ஆயுள் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத தலம் கூத்தம்பூண்டி மார்க்கண்டேஸ்வரர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-மூலனூர் செல்லும் நெடுஞ்சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தம்பூண்டி திருத்தலம்.
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும் ஆனால் தற்போதைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலவித நோய்களால் ஆட்பட்டு அது பலருக்கும் நிறாசயாகத்தான் இருக்கிறது அப்பேர்ப்பட்ட அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரனார் எழுந்தருளியிருக்கும் அற்புதத் தலம் கூத்தம்பூண்டி.
கூத்தன் என்பது சதா திரு நடனம் ஆடுகின்ற நடராஜரை குறிப்பிடும் பெயர் .பூண்டி என்றால் பாய்ந்து செல்லும் நதிப் பிரவாகம் காலம் காலமாக பாய்ந்து மண்ணை பொன்னாக்கி நிற்கும் அண்டமாநதிக்கரையில் உலகை கட்டிக் காக்கும் பரம்பொருள் கூத்தனார் எழுந்தருளி திருநடனம் புரிந்தார் என்பது தல புராணம் சொல்லும் தீஞ்சுவை செய்தி. அதன்காரணமாக இத்தலத்திற்கு கூத்தன்பூண்டி என்னும் பெயர் ஏற்பட்டது. நாளடைவில் மருவி கூத்தம்பூண்டி என்று அழைக்கப்படுகிறது.
மார்க்கண்டேயன் இத்தலத்து மகேசனை செம்மயில் கொன்றை என்ற மலர் வனத்தில் தரிசித்து மகிழ்ந்தாக தல புராணம் உரைக்கிறது. எனவே இத்தல ஈசன் மார்க்கண்டேஸ்வரர் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். சிற்ப சாஸ்திர அமைப்பின்படி இத்தல மூலவர் ஆவுடை மீதமர்ந்த மூர்த்தியாக ,கிரியா லிங்கம் என்கிற வடிவில் உள்ளார்.
ஜாதக ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ ஆயுள் தோஷம் உள்ளவர்கள் நம்பிக்கையோடு இங்குள்ள மண்டபத்தில் ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம் ஆகியவற்றை செய்து பலன் பெறுகின்றனர். மேலும் 60 வயது அடைந்தவர்கள் சஷ்டியப்தபூர்த்தி யாகமும்,70 வயதை எட்டியவர்கள் பீமரதசாந்தி யாகமும், 80 வயதை தொட்டவர்கள் சதாபிஷேகமும் உறவினர்கள், நண்பர்கள் சூழ நடத்தி மகிழ்கின்றனர்.
உத்தராயண காலமான மாசி மாதத்தில் ஒரு நாள் சூரியனின் கிரணங்கள் பொன்னிறக் கற்றைகளாய் மூலவர் மேல் படர்வது கண்கொள்ளாக் காட்சி
சிரசுப்பூ உத்தரவு கேட்டல் என்பது காலம் காலமாக இங்கு நிலவிவரும் வழக்கமாக உள்ளது. சுபகாரியம் ஒன்றை இல்லத்தில் நடத்துவதற்கு முன்னோட்டமாக தலவிருட்சமான செம்மயில் கொன்றை ஒன்றை ஆத்மார்த்தமாக மூலவரின் சிரசில் உச்சியில் வைத்து விட்டு தமது கோரிக்கையை உள்ளம் உருகி பரம்பொருளிடம் விண்ணப்பித்து நிற்பர்.
அந்த வேலையில் பூவானது ஈசனின் வலப்பக்கமாக விழுந்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடிவிடும் என்பது ஐதீகம்.
அன்னாபிஷேக பெருவிழாவில் பிரசாதம் வாங்கி உண்டால் சந்தான பாக்கியம் கிட்டுகிறதாம் பிரதோஷ வழிபாட்டின் போது வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேறியதற்கு நேர்த்திக்கடனாக ஒரு பிரதோஷ வழிபாட்டை நடத்தி மகிழ்வதையும் பக்தர்கள் இங்கு வழக்கமாக கொண்டுள்ளனர்.
தேவ கோட்டத்தில் தெற்கு வடக்கு என இரு பக்கமும் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் உள்ளன இதற்கு காரணம் நம் மனதை நோக வைக்கும் சரித்திர நிகழ்வாக கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுத்து வந்த அன்னியர் தாம் சென்ற பாதையின் அருகே இருந்த பல கோயில்களை சிதைத்தனர் அப்படி சேதம் செய்யப்பட்ட ஆலயங்களில் இத்தலமும் ஒன்று. இதற்கு சான்றாக சுவாமி சன்னிதியின் வெளிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் கட்டுமானம் வைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது.
காரண ஆகமப்படி தினமும் நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமிக்கு இடப்பக்கமாக ஆனந்தவல்லி அம்பாள் சன்னதி கலைநயத்தில் கற்றளியாக அமைந்துள்ளது. அம்பாள் இருகரம் கொண்டு திகழ்கிறாள். அம்பாள் விமானம் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது.
அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றி புடவை, திருமாங்கல்யம், மல்லிகை மாலை சாத்தி வணங்கினால் மாங்கல்ய யோகம் கைமேல் கிட்டுகிறதெனபலன் அடைந்த பலர் பெருமிதமாகப் பேசுவதைக் கேட்க முடிகிறது.
வடக்கு சுற்றில் தீர்த்தக் கிணறு உள்ளது. உள்சுற்று இரண்டிலும் வாச மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் உள்ளது. வடக்கு, தெற்கு பக்கமும் வாசல்கள் உள்ளது.
தலம், மூர்த்தி ,தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளும் நிறைந்த இத்தலத்தில் சித்திரை தமிழ்புத்தாண்டு ,பௌர்ணமிதோறும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை, ஆடிப்பூரம், அம்பாளுக்கு வளைகாப்பு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி,
கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம்,மார்கழி 30நாட்கள் திருப்பள்ளியெழுச்சி ,தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பிரதோஷ வழிபாடு, கார்த்திகை மகா தீபம், ஆவணியில் வருஷாபிஷேகம், ஆகிய உற்சவங்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பெருமைகள் பல கொண்டு திகழும் கூத்தம்பூண்டி மார்க்கண்டேஸ்வரர் கோவிலுக்கு நீங்களும் ஒரு முறை குடும்பத்தோடு சென்று தெய்வங்களை தரிசித்து கோலாகலமாக வாழ்வு பேறலாமே!
ஆலயம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள கீழ உள்ள லிங்கை தொடவும்