகு முனிவருக்கும் அருள் பாலித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
பரிகாரம்
அக்னியால் எந்தவித ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் விபத்து இல்லாத பெருவாழ்க்கை வாழவும் தொழிற்சாலைகளில் மின்சாரத்தினால் பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றவும் , பெட்ரோல் , டீசல் , மின்சாரம் போன்றவற்றால் வாழ்க்கை வீணாகப் போகாமல் இருக்கவும் , எதிரிகளினால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும் ஜாதகத்தில் ‘ செவ்வாய் தோஷத்தினால் திருமண வாழ்க்கை பாதிக்காமல் தடுக்கவும் இந்த ஸ்தலத்திற்கு வந்து எம்பெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்து தாயாருக்கு புடவை சாற்றி நெய் விளக்கு ஏற்றினால் எந்தவிதக் கெடுதலும் ஏற்படாது என்பது உண்மை.
கோவில் இருப்பிடம்