கேது தசா பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

கேது தசா பலன்கள்

கேது தசா(Ketu Dasa) மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். கேதுவுக்கும் ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது. ஞானகாரகன், மோட்சகாரகன் என வர்ணிக்கப்படும் கேது பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை ,நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடனிருந்தால் ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

கேது ஒரு பாவ கிரகம் என்பதால் உபஜெய ஸ்தானங்களான 3,6,10, 11ல் அமையப் பெற்றிருந்தாலும் 1,5,9 அமைந்து குரு பார்வையுடன் இருந்தால் சமுதாயத்தில் நல்லதொரு கௌரவம், பல பெரிய மனிதர்களின் தொடர்பு, கோவில் கட்டும் பணிகளில் ஈடுபாடு, தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு.

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் கேது தசா காலங்களில் ஓரளவு நன்மையான பலன்களை அடைய முடியும்.

கேது தசா(Ketu Dasa) காலங்களில் நற்பலனை அடைவதைவிட கெடு பலன்களே அதிகம் உண்டாகும். கேது நின்ற வீட்டதிபதி பகை,நீசம் பெற்றோ பாவ கிரக சேர்க்கைப் பெற்று அமைந்தால் கேது தசா நடைபெறும் காலங்களில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மனக்குழப்பங்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க கூடிய அவலநிலை, எதிலும் மந்தம், இல்வாழ்வில் ஈடுபாடு இல்லாமை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

கேது தசா

பொதுவாக கேது தசா(Ketu Dasa) காலங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு ஏழில் அமைந்து கேது தசா நடைபெற்றால் அக்காலங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கேது தசா நடைபெறும் காலங்களில் இல்வாழ்வில் ஈடுபாடு இருக்காது, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளை கொடுக்கும், எட்டில் கேது அமர்ந்தால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி என்ன வியாதி என்பதை கண்டறிய
முடியாத நிலை உண்டாகும். தேவையற்ற மனக்குழப்பங்கள், தற்கொலை எண்ணத்தையும் தூண்டிவிடும். இந்த காலங்களில் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.

அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது தசா(Ketu Dasa) முதல் திசையாக வரும். கேது பலம் பெற்று குழந்தை பருவத்தில் கேது தசா நடைபெற்றால் விளையாட்டு நாட்டம், பிடிவாத குணம் போன்றவை இருக்கும்.

வாலிப பருவத்தில் நடைபெற்றால் எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும். கல்வியிலும் சுமாரான நிலையே இருக்கும், ஆன்மீக-தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மத்திம பருவத்தில் நடைபெற்றால் தெய்வீக பணிகளில் ஈடுபாடு, போராடி வாழ்வில் வெற்றி பெறக்கூடிய அமைப்பு உண்டாகும்.

முதுமை பருவத்தில் நடைபெற்றால் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையக்கூடிய வாய்ப்பு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய அமைப்பு உண்டாகும்.

கேது பலமிழந்து குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் வயிற்றுக் கோளாறு, அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு, பெற்றோருக்கு சோதனை போன்றவை உண்டாகும்.

கேது தசா

இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை, தேவையற்ற பழக்க வழக்கங்களால் வீண் பிரச்சனைகள், காதல் வலையில் சிக்கி சீரழியும் நிலை உண்டாகும்.

மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, ஊர் விட்டு ஊர் சென்று அலைந்து திரியும் சூழ்நிலை,தற்கொலை எண்ணம் போன்றவை உண்டாகும்.

முதுமை பருவத்தில் தசா நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களை இழக்கும் நிலை, சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாகும்.

கேது ஜென்ம லக்னத்திற்கு 12 வீடுகளில் இருந்தால் ஏற்படும் பலன்கள்

  • கேது லக்னத்தில் இருந்து தசா நடைபெற்றால் உடல்நலத்தில் பாதிப்பு, பொய் சொல்லும் அமைப்பு, ரண காயம் உண்டாகும் நிலை, மனதில் குழப்பம், எதிலும் தடை, கஷ்ட நஷ்டங்களால் அவமானப்படும் அமைப்பு உண்டாகும்.
  • கேது 2-ல் இருந்து தசா நடைபெற்றால் பணவிரயம், உற்றார் உறவினர்களிடம் விரோதம், குடும்பத்தில் வறுமை, கஷ்டம், கடன்கள், கண்ணில் பாதிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு, சாப்பிட முடியாத நிலை உண்டாகும்.
  • கேது 3-ல் இருந்து தசா நடைபெற்றால் பகைவர்களை வெற்றி கொள்ளும் அமைப்பு, எதையும் சமாளிக்கும் திறன், நல்ல இசை மற்றும் சங்கீத ஞானம், எதிலும் விவேகத்துடன் செயல்படும் அமைப்பு உண்டாகும். நவீன பொருட்கள் மற்றும் ஆடை ஆபரணம் சேரும்.
  • கேது 4-ல் இருந்து தசா நடைபெற்றால் தாய்க்கு பாதிப்பு ஏற்படும். உறவினர்களால் நிம்மதி குறைவு, விரோதம் இருக்கும். இருக்கும் இடத்திற்கு பாதிப்பு, வீட்டில் திருடர்களால் பொருள் களவு போகும் நிலை, வண்டி வாகன விபத்துக்களை சந்திக்கும் நிலை ஏற்படும்.
  • கேது 5-ல் இருந்து தசா நடைபெற்றால் குடும்பத்தில் கஷ்டம், புத்திரர்கள் ஏற்பட தடை, பிள்ளைகளால் அவமானம், மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு, புத்தியில் தடுமாற்றம், வயிற்றுக்கோளாறு, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை போன்ற சாதகமற்ற பலன்கள் உண்டாகும்.
கேது தசா
  • கேது 6-ல் இருந்து தசா நடைபெற்றால் மனைவி பிள்ளைகளுக்கு மேன்மை, சுகம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் உதவியும் ஆதரவும் கிட்டும். பகைவர்களை வெல்லும் ஆற்றல், தாராளமான தன வரவு, ஆடை, ஆபரண சேர்க்கை, அரசாங்க வழியில் அனுகூலம் உண்டாகும்.
  • கேது 7-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் செல்வம், செல்வாக்குக் குறையும், மனைவியுடன் கருத்து வேறுபாடு, பிள்ளைகளால் மன சஞ்சலம், உறவினர்களுடன் பகை, தேவையற்ற வம்பு வழக்குகள், மனக்கவலை, உடல்நல பாதிப்பு, திருமணத்தடை உண்டாகும்.
  • கேது 8-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் விஷத்தால் கண்டம், உண்ணும் உணவே விஷமாகக் கூடிய சூழ்நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, வயிற்றுக் கோளாறு, தோல்நோய், எடுக்கும் காரியங்களில் தடை, இருமல், புத்தியில் தடுமாற்றம் உண்டாகும். திருமணத்தடை ஏற்படும். என்ன நோய் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உடம்பு பாதிப்பு உண்டாகும்.
  • கேது 9-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் தந்தைக்கு பாதிப்பு, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, வேலைப்பளு அதிகரிக்கும் அமைப்பு. தேவையில்லாத அலைச்சல், வெளியூர் வெளிநாடுகளால் அனுகூலம் உண்டாகும்.
  • கேது 10-ல் இருந்து தசா நடைபெற்றால் தொழில், உத்தியோக ரீதியாக உயர்வு, தாராள பொருள் வரவு, எதிர்பாராத பதவி உயர்வு, ஆன்மீக-தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
  • கேது 11-ல் இருந்து தசா நடைபெற்றால் சிறப்பான உடல்நலம், உத்தியோகத்தில் உயர்வு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும் அமைப்பு. எல்லாவற்றிலும் நல்ல லாபங்கள், அரசாங்கம் மூலம் அனுகூலம், புண்ணிய காரியங்கள் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
  • கேது 12-ல் இருந்து தசா நடைபெற்றால் எதிர்பாராத வீண் செலவு, உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற அவமானங்களை சந்திக்கும் நிலை, தூக்கமின்மை, வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும்.

Leave a Comment

error: Content is protected !!