பொங்கல் வைக்க சிறந்த நேரம்-2022
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் , தை மாதம் 1 – ஆம் தேதி 14-1-2022 வெள்ளிக்கிழமை ,வளர்பிறை துவாதசி திதி , ரோகிணி நட்சத்திரம்கூடிய சுப தினத்தில் , பகல் 2.29 மணிக்கு ரிஷப லக்னத்தில் சூரியன் மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார்.இதனை முன்னிட்டு காலை 6.00 மணிக்குமேல் 9.00 மணிக்குள் சுக்கிரன் , புதன் , சந்திர ஓரையில் அல்லது பகல் 1.00 மணிக்குமேல் 3.00 மணிக்குள் சுக்கிரன் , புதன் ஓரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.
புதுப் பானையில் மஞ்சள் , குங்குமம் வைத்து , மஞ்சள் கொடி கொத்தையெடுத்து கங்கணமாகத் தயாரித்து பானையை சுற்றிக் கட்டி , அவரவர் சம்பிரதாய முறைப்படி பொங்கல் வைக்கலாம்.
மேற்கண்ட நேரத்தில் குலதெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து , பொங்கி வரும்போது ‘ பொங்கலோ பொங்கல் ‘ என்று மூன்றுமுறை கூவி சூரியனை வணங்குவது நல்லது.
கரும்பு , மஞ்சள் செடி கொத்து , சிவப்புப் பூசணிக் கீற்று , கிழங்கு வகை , மொச்சை , அவரை , பழ வகைகள் வைத்து நிவேதனம் செய்து , மலர்களை எடுத்துத் தூவி வணங்கி , பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கு பொங்கலை வாழையிலையில் வைத்து உண்ணவைப்பது , பிறகு நம்முடைய மூதாதையர்களை நினைத்து காகத்துக்கு பொங்கல் வைப்பது உத்தமம்.
மாட்டுப் பொங்கல்
மறுநாள் 15-1 -2022 சனிக்கிழமையன்று காலை 7.00 மணிக்குமேல் 8.00 மணிக்குள் குரு ஓரையில் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து , மாட்டுக் கொட்டைகளை சுத்தம் செய்து , காலை 10.30 மணிக்குமேல் 12.00 மணிக்குள் சுக்கிரன் , புதன் ஓரையில் கோபூஜை செய்து நைவேத்தியம் படைத்து , பிறகு மாடுகளை வணங்கிவிட்டு வாழையிலையில் பொங்கல் வைத்து அவற்றுக்கு உண்ணக் கொடுப்பது நல்லது.அவரவர் சம்பிரதாய முறைப்படி மாடுகளை அலங்கரித்து மாலை 5.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் சுக்கிரன் , புதன் ஓரையில் மங்கள வாத்தியத்துடன் மாடுகளை தெருவலம் அழைத்து அல்லது ஆலயத்தில் பூஜை செய்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பழம் பட்சணம் மற்றும் காணிக்கைகளைத் தந்து கௌரவிக்க வேண்டும்.
காணும் பொங்கல்
மறுநாள் காணும் பொங்கலாகும் அன்றைய நாள் முழுவதும் உற்றார் மற்றும் நண்பர் களுடன் சேர்ந்து உறவாடி உற்சாகமாக பொழுதைக் கழிக்கலாம் . பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் . ( தற்போது கொரோனா காலமென்பதால் அரசு வழிகாட்டுதல்படி பாதுகாப்புடன் இருக்கவும் ) . மற்றவர்களுக்குப் பொங்கல் அன்பளிப்பு கொடுப்பது , பரிசுப் பொருட்கள் கொடுப்பதன் மூலம் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.