ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – மீன ராசி
குரு பகவானின் அருள் பெற்ற மீனராசி அன்பர்களே…!! வரும் புத்தாண்டு உங்களுக்கு ஏற்றத்தை தருமா? ஏமாற்றத்தை தருமா? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்… வருடத் தொடக்கத்திலிருந்து பொறுமையும், பொறுப்பு உணர்வும் தேவைப்படும் காலகட்டம். திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செயல்பட்டால் வருடம் முழுவதும் வசந்தம் வீசும்.
வேலை
வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். அது தாமதமானாலும் வீண் புலம்பலும், வேண்டாத சலிப்பும் கூடாது. இப்போதைய பொறுப்பு உணர்வு தான் எதிர்காலத்தில் பெருமைக்கு காரணமாக அமையும். வேலைப்பளு அதிகரித்தாலும் வீண் படபடப்பையும், வேண்டாத பரபரப்பையும் தவிருங்கள். அலுவலக கோப்புகளில் எதிலும் கையெழுத்து போடும் முன் ஒரு முறைக்கு இருமுறை படித்து பாருங்கள். எவ்வித புதிய பொறுப்புகளிலும் வேண்டாத குழப்பமும் வீணான சோம்பலும் அறவே தவிர்க்க வேண்டும். “உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்” என்பதை உணர்ந்தால் உயர்வுகள் உறுதியாகும்.
குடும்பம்
இனிமையான சொற்களைப் பேசினால், இல்லத்தில் இனிமை இடம் பிடிக்கும். மனதில் இருந்த இனம் புரியாத குழப்பம் விலகும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். வாரிசுகளுடன் வீண் வாக்குவாதம் செய்தால் பிரிவும், வருத்தமும் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போனால் நிம்மதி நிலைக்கும் மறந்து விட வேண்டாம். குலதெய்வ வழிபாட்டை முழுமையாக நிறைவேற்றினால் சுபகாரிய தடைகள் விலகும். குடும்ப உறவுகள் இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பழைய கசப்பில் வார்த்தைகளை அம்புகளாக செலுத்தி அவர்கள் மனசை நோகடிக்க வேண்டாம். ஆடை, ஆபரணங்கள் சேரும். விலை உயர்ந்த ஆபரணங்களை ஆடம்பரத்திற்காக அணிந்து கொள்ள வேண்டாம். மூன்றாம் நபர் தலையீட்டை குடும்பத்தில் அனுமதிக்காத வரை நிம்மதி நிலைக்கும்.
தொழில்
செய்யும் தொழிலில் நேரடி கவனமும், நேர்மையும் இருந்தால் லாபம் சீராக உயர்ந்து கொண்டே இருக்கும். வர்த்தக கடன்களை வரவு அதிகரிக்கும் போது முறையாக செலுத்தி விடுவது அவசியம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அவசர முதலீடு வேண்டாம். எந்த தொழிலிலும் முழுமையான நம்பிக்கையோடு முடங்காமல் செயல்பட்டால் முன்னேற்றம் நிச்சயம். இரும்பு, கனிம பொருள்கள், ரசாயன பொருள்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். அதே சமயம் சட்டப் புறம்பு சவகாசத்துக்கு இடம் தந்தால் சங்கடம்தான் பரிசாக கிடைக்கும். வீடு, மனை, ரியல் எஸ்டேட், தொழில்கள் லாபம் சீராகும். பங்கு வர்த்தகத்தில் அனுபவம் இல்லாமல் இறங்க வேண்டாம்.
அரசு, அரசியல் துறையினர் வாக்கிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடித்தால் ஆதரவு நிலைக்கும். சட்டப் புறம்பின் நிழல் கூட மேலே படாமல் பார்த்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இருள் பரவாமல் இருக்கும். இத்தனை எதிர்பார்ப்பும் படிப்படியாக ஈரேடத் தொடங்கும். சமயத்தில் தலைகனத்தாலும், சோம்பலாலும் அதை நீங்களே கெடுத்துக்க வேண்டாம். ஊக்கத்துடன் செயல்பட்டால் தேக்க நிலை விலகி ஏற்றமும் மாற்றமும் பெறக்கூடிய காலகட்டம்.
மாணவர்கள் சோம்பலை விரட்டிவிட்டு படித்தால் திறமைக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும், பரிசுகளும் பெறலாம். தினமும் அதிகாலையில் எழுவதும் பள்ளிக்குப் போகும் போது பெற்றவர்கள் பெரியவர்கள் ஆசி பெறுவதும் நல்லது. இரவு நேரத்தில் கும்பலாக இருக்கும் இடத்திற்கு வேடிக்கை பார்த்து போவதை தவிர்ப்பது நல்லது.
உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்
கலை, படைப்பு துறையினருக்கு படிப்படியாக ஆதரவு அதிகரிக்கும். பெரிய பெரிய வாய்ப்புகளின் ஆரம்பம் சிறியதாக தான் இருக்கும் என்பதை உணர்ந்து வீண் கர்வமில்லாமல் செயல்படனும். சிறிய ரோஷம் கூட பெரிய இழப்பை ஏற்படுத்தி விடலாம். வார்த்தைகளில் நிதானமாக இருந்தால் நிச்சயம் முன்னேற்றம் கிட்டும்.
உடல் நலம்
உடல் நலத்தை பொருத்தவரை ரத்த அழுத்தம் மாறுபாடு, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். உண்ணும் உணவுகளில் கவனமாக இருங்கள்.
ஆலய வழிபாடு
இந்த வருடத்தில் ஒருமுறை பஞ்சவடி தளத்துக்கு சென்று அங்குள்ள அஞ்சுமுக அனுமனை வணங்கிவிட்டு வாருங்கள். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பக்கத்து பெருமாள் கோயிலுக்கு சென்று நரசிம்மரை வணங்குங்கள். ஏழை தொழிலாளிக்கு இயன்ற உடை உணவு தானம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மேலும் வசந்தமாக இருக்கும்.
மொத்தத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு 50 சதவீத நற்பலன்களை மட்டுமே நல்கும் ஆண்டாக இருக்கும். அனைத்து செயல்களிலும் மிக கவனமாக செயல்பட்டால் மட்டுமே இந்த வருடத்தில் வெற்றி கிடைக்கும். ஆகையால் உணர்ந்து கவனத்துடன் செயல்படுங்கள்.