வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2025
தற்போது மீன ராசிக்குள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவான் ஜூலை 13 முதல் வக்ரகதி அடைந்த நவம்பர் 27ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது தற்போது மீன ராசியில் 8 டிகிரியில் சஞ்சரிக்கும் சனி பகவான் மீன ராசியில் முதல் டிகிரி வரை பின்னோக்கி நகர்கிறார். அதாவது உத்திரட்டாதி 2ம் பாதத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து உத்திரட்டாதி 1ம் பாதம், பூரட்டாதி 4ம் பாதம் வரை சஞ்சரித்து பின் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
மீன ராசிக்குள் நிகழும் இந்த வக்கிர நிகழ்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது சனியின் பார்வை ரிஷபம் கன்னி, தனுசு, ஆகிய ராசிகளில் விழுகிறது. இந்த பார்வை 12 ராசிகளுக்கும் மாறுபட்ட பலன்களை கொடுக்க உள்ளது. ஜென்ம சனி, ஏழரை சனி, அஸ்தமத்து சனியில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு ஆசுவாசம் தரும் வகையிலான பலன்கள் அமையும்.
மேஷம்
செல்வ பாதுகாப்பின் அவசியம் புரிந்து சேமிக்க தொடங்குவீர்கள். எதிர்பாராமல் ஆரோக்கியம் கெடும். கல்விப் பணியில் உள்ளோர் பரிசும், பாராட்டும் பெறுவார்கள். வீடு,வாகன தொல்லைகளால் மன உளைச்சல் உண்டாகும். சிலருக்கு அரசியல்வாதிகளின் நட்பு, அரசு உதவியும், ஆதரவும் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்களால் மன அமைதி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் செல்வாக்குப் பெருகும். குடும்ப நேசம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கும். புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த காலம் கனிந்து வரும்.
பரிகாரம் : சனிக்கிழமைகளில் அனுமன் ஆலயங்களுக்கு சென்று வெண்ணை சமர்ப்பணம் செய்து வணங்கி வர ஏழரைச் சனியால் உண்டாகும் பாதிப்புகள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வக்கிர சனி சஞ்சாரத்தால் பணப்பற்றாக்குறை, நண்பர்களிடம் மனக்கசப்பு, உறவில் விரோதம் மற்றும் நண்பர்களிடம் செல்வாக்கு குறைவது போன்ற பாதகமான பலன்களை எதிர்பார்க்க முடியும்.
திடீர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் இருக்கும் சோர்வும் அனுப்புமே பலன்களாகும் கனவு தொல்லையால் தூக்கம் குறையும்.
பரிகாரம் : அருகில் உள்ள சிவாலயத்தில் நவகிரக சனிபகவானை சனிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்ட வாருங்கள். அதேபோல் ஈசன் வெள்ளீஸ்வரராக அருள் பாலிக்கும் தலத்துக்கு சென்று வழிபட்டு வாருங்கள். வில்வ அர்ச்சனை செய்து வணங்குவதுடன், சிவனடியார்களுக்கு வஸ்திர தானம் செய்ய நற்பலன்கள் மிகுதியாகும். நினைத்த காரியங்கள் கைகூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வக்கிர சனி சஞ்சாரம் சிலருக்கு சொத்துக்களை இழத்தல், பதவி பறிபோகுதல், அதிகாரம் குறைதல், குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை போன்ற அசுப பலன்களை தரும்.
திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். நண்பர்களுடனான மோதல்கள் உருவாகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
பழைய பிரச்சினைகளால் பயம் வந்து போகும். கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். இடையிடையே பண வரவு உண்டு. வீடு, மனை வாங்குவது விற்பது நல்ல விதத்தில் முடியும். அமைதியுடனும் கவனத்துடனும் பிரச்சனைகளை அணுகினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்.
பரிகாரம் : ராகு பகவான் 9ல் இருக்கிறார் என்பதால் வக்கிரசனி நடைபெறும் காலகட்டத்தில் புரட்டாசி அமாவாசையில் பித்ரு வழிபாட்டையும் அன்னதானத்தையும் தவறாமல் செய்யுங்கள். இதனால் தந்தை வழியில் இருந்த சொத்து பிரச்சனைகள் நீங்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.
கடகம்

வக்ரகதி சஞ்சாரத்தில் சனிபகவான் சோதனையான பலன்களையே தருவார். புதிய நண்பர்களிடம் பழகும் போது அதிக எச்சரிக்கை தேவை. முன்,பின் தெரியாத புதிய நபர்களிடம் பண பரிவர்த்தனை செய்யாமல் இருப்பது நல்லது. முக்கியமானவர்களை பகைத்துக் கொள்ளுதல், பெரியவர்களுடன் வாக்குவாதம் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்தேறும். எச்சரிக்கையுடன் இருந்து கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டால் மட்டுமே தீய பலன்களை ஒழிக்க முடியும்.
பரிகாரம்: எட்டில் இருக்கும் ராகு புதிய புதிய பிரச்சனைகளை கொண்டு வருவார் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபட மறக்காதீர்கள். வக்கிர சனி உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார் அதை பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைய பாருங்கள்.
சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு வக்கிர சனி சஞ்சாரம் சிலருக்கு சொத்துக்களை வாங்குதல், புதிய பதவி கிடைப்பது, அதிகாரம் பெறுதல், குடும்பத்தில் குழப்பம் நீங்குதல் போன்ற நல்ல பலன்களைத் தரும்.
திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தினாலும் திடீர் வருமானத்தால் சங்கடமான சூழ்நிலையை சமாளிக்கலாம். புதிய நண்பர்களுடன் நட்பு உருவகும். வெளிவட்டாரத்தில் பெருமையும், புகழும் அதிகரிக்கும்.
பழைய பிரச்சினைகள் ஓடி மறைந்து விடும் கண் நோய் உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். இடையிடையே திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது விற்பது நல்ல விதத்தில் முடியும். அமைதியுடனும் கவனத்துடனும் பிரச்சனைகளை அணுகினான் வெற்றி பெறலாம்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமனை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். மாற்றுத்திறனாளிக்கு உதவுங்கள். சனியின் தாக்கம் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். நவகிரக சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சிரமங்கள் விலகும்.
கன்னி

சனிபகவான் வக்ரகதியில் பயணிக்கும் போது மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். பணம் பற்றாக்குறையும், மனதில் இனம் தெரியாத கவலைகளும் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள், வீண் கவலைகள் ஏற்படக்கூடும். சில தடுமாற்றங்கள் வந்தாலும் கடின முயற்சியால் வெற்றி உண்டாகும். சில புதிய வாய்ப்புகள் உருவாகி எதிர்காலத்தை வளமாக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அதீத நன்மைகளை தரும். ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட தடைகள் அனைத்தும் விலகும்.
துலாம்

இதுவரை உங்களை வாட்டி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கண்டங்கள் விலகும். எட்டாம் வீடு உங்கள் ராசிநாதனின் வீடு என்பதால் பரிபூரணமான நற்பலன்களே கிடைக்கும். வழக்குகளில் இருந்து இழுபறி நிலை மாறும். முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள்.
சனிபகவானின் வக்கிர பார்வை சூரியன்-கேதுவின் மீது விழுவதால், தந்தை-மகனிடையே தேவையற்ற சிக்கல்கள் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்றாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் உங்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் வீட்டுக்கு அருகில் இருக்கும் சிவாலயத்துக்கு சென்று அங்கு அருளும் பைரவ மூர்த்திக்கு சிவப்பு நிற மலர்கள் சாத்தி தீபம் ஏற்றி வைத்து வணங்கி விட்டு வாருங்கள். சகல பிரச்சனைகளும் தீர்ந்து நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்

வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை சுமையாலும் கூடுதல் பொறுப்புகளாலும் பதற்றம் அதிகரிக்கும் வீண் சந்தேகத்தால் நண்பர்களின் நட்பை இழக்கக்கூடும் எதிர்பாராத தொல்லைகளும் வீண்பழியும் ஏற்படும். புதிய கடன் பிரச்சனைகளை நினைத்து கலக்கம் ஏற்படும். வாழ்க்கை துணைக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் சஷ்டி கவசம், குமாரஸ்தவம் போன்றவைகளைப் படித்து முருகப்பெருமானை வழிபடுங்கள். இயன்றால் ஒரு முறை திருசெந்தூர் சென்று வாருங்கள். உணவு தேவை இருப்பவர்களுக்கு உதவுங்கள் சனிக்கிழமைகளில் நீல நிற ஆடைகளை அணிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வக்கிர சனி சஞ்சாரம் நீண்ட நாள் பண பிரச்சனை தீர வழி வகுக்கும். தயாரின் உடல்நலையில் அதிக கவனம் தேவை. மூத்த உடன் பிறப்புகளுடன் இருந்த பிணக்கம் இணைந்து இணக்கம் உண்டாகும். மூத்த சகோதரத்தால் உதவிகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சியில் அமோக வரவேற்பும், அதீத செல்வாக்கும் கிடைக்கும். மறைமுக விரோதிகளின் தொல்லையை சமாளிக்க வேண்டிய நிலை உருவாகும். திடமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது. இயல்பில் கருணை உள்ளம் உடையவராய் இருப்பதால் பலரும் உங்களை ஏமாற்றி பணம் பறிக்க வாய்ப்பு உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று சக்கரத்தாழ்வாரை வழிபட்டு தயிர்சாதம் நிவேதனம் செய்து விநியோகிக்க கஷ்டங்கள் தீர்ந்து அதிர்ஷ்ட பழங்கள் கூடிவரும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வக்ரசனி சஞ்சாரம் சிலருக்கு வெளிநாட்டு பயணத்தையும் அதனால் நல்ல ஆதாயத்தையும் தரும். பிள்ளைகளால் பெருமையும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். வேற்று இனம் மதத்தை சேர்ந்தவர்களால் நன்மை உண்டாகும். எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் நோயின் கடுமையான மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயம் உருவாகும். முடிந்தவரை உடலுக்கு கடினமான வேலையை கொடுக்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்து அபிஷேகத்துக்கு இளநீர் வாங்கிக் கொடுப்பது விசேஷம். அன்னதானத்துக்கு இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு வக்ர சனி சஞ்சாரத்தால் புதிய நண்பர்களின் அறிமுகம் புதிய தொழில் வாய்ப்புகள் போன்ற புதுமையான நிகழ்வுகளால் புத்துணர்ச்சியூட்டும். மிகுந்த கவனத்துடன் புதிய நட்பை தேர்ந்தெடுப்பது அவசியம் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமோ என்று வருத்தப்படுவீர்கள்.
வீண் செலவுகளை குறைத்து கொஞ்சம் சிக்கனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடிக்கடி தூக்கம் குறையும். நண்பர்களுடன் மனவருத்தம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முறைகேடான சட்டத்திற்கு புறம்பான தொழிலை செய்வோரும் உங்களை நெருங்கி வர வாய்ப்பு உண்டு அது போன்ற நட்பு எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும். வீண்பழி வந்து செல்லும். கூடா நட்பு கேடாய் விளையும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு விளக்கேற்றி வாருங்கள் பைரவருக்கு மிளகு சாதம் நிவேதனம் செய்யது விநியோகியுங்கள் வரும் தொல்லைகள் எல்லாம் நல்லவையாக மாறி வாழ்க்கை வளமாகும்
மீனம்

அதிக சிற்றின்ப ஈடுபாட்டால் தொல்லைகள் வரும் அதனால் அவமானமும் அவப்பெயரும் ஏற்பட்டு நிவர்த்தி ஆகும். சனிபகவான் ஏழாம் வீடான கன்னியை வக்கிரமாக பார்க்கிறார் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் சொத்து சேரும்.
ஆறில் அமர்ந்திருக்கும் கேதுவோடு சூரியன் இணையும் ஆவணி மாதம் கடன் பிரச்சனை குறைய வழி பிறக்கும். எதிரிகளும் ஓடி ஒளிவார்கள் அரசு தொடர்பான வழக்குகள் சாதகமாக முடியும். உங்களின் தேக ஆரோக்கியம் மேம்படும் தனஸ்தான அதிபதி செவ்வாயின் சஞ்சாரம் பெரும்பாலும் சாதகமாகவே உள்ளது எனவே பண வரவுக்கு தடை இருக்காது. குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.
பரிகாரம்: முதன் மற்றும் சனிக்கிழமைகளில் நரசிம்ம பெருமானை வணங்கி துளசி சாத்தி வழிபட்டு வர நவகிரகங்களின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும்