மாசி மகம்
வரும் பிபர்வரி மாதம் -24ம் தேதி சனி கிழமை அன்று மாசி மகம்.இந்த நன்னாளில் வீட்டில் தீப விளக்குகள் ஏற்றி வைத்து கும்பேஸ்வரரையும்,மங்களாம்பிகையையும் மனதார தியானித்து ,வில்வம் சமர்ப்பித்து ,உரிய துதி பாடல்கள் பாடி வழிபடுவது விசேஷம்.
இதனால் தடைகள் நீங்கி மங்கல காரியங்கள் கைகூடிவரும்.சகல சங்கடங்களும் நீங்கி இல்லத்தில் சந்தோசம் குடிகொள்ளும்.
கீழே கொடுக்க பட்டுள்ள துதி பாடலை படிப்பதால் சகல பீடைகளும் நீங்கும்.சூரியன் குரு முதலான கிரக தோஷங்கள் நீங்கும்.புத்ர சம்பத்து,ஆரோக்கியம் உண்டாகும்.வீட்டில் எப்போதும் சிவகடாட்சம் நிறைந்திருக்கும்.
ஆதி கும்பேஸ்வரரே போற்றி போற்றி !
அமிர்த வடிவே போற்றி !காரணக் காரணரே போற்றி !மங்கல பூரணரே போற்றி
ஆதி கும்பேஸ்வரா போற்றி போற்றி !
பகைக்குப் பகையே பிணிக்கு மருந்தே நன்மைசெய் விருந்தே
அணி சர்ப்பம் அழகே மனக்கோயில் கொண்டவா சகாமகுடனே விபூதி ரூபணே
ஆதி கும்பேஸ்வரா போற்றி போற்றி !
நாகாபுரம் அணிந்தவா சாந்த ஸ்வரூபியே-அடியார்
மனக்கோயில் கொண்டவா
சடாமகுடதாரியே விபூதி ரூபணே
ஆதி கும்பேஸ்வரா போற்றி போற்றி !
வேதங்கள் திருமேனி ரவி -மதியும்
சுடர்கண்கள் வேள்வி ரூப நாயகன் மால் போற்றும் ஈஸ்வரா
ஆதி கும்பேஸ்வரா மகாலிங்கமே போற்றி போற்றி !
காத்யாயினிதேவிக்கு வேண்டும் வரம் தந்தவர்
ஆதி அம்மைக்கு ஒரு பாகம் கொடுத்தவர்
ஆகமம் செய்தவர் காலரூபம் ஆனவர்
பகலவன் போற்றிட நம்முள்ளே ஒளிர்பவர்
மகிமை போற்றி மகாலிங்கமே போற்றி !
ஒன்றாகும் உருவம் பலவாகும்
பிரளயமும் செயலாகும் தண்ணருளால்
செல்வங்கள் நமக்காகும் செந்தழல்
நெற்றிக் கண்ணாகும் கும்ப நாதனே
மகாலிங்கமே போற்றி போற்றி!
மாயை ஆனவன் கும்ப ரூபம் கொண்டவன்
மனக்குறை தீர்ப்பவன் மனதைக் கவர்பவன்
உலகுக்கு காரணன்
ஆதி கும்ப நாயகா மகாலிங்கமே போற்றி போற்றி!
ஆதிசேஷன் போற்றிய ஆதிமூல நாயகன்
அயனரி வணங்கிடும் அரவம் அணி அண்ணலே
மகாலிங்கமே போற்றி போற்றி!
செவ்வண்ணம் கொண்டவன். பொன்னாபரணம் அணிந்தவன்.
தண்ணொளி மதி சூடியே புண்ணியம் தரும் இறைவனே
மகாலிங்கமே போற்றி போற்றி!
படைத்தலும் காத்தலும் அழித்தலும் நின் செயலே
உயிர் வித்துக்கள் உன் வடிவே
வேதவேதாந்த திருவுருவே மகாலிங்கமே போற்றி போற்றி!
அறுவகை பகை வென்றிட மனம் கொண்ட ஈசனே
வெய்யோனும் சேயோனும் மலர்ந்திட
மனமுவந்த மகாலிங்கமே போற்றி போற்றி!
முனிதொழும் சிவமே சமர்புரி இறையே
அடியவர் வாழ்வே தோணியே திருவே சங்கடம் அழிப்பாய்
கும்பநாதனே மகாலிங்கமே போற்றி போற்றி
அதிரலம் ஆகமப்பொருளே
நவநிதி பதயே காலகாலமீன சித்தர் தலைவனே
சிவபிரானே நித்தம் எமைக் காப்பாய் கும்பநாதனே
மகாலிங்கமே போற்றி போற்றி !
மங்கலம் ஆனாய் போற்றி
மங்கல வரம் அருள்வாய் போற்றி
மங்களாம்பிகை வணங்கிடும் மங்கலநாதனே மகேசனே
மகாலிங்கமே போற்றி போற்றீ
ஒன்பது கோள்களும்
ஓங்குயர் தேவரும் காமதேனுவும் பதம் போற்றி வணங்கிடும்
ஐந்துமுக தேவனே மகாலிங்கமே போற்றி போற்றி!
தீர்த்தமும் நீயே
திருவருளும் நீயே
வரமும் நீயே வரம் தருபவன் நீயே
மதியணி சூலினி மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை பதியே
மகாலிங்கமே போற்றி போற்றி!
சூலபாணியே உலகநாயகா மலர்மாலை அணிந்தவா
கருணாகரணே கருணைக் கடலே
தண்ணருள் நிறைந்தவா மகாலிங்கமே போற்றி போற்றி !
அகோர நாதனே போற்றி
வாமதேவனே போற்றி
சத்யோஜாதனே போற்றி
நீலகண்டனே செங்கண்ணனே மகாலிங்கமே போற்றி போற்றி!
பிறைசூடியே போற்றி
அமைதியின் அழகே போற்றி
கால உருவே காலகாலனே
ருத்ரதேவனே நீலகண்டனே
மகாலிங்கமே போற்றி போற்றி!
உள்ளம் உறையும் இறைவா போற்றி
பொல்லாதவர்க்குப் பகையே போற்றி
மறைகளின் வாழ்வே போற்றி
மறையுள் பொருளே போற்றி
மகாலிங்கமே போற்றி போற்றி !
பிணிக்கு மருந்தே சிவமே செல்வபதியே சுகமே
உலகே உலகுக்கு நிழயில காமனைத் தகித்த கோவே
மகாலிங்கமே போற்றி போற்றி!
பிறைசூடியே பகை வென்றவா
தீயது அழிக்கும் வேயுறு பங்கனே
ஒளிமிகு சுடரே கனகத் திரளே
காவல்தெய்வமே கும்பநாதனே மகாலிங்கமே போற்றி போற்றி !
மாதங்களில் மகத்தானது மாசி. மாசி மாதத்தில் குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபட்டு வந்தால் எல்லாவிதமான தோஷங்களும் பாவங்களும் விலகி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். மாசி மாதம் முழுவதும் முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் சகல சம்பத்துகளும் கைகூடும். தடைகள் நீங்கும் என்பார்கள் ஆகவே மாசி மாதம் அனுதினமும் காலையில் எழுந்து நீராடி வீட்டில் பூஜை செய்வதோடு இறை சிந்தனையுடன் கோவிலுக்கு சென்று தரிசித்து வழிபட்டு வர வேண்டும்.
குழந்தை பேறு உண்டாகும்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மாதம் விரதம் இருந்து பக்தியுடன் கடவுளை தரிசித்து வந்தால் குழந்தை பெறும் உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.
கல்வியில் சிறந்து விளங்கலாம்
மாசி மாதம் முழுவதும் சரஸ்வதி அந்தாதி போன்ற துதி பாடல்களை பாடி கலைமகளை வண்ண மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால், கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் கல்வியிலும் ஞானத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
பாவங்கள் நீங்கும் ;தோஷங்கள் விலகும்
ஜோதிட ரீதியாக கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சிம்மத்தில் சந்திரனும் குரு பகவானும் இணைந்து இருந்தால் அது மகாமகம் என்று போற்றப்படுகிறது.இந்த மகாமகம் 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் புண்ணிய தினமாகும். வருடம் தோறும் மாசியில் வருவது மாசி மகமாகும். இந்த புண்ணிய தினத்தில் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள், தோஷங்கள் நோய்கள் அனைத்தும் நீங்கி அவர்கள் ஞானமும் ஆரோக்கியமும் பெறுவார்கள்.
நீராடும் முறை
- மாசிமகம் நாளில் நாம் விழித்து எழும்போது கும்பேஸ்வரரை மனதளவில் பிரார்த்திக்க வேண்டும்.
- கும்பேஸ்வரர் இருக்கும் திசை நோக்கி வணங்கியபடி மகாமக குளத்தில் மூழ்கி எழுவது நன்று. நீராடலில் முழு பலனையும் பெற குளத்தில் உள்ள தீர்த்த கிணறுகளையும் நோக்கி வணங்க வேண்டும் என்பார்கள்.
- நீராடும்போது மனதில் சுவாமியை தவிர வேறு சிந்தனைகள் கூடாது. முழுமையாக நீராட இயலாத நிலையில் சிறிதளவு நீரை உள்ளங்கையில் எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.
- மாசி மகத்திருநாளில் மகாமக குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆகிய மூன்று நீர் நிலைகளிலும் நீராடுதல் சிறப்பு என்பர்.
- மகாமக குளத்தில் முதல் முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்க பேரு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் ஈடு இணையில்லாத புண்ணியம் கிடைக்கும்.
மாசி மகத்தில் தீபம் ஏற்றி தேவேந்திரன் பெற்ற பலன்
தேவேந்திரன் மாசி மகம் நன்னாளில் துங்கபத்திரையில் நீராடி தூய விதி பெற்றான் சாபம் நீக்கி பாவம் போக்கிய சிவபெருமானை போற்றி தீபம் ஏற்றினான் என கந்தபுராணம் எடுத்துரைக்கிறது
மகாமக தீர்த்தங்களும் பலன்களும்
இந்திர தீர்த்தம்-வானுலக வாழ்வு அளிக்கும்.
அக்னி தீர்த்தம்-பிரம்மஹத்தி நீங்கும்.
யம தீர்த்தம் – யம பயம் இல்லை.
நிருதி தீர்த்தம்- பூத, பிரேத, பைசாச குற்றம் நீங்கும்.
வருண தீர்த்தம்- ஆயுள் விருத்தி உண்டாகும்.
வாயு தீர்த்தம்- பிணிகள் அகலும்.
குபேர தீர்த்தம்- சகல செல்வங்களும் உண்டாகும்.
ஈசான தீர்த்தம்- சிவனடி சேர்க்கும்.
பிரம்ம தீர்த்தம்-பிதிர்களை கரையேற்றும்.
கங்கை தீர்த்தம்- கயிலை பதவி அளிக்கும்.
யமுனை தீர்த்தம்- பொன்விருத்தி உண்டாகும்.
கோதாவரி தீர்த்தம்- இஷ்ட சித்தி உண்டாகும்.
நருமதை தீர்த்தம்- திடகாத்திரம் உண்டாகும்.
சரஸ்வதி தீர்த்தம்- ஞானம் உண்டாகும்.
காவிரி தீர்த்தம்-புருஷார்த்தங்களை நல்கும்.
குமரி தீர்த்தம்-அசுவே மத பலன்களை கொடுக்கும்.
பயோனடி தீர்த்தம்-கோலாகலம் அளிக்கும்.
சரயு தீர்த்தம்-மனக்கவலை தீரும்.
நாக தீர்த்தம்-நாகதோஷ நிவர்த்தி
கன்னிய தீர்த்தம்-திருமண தடை நீங்கும்.