சோபகிருது வருட பலன்கள் (2023-2024)
இந்த தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடத்தில் நிலவக்கூடிய கிரக நிலைகள், இந்த ஆண்டின் ஆதிபத்தியம் வைக்கக்கூடிய நவ நாயகர்களின் அமைப்பு இவை யாவும் சோபகிருது வருடத்தின் சுபிட்சத்தின் அளவு அதிகரிக்கும் என்பதே காட்டுகின்றன. அதே சமயம் உலக அளவில் இயற்கையை சீரழித்ததன் விளைவாக சில சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் வலுவிழந்து அதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மலை, வனப்பகுதிகளின் நிலச்சரிவுகள், திடீர் வெள்ள பாதிப்புகள் நிகழ வாய்ப்பு உண்டு.
மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தாலும் பொருள்களின் விலை உயர்வினால் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. தங்கம், வெள்ளி, போன்றவற்றின் விலை ஸ்திரம் இல்லாத நிலையில் ஏற்றமும் இறக்கமும் ஆக இருக்கும். அரசியல், சினிமா உள்ளிட்ட துறைகள் பலவற்றில் பிரபலமான பெரிய மனிதர்களின் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவைப்படும். யானைகள் காட்டு விலங்குகளை காத்திட புதிய சட்டங்கள் இயற்றப்படும். அவற்றின் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீக்கப்படும்.
பெண்களின் ஆதிக்கம் மேலோங்கும். பூமியின் கீழ் விளையக்கூடிய பயிர்கள் உற்பத்தி அதிகரிக்கும். மரபு சார் விவசாயம் பரவலாகும். மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். புதிய நோய்கள் விலங்குகள் மூலம் பரவும்.அதே சமயம் அவை உரிய நடவடிக்கைகளால் தடுக்கப்படும்.
நவ நாயகர்கள் பலன்
ராஜா – புதன்
பருவ மழை சீராக இருக்கும். விளைச்சல் அதிகரிக்கும். அதேசமயம் புயல், சூறாவளி போன்றவை திடீர் திடீரென உருவாகி எதிர்பாராத பயிர் சேதம் ஏற்படக்கூடும். மலை, வனப்பகுதிகளில் இயற்கைச் சீற்றம் ஏற்படும். தொழில் துறையில் மாற்றங்கள் ஏற்படும். பங்குவர்த்தகத்தில் திடீர் சரிவுக்கு இடமுண்டு. கால்நடைகள் இனம்புரியாத நோயால் பாதிக்கப்படலாம். என்றாலும் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். எல்லைப்பகுதியில் அந்நிய ஊடுருவல் நிகழும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் அது தடுக்கப்படும்.
மந்திரி – சுக்ரன்:
வெண்ணிற தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கும். பால் பொருட்கள் விலையில் மாற்றங்கள் ஏற்படும். மழையின் அளவு அதிகரிக்கும். வெள்ளத்தால் சேதங்கள் ஏற்படும். மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு நிகழும். திருடர்கள், கொடியவர்களின் அட்டகாசம் அதிகரித்தாலும் அவை உடனுக்குடன் அடக்கப்படும். ரியல் எஸ்டேட் துறையில் திடீர் சரிவும் எதிர்பாராத ஏற்றமும் மாறி மாறி நிகழும் மக்களிடையே பக்தி மார்க்க நாட்டம் அதிகமாக இருக்கும். உலக அளவில் சிறு சிறு உரசல்கள் தோன்றி மறையும்.
அர்க்காதிபதி – குரு
இயற்கை செழிக்கும். மழை வளம் சீராக இருக்கும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். எல்லையில் அன்னியர் தலையீடு அதிகரிக்கும் என்றாலும் முடிவில் அது முறியடிக்கப்படும். மலை பிரதேசங்களில் நிலச்சரிவுகள் மழை அரிப்பினால் பாதிப்புகள் ஏற்படும். அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். மூத்த தலைவர்கள், பிரபலங்களின் உடல் நலனில் கவனம் அவசியமாக இருக்கும். கனரகத் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். அயல்நாடுகளில் இயற்கை சீரழிவுகள் பெருமளவு இருக்கும். புதிய நோய்கள் பரவும். அதேசமயம் அவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். முதியவர்களுக்கான சலுகைகள் முறைப்படுத்தப்பட்டு நன்மை விளையும்.
சஸ்யாதிபதி- சந்திரன்
நெல் உற்பத்தி அதிகரிக்கும். பாரம்பரிய விவசாய முறை மீட்டெடுக்கப்படும். வான்வழிப் போக்குவரத்து அதிகரிக்கும். அதே சமயம் ஆகாயத்தில் ஏற்படும் திரையால் (பனி, மேக மூட்டம்)விமான இயக்கத்தில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பருவ காலத்தில் மழை பொழிவு தீவிரமாகும். நீர் வழிப்பாதை ஆக்கிரமித்த இடங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும். பழைய மற்றும் வலுவில்லாத கட்டடங்கள் இடிபாடடைந்து விபத்துக்கள் ஏற்படலாம். மக்களிடையே இனம் புரியாத குழப்பங்கள் ஏற்படலாம். தியானம், யோகா ஈடுபாடுகள் நன்மை தரும்.
சேனாதிபதி – குரு
அரசியலமைப்பில் மாற்றங்களும் அதனால் மக்களுக்கு நன்மையும் ஏற்படும். நீதி, நேர்மையை கடைப்பிடிப்பது அவசியமாக்கப்படுவதோடு, மீறுபவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்படும். பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கும். அண்டை நாடுகளுடன் நட்புறவு மேம்படும். மழைவளம் பெருகும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். கல்வித் திட்டங்களில் மாற்றமும், மாணவர்களின் அறிவுத்திறனில் வளர்ச்சியும் ஏற்படும். உலக அளவில் இந்தியாவின் கண்டுபிடிப்புகள் பேசப்படும். மதிப்பு மேலோங்கும். யானை முதலான வன விலங்குகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவற்றின் வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
ரஸாதிபதி – புதன்
எல்லாத் துறைகளிலும் பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். மத்திய மாநில அரசுகள் இடையே நல்லுணர்வு ஏற்படும். மக்களுடைய ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். விளைச்சல் அதிகரித்து விலைவாசி குறையும். நோய்களின் தாக்கம் குறையும். மழை பெருகும். பூமி சார்ந்த விஷயங்கள் லாபம் தரும். பால் பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கும். கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் முன்னேற்றமும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மக்களிடையே அமைதி நிலவும்.
தான்யாதிபதி – சனி
மானாவரி பயிர் வகைகள் செழிக்கும். பூமியின் கீழிருந்து புதையல், தொன்ம பொருட்கள் மிகுந்த அளவில் கிட்டும். கருப்பு நிற தானியங்கள் விளைச்சல் அதிகரிக்கும். இரும்பு கனரக உற்பத்தி கூடும். திருடர், ஏமாற்றுக்காரர்களுக்கான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படும். அயல் நாடுகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். நோய்கள் பரவிட வாய்ப்பு உண்டு என்றாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அது தடுக்கப்படும்.
மேகாதிபதி – குரு
உரிய காலத்தில் மழை தவறாது பெய்யும். அதேசமயம் இயற்கையை சீர்கெடுப்பதற்கு உரிய விலையாக வெள்ளம், நிலச்சரிவு, கடல் சீற்றம் போன்ற பேரிடர்களுக்கு உரிய விலை தர வேண்டி இருக்கும். மக்களிடையே பக்தி உணர்வு அதிகரிக்கும். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். புதுப்புது நோய்களின் தாக்கம் ஏற்பட்டாலும் உரிய மருந்துகளால் பிணிகள் தொற்றுதல் கட்டுப்படுத்தப்படும். புதிய கண்டுபிடிப்புகளால் நம் நாட்டின் மதிப்பு உயரும். தானிய உற்பத்தி அதிகரிக்கும்.
நீரஸாதிபதி – சந்திரன்
நவரத்தினங்களின் பயன்பாடு அதிகரிக்கும். தங்கத்தின் விலையில் திடீர் இறக்கமும் பின்னர் ஏற்றமும் நிகழும். புனித தலங்களில் சச்சரவுகள் ஏற்படும். மழை அதிகரிப்பினால் சேதம் ஏற்படும். வான்வழி போக்குவரத்தினால் சங்கடங்கள் தலை தூக்கும். வெளிநாடுகளில் குழப்ப சூழல் உண்டாகும். அந்நிய நாட்டு சதிகள் முறியடிக்கப்படும். மருத்துவ ஆராய்ச்சிகளால் ஆதாயம் ஏற்படும். மலை, கடல் சார்ந்த பகுதிகளில் இயற்கை சீரழிவு நேரலாம். நம் தேசத்து ராணுவத்தின் பலம் ஓங்கும்.
எப்போதும் நல்லதே நினைத்து நல்லதே செய்வோருக்கு சோபகிருது வருடத்தின் எல்லா நாளும் நன்னாளாகும்