சகலபேறுகளையையும் அருளும் -சாலை விநாயகர்
தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாலை விநாயகர் ஆலயம்..
மன்னன் அதியமான் ஆட்சி செய்த ஊர், தற்போது தர்மபுரி என்று அழைக்கப்படும் தகடூர். அவன் இங்குள்ள பல ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு உள்ளான். சில ஆலயங்களின் திருப்பணிகளுக்கும் உதவி இருக்கின்றான். அவனும், தமிழ் மூதாட்டி அவ்வையாரும் இந்த ஆனைமுகனை வழி பட்டுள்ளதாக செவிவழி செய்திகள் கூறுகின்றன.
கிழக்கு நோக்கிய ஆலயம். முகப்பில் சுதையாலான நர்த்தன விநாயகர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்கின்றனர். உள்ளே நுழைந்ததும் கருவறையில் கருணையே உருவாக காட்சி தருகிறார் மூலவர்,சாலை விநாயகர். அவருக்கு இருபுறமும் நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாகத்துடன் அருள்வதால் இவரை வழிபட்டால் சர்ப்பத் தால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகுகிறதாம். பிரகார வலம் வருகையில் சிவன், சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியையும் கண் குளிர தரிசிக்கலாம்.
விதானத்தில் நாகம்,முதலை, மீன், ஸ்ரீசக்கரம், கிரகணத்தின் போது சூரியனை நாகம் பிடிக்கும் மற்றும் விடும் காட்சிகள் புடைப்பு சிற்பங்களாக வடிக்கபட்டுள்ளன.கருவறைக்கு இடப்பக்கம் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி உள்ளது.
கஷ்டங்களை போக்கும் சாலை விநாயகர் பலருக்கும் இஷ்ட தெய்வம். கோயிலுக்கு அருகே காவல்நிலையம், நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் இருப்பதால் இவர் எப்போதுமே ‘பிஸி’!.
குடும்ப பிரச்சனைகளில் சுமூக தீர்வு ஏற்படவும், நீதிமன்ற வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்கவும், வீடோ, நிலமோ வாங்கும்போது வில்லங்கம் ஏதும் இல்லாமல் இருக்கவும், திருமணம் முடிந்த தம்பதியினர் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும், குடும்பத்தில் சுப காரியங்களை தொடங்குவதற்கு முன்பு ஆசி பெறவும் என கோரிக்கைகள் எதுவானாலும் இவர் நிறைவேற்றி வைக்கிறார். அதோடு குழந்தை பிறந்து 15 நாட்களுக்கு பின் இங்கு வந்து தாயும் சேயும் ஆரோக்கியமாக வாழ வேண்டுவதும் பக்தர்களின் வழக்கமாக உள்ளது.
பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சங்கடகர சதுர்த்தி அன்று மாலை 5மணி அளவில் சுவாமிக்கு தேங்காய் மாலை சாத்தியும், தேங்காய் மூடியில் தேங்காய் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றியும் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றார்கள்.
பல்வேறு பிரச்சனைகளால் திருமணம் தடைபட்டவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் விரைவில் நற்பலன்கள் கிட்டுகிறது. மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை உண்டு. பல விசேஷ நாள்கள் இங்கு சிறப்பிக்கபட்டாலும், விநாயகர் சதுர்த்தியே பெரிய பண்டிகை..
நீங்களும் உங்கள் குடும்பத்துடன் சென்று ஆனைமுகனை தரிசித்து வாருங்கள் வாழ்வில் வளம் எல்லாம் கிட்டும்..
Google Map:
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …