நாக தோஷம் போக்கும் -ஸ்ரீ நாகேஸ்வரமுடையார்
குருநாதர் ஒருவர் தன் சீடர்களுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் போய்க்கொண்டிருந்தார். வழியில் லட்சக்கணக்கான எறும்புகள் ஒரு பெரிய பாம்பை கடித்து குதறிக் கொண்டிருந்தன. சமாளிக்க வழியின்றி குற்றுயிரும் குலையுயிறுமாய் போராடிக் கொண்டிருந்தது பாம்பு.
சீடர்கள் பதறினர். குருவின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. வினாடிக்கும் குறைவான நேரம் கண்களை மூடி தியானித்த குருநாதருக்கு உண்மை விளங்கியது. உடனே அவர் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து பாம்பின் மீது தெளித்து’ம்’ என்ற குரல் கொடுத்தார். அடுத்த வினாடியில் எரும்புகள் அனைத்தும் விலகி ஓடின. பாம்பு உயிரை துறந்து நற்கதி பெற்றது.
குருவும் சீடர்களும் நடக்கத் தொடங்கினர் அப்போது சீடர் ஒருவர்” குருதேவா எறும்புகள் பாம்பை கடித்து குதறிய காட்சியை பார்க்கும் போது நாங்கள் கலங்கினோம் சரி; ஆனால் உங்கள் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்தது அதுதான் புரியவில்லை” என்று ….இழுத்தார்
அவரது மனநிலையை புரிந்து கொண்ட குரு. “சிலர் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் தெரிந்தே தீவினைகள் இறங்கி விடுகின்றனர். அதன் பலன்தான் இது” என கதை சொல்லத் தொடங்கினார்.
“பிருந்தாவனத்தில் இருக்கும் கண்ணன் கோவிலில் மகந்த் என்பவர் தலைமை பூசாரியாக இருந்தார். மக்களெல்லாம் அவரை நம்பி தர்ம காரியங்களுக்கு நிறைய செல்வங்களை ஒப்படைத்தனர். ஆனால் அந்த பூசாரியோ அந்த செல்வங்களை தனக்கும் தன் குடும்பத்திற்கும் உபயோகப்படுத்தி சுகபோகமாக வாழ துவங்கினார். தெய்வ காரியங்களுக்கு உரியதை தன் கைப்படுத்தி கொண்ட பூசாரியே பாம்பாக வந்து பிறந்தார்.அவரிடம் செல்வம் தந்தவர்கள் எறும்பாக பிறந்து பாம்பாக இருந்த பூசாரியை கடித்து குதறினார். சீடனே ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் கன்று தன் தாயிடம் எப்படி மிகச் சரியாகச் சென்று சேர்கிறதோ, அது போல அவரவர் செய்த நல்வினை தீவினை அவரை வந்தடையும் நல்லதே செய்தால் நன்மையே வந்தடையும்” என்றார் குருநாதர்.
பின் விளைவுகளின் காரணத்தை அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை திருத்தி அவரவர் அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வழிசெய்யும் அற்புதமானதொரு திருத்தலம் தான் சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் நாகேஸ்வரமுடையார் திருக்கோவில்.
இறைவன் :ஸ்ரீ நாகேஸ்வரமுடையார்
இறைவி: பொன்னாகர வல்லியம்மை
விநாயகர்: மாணிக்க விநாயகர்
விசேஷமூர்த்தி: சனி, நீலாதேவி, ராகுபகவான்
புராணப்பெயர் : நாகளேச்சுரம்.
ஊர்: சீர்காழி
தலவிருட்சம் : வன்னிமரம்.
தீர்த்தம் : கழுமலநதி தீர்த்தம்
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான இது அப்பரால் பதிகம் பாடப்பட்டிருந்தாலும் தோவார வைப்புத்தலமாகவே விளங்கி வருகின்றது . மூர்த்தி , தலம் , தீர்த்தம் என முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் சீர்காழி.
நாகேஸ்வரமுடையார் திருக்கோவில் . திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையில் 71 – ஆவது பதிகத்தில் மூன்றாவது திருத்தாண்டகத்தில் ‘ ஈச்சரம் ‘ என வரும் தலங்களை வகுத்து அருளிச் செய்துள்ளார் .
நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்றேத்தி இறைவன் உறைசுரம் பலவும் இயம்புவோமே !
-அப்பர்
தலவரலாறு:
ராகுவும் கேதுவும் அகரவடிவமாக இருந்த தோஷம் நீங்கத் தவமிருந்து இறைவனை வழிபட்டு கிரகப்பதவியை அடைந்தனர். அவர்கள் பூஜித்த தலம் சீர்காழியிலுள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலாகும் .
தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது அமிர்தம் வெளிப்பட்டது . நரை , திரை , மூப்பு சாக்காடு , பிணி முதலி யவற்றை நீக்கும் மருந்தாக அமிர்தம் விளங்கியது . அதை உண்ண தேவர்களும் அசுரர்களும் போட்டியிட்டனர் . அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க எண்ணிய மகாவிஷ்ணு மோகினி வடி வெடுத்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு முதலில் வழங்கினார் . ஆனால் ஒரு அசுரன் மட்டும் தேவர் வடிவம்கொண்டு சூரிய சந்திரர்களுக்கு நடுவே நின்று அமிர்தத்தை உண்டுவிட்டான் .
இதனையறிந்த சூரிய- சந்திரர்கள் மகாவிஷ்ணுவிடம் குறிப்பால் உணர்த்த , அவர் தன் கையிலிருந்த கரண்டியால் அசுரனை ஓங்கி அடித்தார் . அதனால் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டது . தலையானது சிரபுரம் என்னும் தற்போதைய சீர்காழியிலும் , உடல் மற்றொரு இடத்திலும் விழுந்தது . தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் பாம்புகளாக மாறின .
இந்த அரவங்கள் சிவபெருமானை தியானித்து காற்றை மட்டும் உணவாகக்கொண்டு கடுந்தவம் புரிய , இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார் .
அப்போது அந்த அரவங்கள் , தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய- சந்திரர்களை விழுங்கும் சக்தியையும் , அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் அருளுமாறு வேண்டின சிவபெருமான் சூரியன் , சந்திரன் இருவரும் உலக உயிர்களுக்கு இன்றியமையாதவர்கள் என்றுகூறி அவர்களை அமாவாசை- பெளர்ணமி கிரகணநாட்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்த வரமளித்தார் .
மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகுவும் , பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு கேதுவும் காட்சியளித்தனர் . அத்துடன் அதுவரை இருந்த ஏழு கிரகங்களு இவர்களைச் சேர்த்து ஒன்பது கிரகங்களாக விளங்கும்படி ( நவகிரகங்கள் ) வரமளித்தார் . மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்ட அசுரனது தலை விழுந்த இடம் சீர்காழி . எனவே இத்தலம் சிரபுரம் என்றும் , ஆதி ராகு , ஆதி கேது தலமாக நாகளேச்சுரம் என்றும் , தற்போது சீர்காழி நாகேஸ்வரமுடையார் என்றும் சிறப்புடன் திருக்கோவில் விளங்கிவருகிறது .
Google Map: