ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- கும்ப ராசி
சனிபகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே…!! உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! வரும் வருடம் உங்களுக்கு எப்படிப்பட்ட மாற்றத்தை வழங்க போகிறது? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே மனதில் தெளிவும் ,உடல் நலத்தில் தெம்பும் பிறக்கும். அதே சமயம் வேண்டாத தர்க்கமும் வீணான ரோஷமும் தவிர்த்தால் தொடர்ச்சியாக நல்லது நடக்கும்.
வேலை
வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் கிட்டும். எல்லாம் தெரியும் என்கிற நினைப்பும் எடுத்தோம் ,கவிழ்த்தோம் என்று செயல்படும் எண்ணமும் வேண்டவே வேண்டாம். எந்த சமயத்திலும் பிற தவறை பெரிது படுத்தி பேசினால் அவமானம் தான் மிஞ்சும். அவசியமான்னு யோசியுங்கள். மூன்றாம் நபர் விஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைப்பதும், உங்கள் வேலைகளில் பிறர் தலையீட்டை அனுமதிப்பதும் கூடாது. பணி காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு வரக்கூடும். அந்த சமயத்தில் செல்லும் நாட்டுக்கு உரிய சட்டதிட்டங்களை மீறாமல் கடைப்பிடியுங்கள். உங்கள் திறமைக்கு உரிய பதவியும், புகழும் தேடிவரும் காலகட்டம் அந்த சமயத்தில் பணிவும் உடன் வந்து விட்டால் நன்மைகள் நிரந்தரமாக நிலைக்கும்.
குடும்பம்
குடும்பத்தில் குதூகலம் குடிபுகும். உறவுகளிடையே உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு உயரும். வாழ்க்கைத் துணை கூட இருந்த சுனக்கம் விலகி, நெருக்கமும், நிம்மதியும் உருவாகும். வாரிசுகள் வாழ்க்கையில் எதிர்பார்த்த உயர்வுகள் நிச்சயம் கிட்டும். ஆடை, ஆபரண பொருள் சேரும். சிலருக்கு வீடு புதுப்பித்தல், வாகன மாற்றம் செய்ய வாய்ப்பு உண்டு. விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை குறை இல்லாமல் நிறைவேற்றினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் சேரும். இந்த சமயத்தில் இன் முகமும் இனிய வார்த்தைகளும் இருந்தால் மட்டுமே எல்லா நன்மைகளும் நிலைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்
தொழில்
செய்யும் தொழிலில் செழிப்பு மலரும் .கூட்டத்தொழிலில் எதிர்பார்த்த அரசு அனுமதி நேரடி முயற்சிகளால் கிடைக்கும். புதிய முதலீடுகளில் முழுமையாக யோசித்து செயல்பட்டால் முன்னேற்றம் நிச்சயம். கொடுக்கல் வாங்கலை முறையாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அரசு, அரசியல் துறையினர் அமைதியான செயல்களால் ஆதாயம் பெறவேண்டிய காலகட்டம். இந்த சமயத்தில் பொறுமை தான் எதிர்காலத்து பெருமை என்பதை உணர்ந்த செயல்பட வேண்டும். மேல் அதிகாரிகளுடனான பேச்சில் நிதானம் அவசியம். பிறரை பற்றிய விளையாட்டு பேச்சு கூட விபரீதமான பலனை தந்து விடலாம், தவிர்த்து விடுங்கள்.
கலை, படைப்பு துறையினருக்கு படிப்படியாக வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம். பெரிய மனிதர்கள் ஆதரவும், அதனால் நன்மையும் ஏற்படும். உடன் இருக்கும் சிலருடைய வீண் புகழ்ச்சிக்கு மயங்கி ஆணவத்தை சுமந்து கொண்டு அலைவீர்கள் என்றால் அடிசறுக்கிடலாம் உணர்ந்து செயல்படுவது உத்தமம்.
மாணவர்கள் ஏற்றமும், மாற்றமும் பெறக்கூடிய காலகட்டம். பெற்றவர்கள் வழிகாட்டலை புறந்தல்லாமல் கேட்பது அவசியம். அன்றைய பாடங்களை அன்றன்றே படித்து விடுவது நல்லது. எதிர்பார்த்த கல்வி உதவிகள் நிச்சயம் கிட்டும்.
உடல் நலம்
வயிறு, கழிவு உறுப்பு உபாதை,பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு ஆகிய பிரச்சனைகள் இந்த வருடத்தில் உங்களுக்கு தலை தூக்கலாம். ஆகையால் உடல் நலத்தை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள்.
ஆலய வழிபாடு
இந்த வருடத்தில் ஒருமுறை திருவனந்தபுரம் அல்லது அடையாறு அனந்த பத்மநாத சுவாமி கோவிலுக்கு சென்று வணங்குங்கள். மாதம்தோறும் செவ்வாய்க்கிழமையில் பக்கத்தில் இருக்கும் துர்க்கையை வழிபடுங்கள். ஏழை குழந்தைகள் கல்விக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை செழிக்கும்.
மொத்தத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு 60 சதவீத பலன்களை நல்கும் புத்தாண்டாக அமையும் மேலும் ஜென்ம சனி விலகுவதாலும், குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதாலும், வருட கடைசியில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தரும்.