செவ்வாய், புதன், குரு, சனி, ஆகியோர் அஸ்தங்கம் அடைந்து நீசம் பெற்று 5, 6, 8, 11, 12-ம் இடங்களில் இருந்தால் வறுமை பிடித்துக்கொண்டு வாட்டும்.
கன்னி அல்லது மகர லக்னமாகி சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் நீசம் அடைந்து 1, 5 ,7 ,9 ,10,11 ஆகிய இடங்களில் இருந்தால் வறுமை உண்டாகக்கூடும்.
ஸ்திர ராசி லக்னமாக கொண்டு பிறந்து, கேந்திரங்களில் திரிகோணங்களில் பாவ கிரகங்கள் இருந்து, கேந்திர திரிகோணங்களில் எந்த சுப கிரகமும் இல்லாமல் இருந்தால் வறுமை உண்டாகக்கூடும்.
இரவு நேரத்தில் ஜாதகர் பிறந்து சந்திரன் பலவீனம் பெற்று சந்திரனுக்கு எட்டாம் இடத்தில் பாவ கிரகம் இருக்குமானால் பொருளாதார சுபிட்சத் திற்கு இடையூறு உண்டாகும்.
பொதுவாக ராகுவோ, கேதுவோ, சந்திரனுடன் கூடி இருந்தால் செல்வ நிலைக்கு குந்தகம் ஏற்படலாம்.
12-ம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல தோற்றப் பொலிவும், பேச்சுத்திறனும் உடையவர் ஆவார்.
2-ம் வீட்டின் அதிபதி 12-ம் வீட்டில் இருந்தால், ஜாதகர் பெருந்தன்மையுடன் பொருள் திரட்டி செலவு செய்வார்.
12-ம் வீட்டின் அதிபதி 9-வது வீட்டில் இருந்தால், ஜாதகருக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். ஆனால் பாவ கிரகத்துடன் சேர்ந்து இருக்க கூடாது என்பது நிபந்தனை.
2-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருப்பார்களானால் ஜாதகர் தரும வழியிலும், சுபகருமங்களிலும், சொத்துக்கள் சேர்க்கும் நோக்கிலும், பொருளைச் செலவு செய்வார். மேலும் குரு இங்கிருந்தால் கல்வி போன்ற முக்கிய பணிகளுக்கு ஜாதகர் நன்கொடை வழங்கும் தகுதியைப் பெறுவார்.
சுக்கிரன் 12-ல் இருந்தால் சுக போக நோக்கிலும், பெண்கள் வழியிலும் ஜாதகர் செலவு செய்வார்.
12-ம் இடத்தில் உள்ள சுபகிரகங்கள் பொருளை சேர்ப்பதற்கு வசதி செய்து தருவார்கள்.
12-ம் வீட்டில் ஆண் கிரகம் இருந்தால் ஆண்களுக்காக ஜாதகர் பணத்தை செலவு செய்வார்.
12-ம் வீட்டில் பெண் கிரகம் இருந்தால் பெண்கள் வழியில் ஜாதகர் செலவு செய்வார்.
லக்னத்திற்கு இரண்டிலும், 12-லும் பாவகிரகங்கள் கூடி இருப்பார்களானால், வறுமையும், நோயும் விளையும்.
சுப கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2ம் இடத்திலும் 12ஆம் இடத்திலும் இருப்பார்கள் ஆனால் சரீர சுகமும் செல்வச் சேர்க்கையும் உண்டாகும்
லக்னத்திலிருந்து இரண்டாமிடத்தில் நலம் புரியும் கிரகங்கள் இருந்து, தீமை விளைவிக்கும் கிரகங்களால் பார்க்கப்படாமல் இருந்தால், ஜாதகர் ஐஸ்வர்யமும், தோற்றப்பொலிவும் பெற்றிருப்பார்.
செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்று, சிம்மம்- தனுசு ஆகிய இடங்களில் இருந்துகொண்டு பலம் பெற்றிருக்குமானால், மேலும் அந்த இடமே லக்னம் ஆனால், இவற்றோடு நட்பு கிரகத்தால் பார்க்கப்படுமானால் ஜாதகனுக்கு நிறைய செல்வம் வந்து சேரும். சொத்துக்கள் குவியும். வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்து உண்டாகும்.
லக்னத்தில் குரு இருப்பது விசேஷமாகும். மேலும் இந்த குருவானவர் சுப ஆதிபத்யம் பெற்றிருந்தால் இன்னும் விசேஷமாகும். மகர லக்னமாகி அங்கு குரு இருந்தால் நீசம் பெற்றவராவார். அது நல்லதல்ல. நீசபங்கம் பெற்றிருந்தால் நலம் உண்டாகும்.