ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- தனுசு ராசி
குரு பகவானின் பரிபூரண அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!… உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்….
வேலை
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்க கூடிய ஆண்டாக இந்த 2025 உங்களுக்கு அமையும். அதேசமயம் எல்லாம் தெரியும் என்கிற நினைப்பும், ஏனோதானோ செயல்களும் கூடவே கூடாது.. வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். இத்தனை காலம் ஏக்கமாக இருந்த ஏற்றமும் மாற்றமும் கைகூடிவரும். இந்த சமயத்தில் வேண்டாத வார்த்தைகளும், தேவையற்ற ரோஷமும் ஏற்றத்தை ஏமாற்றம் ஆக்கிவிடலாம் .உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். அயல் நாட்டுப் பணிக்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் முறையான வழியில் செல்வது தான் நல்லது. பிறருடைய யோசனையை கேட்டு குறுக்கு வழியில் சென்றால் திரும்பி வருவதற்கு திக்கு முக்காட வேண்டிய நிலை வந்துவிடும்.
குடும்பம்
இல்லத்துல இன் சொல்லும் ,இன் முகம் உங்களுடையதாக இருந்தால் இனிமை இடம் பிடிக்கும். வீண் அடம்பிடிக்காமல் இருப்பது அதை நிலைக்க வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு வாக்குவாதமும் சீரழிவுக்கு வழிவகுத்து விடலாம். குலதெய்வத்தை தினமும் கும்பிடுவது நல்லது. பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் சுப காரியம் சுலபமாக கைகூடும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து லாபம் தரும். வாரிசுகளால் பெருமை சேரும். பலகாலமாக வாட்டின கடனை பைசல் செய்யும் சந்தர்ப்பம் அமையும். வரவை வீண் கேளிக்கைகளில் செலவிடாமல் இருப்பது முக்கியம்.
உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்
தொழில்
எந்த தொழில் செய்தாலும் அதில் நேரடி கவனம் இருந்தால் ஏற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். புதிய முதலீடுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. வங்கி கடன் சுலபமாக பைசல் ஆகும். சிலருக்கு புதிய கூட்டமைப்புகள் மூலமாக தொழில் வளர்ச்சி ஏற்படும். அயல் நாட்டு வர்த்தகத்தில் உரிய நடைமுறைகளை சிறிதும் தவறாமல் கடைபிடிப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்வோர் மிக கவனமாக இருக்க வேண்டிய ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது.
அரசு, அரசியல் துறையினருக்கு சீரான வளர்ச்சி இருக்கும். எதிரி என் பலம் ஒடுங்கும். நிலையான புகழ் கிடைக்கும் போது உடன் இருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். சின்ன சின்ன திட்டங்களாக இருந்தாலும் சின்சியராக கவனித்து செய்வது நல்லது. புறம் பேசும் நபர்களை உடனே புறந்தள்ளுங்கள். சகவாச தோஷம் சர்வத்தையும் நாசமாக்கிவிடும். உணர்ந்து நடப்பது உத்தமம்.
மாணவர்கள் சோம்பலை விரட்டிவிட்டு படித்தால் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டு கல்விக்கான வாய்ப்புகளும் அதற்கான கடன் முயற்சிகளும் விரைவாக கிடைக்கும். மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகும். எந்த சமயத்திலும் வீண் குழப்பங்களை தவிருங்கள். உங்கள் எதிர்பால் நட்புடன் கவனமாக எச்சரிக்கையாக பழகுங்கள்.
கலை, படைப்பு துறையினருக்கு இது முன்னேற்றமான காலகட்டமாக அமையும். படைப்புகளுக்கு அரசு வழியில் பாராட்டும் விருதுகளும் நிச்சயம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளை சிறியது, பெரியது என வித்தியாசம் பார்த்து ஒதுக்குவது வீணான ஜம்பத்தில் விலக்குவதும் கூடாது.
அறிவுரை
அவசியமில்லாத இரவு நேர பயணத்தை தவிருங்கள். விஷ ஜந்துக்கள், வளர்ப்பு பிராணிகளிடமிருந்து விலகியே இருங்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஆண்டாக இந்த வருடமும் உங்களுக்கு உள்ளது. உயரமான இடத்தில் கவனமாக கால் பதியுங்கள். ரத்த அழுத்தம் மாற்றம், சர்க்கரை,மூட்டு தேய்மானம், கொழுப்பு அதிகரிப்பு, காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளை உடனே கவனியுங்கள். 60 வயதை கடந்தவர்கள் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
ஆலய வழிபடு
இந்த வருடம் ஒருமுறை திருநள்ளாறு சென்று சுவாமி, அம்பாளை வணங்கி விட்டு, சனிபகவானை ஆராதித்து விட்டு வாருங்கள். மாதம் ஒரு சனிக்கிழமையில் பக்கத்தில் உள்ள சிவாலயம் சென்று வணங்குங்கள். ஏழை முதியோருக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். தினமும் கோளாறு பதிகத்தை ஒருமுறையாவது கேளுங்கள் அல்லது சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை வசந்தமாகும்.
வரும் புத்தாண்டு உங்களுக்கு 60% நற்பலன்களை நல்கும் புத்தாண்டாக அமையும்..