திருவெம்பாவை பாடல் 7
அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே
வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர்
மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென்
றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந்
துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா
கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள்:
‘அன்னே இவையும் சிலவோ’
அன்னையே, எம்பெருமானது திருவிளையாடல்களில் இதுவும் சில போலும்.
‘பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே
வாய்திறப்பாய் ‘
தேவர்களும், யக்ஷர்கள், கின்னரர்கள் முதலான மற்ற விண்ணோர்களும் நினைப்பதற்கும் அரியவன், ஒரு பரம்பொருள், மிகப் பெரும் புகழுடையவன், அவனுடைய சின்னங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் முன்பே ‘சிவ’ என்றே வாய் திறப்பாய்.
‘தென்னாஎன் னாமுன்னந் தீசேர்
மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென்
றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் ‘
தென்னாடுடைய சிவனே’ என்று யாம் கூறி முடிக்கும் முன்பாக, தீயோடு சேர்ந்த மெழுகு போல் உருகுவாய், என் பெருந்துணைவன், என் அரசன், அமுதம் போன்றவன் என்று நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இறைவனைப் புகழ்கின்றோம்.
இன்னந்துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா
கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய் ‘
அதைக் கேட்டு இன்னமும் நீ உறங்குகிறாயா ?!!.. வலிய, இரக்கமற்ற நெஞ்சை உடைய அறிவிலிகள் போல், ஏதும் செய்யாது
படுத்திருக்கின்றாயே ?!! , தூக்கத்தின் பெருமையை என்னெவென்று சொல்வது ?.