குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-மீன ராசி
குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே!!!
குருபகவான் உங்கள் ராசிக்கு பதினோராம் இடமான மகரத்தில் இருந்து, இப்போது 12-ஆம் இடமான கும்பத்துக்கு பெயர்ச்சியாகிறார்.
இந்த சமயத்தில் அவருடைய விசேஷப் பார்வைகளான 5,7, 9-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு முறையே 4,6,8-மிடத்தில் பதியும். அமைப்பின் காரணமாக இது உங்களுக்கு அல்லவை குறைந்து நல்லவை அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். இந்த சமயத்தில் தலைகணம் தவிர்த்து, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், எதிர்காலமும் வெளிச்சமாக இருக்கும்.
மீன ராசியினரின் பொதுவான குணநலன்கள்:
- மீன ராசியினர் அமைதியான குணம் கொண்டவர்கள் தான், ஆயினும் சில சமயம் கொஞ்சம் நக்கல், கிண்டல், கேலி, புத்திசாலித்தனம், அறிவதில் ஆர்வம் என இருப்பர்.
- இவர்களின் குடும்பம் சற்று கோப குணம் கொண்டது.
- இளைய சகோதரி லட்சணமாக இருப்பாள்.
- தாய் புத்திசாலியாகவும், அதிகம் வம்பு பேசுபவராகவும் இருப்பார்.
- பூர்வீகமும் குலதெய்வமும் நீர் சார்ந்த இடங்களில் இருக்கும்.
- இவர்களுடைய வேலையில் அரசு சார்பு இருக்கும்.
- தாய்மாமன் கம்பீரமாக யாரையும் மிரள செய்பவராக இருப்பார்.
- வாழ்க்கை துணை அதிகம் படித்த புத்திசாலியாக அமைவார்.
கும்ப குருவின் பொதுப்பலன்கள்
மீன ராசிக்கு இதுவரையில் பதினோராம் இடத்தில் அமர்ந்து இருந்த குருபகவான் தற்போது 12-ம் இடமான கும்பத்தில் குதித்துள்ளார். குரு மீன ராசிக்கு 10 மற்றும் ராசி அதிபதி ஆவார்.
உங்கள் ராசி மற்றும் பத்தாம் அதிபதியாகிய குரு தற்போதைய கோட்சார மாற்றத்தில் விரைய ஸ்தானத்தில் வீறு கொண்டெழுந்துள்ளார். விரைய ஸ்தானம் என்பது செலவு, அலைச்சல்,அயன சயனம், துறவு என இவ்வித பலன் கூறும் இடம். இதில் உங்கள் ராசியதிபதி குரு அமர்வு முதலில் உங்கள் தொழிலில் அலைச்சல் வரும். அல்லது தொழில் செய்யும் இடத்தை மாற்றுவீர்கள்.
செலவு அதிகரிக்கும் அது சுபச் செலவாக இருக்கும் என்பது பெரும் ஆறுதல். கூடவே சில பல முதலீடுகளும் இருக்கும். அசையும் சொத்துக்கள் வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விசேஷம் சம்பந்தமான செலவுகள் உண்டு.
பேச்சை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர்கள், ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், போன்றவர்கள் இடம்விட்டு வேறிடம் மாறி தொழில் செய்வர். கௌரவம் கிடைக்கும் என்பதற்க்காக இடம்விட்டுச் சென்று அலைவார்கள்.
ஆன்மீகவாதிகள், கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்,ஓதுவார்களும் கோவில் விட்டு வேறு கோவில் அலையக்கூடும்.
குருவின் பார்வை பலன்கள்:
குருவின் ஐந்தாம் பார்வை பலன்:
குரு தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்க்கிறார்.4-ஆமிடத்தை பார்வையிடும் குரு அதை செழிக்க செய்வார்.எப்பாடுபட்டாவது ஒரு வீட்டை வாங்கிக் கொடுப்பார். அந்த வீடு குடும்பத்தினர் தாராளமாக புழங்கும் அளவுக்கு பெரிய வீடாக இருக்கும். சில வாரிசுகள் தந்தையின் பெயரில் வீடு வாங்கிக் கொடுப்பர். உழவு சார்ந்த வாகனம், இயந்திரம் வாங்குவீர்கள்.
ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள் ஒரு அறையை சொந்தமாக்கிக் கொள்வர். வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை அல்லது தொலைத்தொடர்பு சேவை, ஆன்மீக பயண சேவை,வாகனம் சம்பந்தம், விவசாய ஆர்கானிக் பொருள் விற்பனை போன்ற சிறு சிறு தொழில் சேவை கடைகளை ஆரம்பித்து விடுவீர்கள். இவ்வளவு நாளும் யோசனையாக இருந்ததை குருபார்வை நடைமுறைப்படுத்தும்.
குருவின் ஏழாம் பார்வை பலன்:
மீன ராசியின் ஆறாம் வீட்டை தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். 6-ஆம் இடம் என்பது கடன், எதிரி, நோய் ஸ்தானம் இது போன்ற இடத்தை குரு பார்க்கும் போது அதிகப்படுத்துவாரா?அமைதி படுத்துவாரா? இரண்டும் நடக்கும். குருவின் பார்வை பெருக்கவும் செய்யும், பாதுகாக்கவும் செய்யும்.
இந்த காலகட்டத்தில் மீன ராசியினருக்கு சற்று இருதய படபடப்பு, கெட்ட கனவு காணுதல், நரம்புகளில் பிடிப்பு, சற்று மயக்கம் வருவது போல் இருத்தல் போன்ற உணர்வு ஏற்படுவதால் பயம் ஏற்படும். எனினும் குரு பார்வை இந்த நோய்கள் முன்பே இருந்தாலும்கூட இப்போதைய காலகட்டத்தில் அதனை குறைந்தபட்ச மருந்துகள் மூலம் சரி படித்திவிடும்.
இதுவரை உங்கள் மீது இருந்த களங்கம், அவமானம், அவச்சொல், பழி,பாவம் நீங்கும். உங்களைப் பற்றிய ஒரு வதந்தி மறைக்க,மறக்க செய்வார். குறிப்பாக ஒரு பெண் மூலம் ஏற்பட்ட பழிச்சொல் அகன்றுவிடும்.
குருவின் 9ம் பார்வை பலன்:
குரு தனது 9ம் பார்வையால் மீன ராசியின் 8-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 8-ஆம் இடம் என்பது நஷ்டம், விபத்து, அவமானம், கவலை போன்ற மனிதர்கள் வெறுக்கும் தகைமைகள் உடைய இடம். குரு பார்த்த இடம் செழிக்கும். இந்த 8-ஆம் இடத்தைப் பார்த்து எவற்றை செழிக்க வைப்பது.
உங்களுக்கு பணக்கஷ்டம் இருப்பின் குரு தனது பார்வையால் எதிர்பாராத பண வரவை கொடுத்து அந்த கஷ்டத்தை நீக்கி விடுவார். இந்த காலகட்டத்தில் அடிவயிறு அருகில் ஏதோ ஒரு கட்டி தென்பட்டு அது அறுவை சிகிச்சையால்தான் நீக்க வேண்டும் எனும் நிலை வரும்போது குரு தனது பார்வையால் வருடி அதனை மாத்திரை மருந்தால் சரி செய்து விடுவார்.
மீன ராசி பெண்களின் கணவருக்கு உடல் நலம் சீர் கெட்டால் குருபகவான் நல்ல மாத்திரை மருந்துகளால் அவற்றை சீர் செய்து சரியாக்கி மாங்கல்ய பலத்தை காப்பாற்றித் தருவார்.
விபத்து ஏற்படும் காலங்களில் சிறு சிராய்ப்போடு காப்பாற்றுவார். தனது பார்வையால் எட்டாமிட பலன்களை தரும் குரு அதிலிருந்து ஜாதகரை மீட்டு காப்பாற்றியும் விடுவார் என்பது திண்ணம்.
பரிகாரம்:
ஒருமுறை திருவெண்காடு திருத்தலம் சென்று சுவாமி அம்பாளை வழிபட்டு,புதன் பகவானையும் வணங்கி வாருங்கள்.
மாதம் ஒரு வியாழக்கிழமை பக்கத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள். ஏழை முதியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை வெளிச்சமாகும்.