கருடா ! ஒருவன் மரித்த நாளில் அவனது புத்திரன் செய்ய வேண்டிய சிலவகை பிண்டங்களைப் பற்றியும் , அவற்றின் காரணம் என்னென்ன என்பதைப் பற்றியும் உனக்குக் கூறுகிறேன் , கேள் !
ஒருவன் மரித்த இடத்திலேயே செய்யப்படும் முதல் பிண்டமானது , அந்த வீட்டிலுள்ள தேவதைகளை மகிழ்வடையச் செய்கிறது. மேலும் பூமியையும் மகிழ்வடையச் செய்கிறது.
வாசலில் வைத்துச் செய்யப்படும் இரண்டாவது பிண்ட மானது , பயணம் புறப்படும் ஜீவனை வழியனுப்பச் செய்யப் படுவதாகும்.வாசல் பகுதியில் இருக்கும் தேவதைகளை இப்பிண்டம் மகிழ்வடையச் செய்கிறது.
தகனம் செய்யும் வளாகத்தில் செய்யப்படும் மூன்றாவது பிண்டமானது , கேகரா என்னும் தேவதையை மகிழ்வுற செய்கிறது.
சடலத்தைக் கிடத்தும் இடத்தில் செய்யப்படும் பிண்டமானது . பூததேவதையை மகிழ்வுறச் செய்கிறது. இப்பிண்டத்தைச் செய்வதன் மூலம் மரித்தவனின் ஜீவன் மீது பூததேவதை சிநேகம் கொள்கிறது.
இதனைச் செய்வதன் மூலம் பிசாசுகளும் , ராட்சஸர்களும் ,யட்சர்களும் மரித்தவனின் உடலை , அக்னிதேவன் ஏற்றுக் கொள்ளும்படி பரிசுத்தமடையச் செய்கிறார்கள்.
அடுத்து சிதையின் அருகில் செய்யப்படும் பிண்டமானது மரித்தவனை பிரேத நிலைக்கு எடுத்துச் செல்கிறது.இப்பிரேத நிலையை சிலர் சாதக நிலை என்றும் கூறுகிறார்கள். இருப்பினும் பொதுவாக இதனை பிரேதப் பிண்டம் என்றே கூற வேண்டும்.
இந்த ஐந்து பிண்டங்களைச் செய்வதாலேயே மரித்தவன் உடல் , அக்னியில் எரிப்பதற்கான தகுதியைப் பெறுகிறது.
கருடா ! அடுத்து மூன்றுவகை பிண்டங்கள் உண்டு முதலாவது , இறந்தவன் மரணம் அடையும் வேளையில் செய்ய வேண்டிய பிண்டம் . அடுத்தது , மரித்த இடத்திலிருந்து தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பாதிவழியில் செய்யப்பட வேண்டிய பிண்டம். இந்த இரு பிண்டங்களும் பிரம்மா , விஷ்ணு , எமதூதர்கள் ஆகியோரோடு தொடர்பு உடையவை .
மூன்றாவதாக , தகனம் செய்யும் இடத்தில் செய்யப்பட வேண்டிய பிண்டம் , இது , மரித்தவனின் உடலை அனைத்துவித் அசுத்தங்களிலிருந்தும் விடுவிக்கிறது .
இவ்வகைப் பிண்டங்களைச் செய்த பிறகே , மரித்தவனின் புத்திரனோ அல்லது நெருங்கிய உறவினனோ சடலத்திற்கு தீ வைக்க வேண்டும்.
சடலத்திற்கு நெருப்பினை வைப்பவன் , நீரில் மூழ்கி , தான் நீராடிய நீரை தகனம் செய்யும் இடத்தில் தெளித்து அவ்விடத்தைத் தூய்மை செய்து , முறைப்படி கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
அதன் பிறகு , எமதூதுவனான க்ரவ்யதனுக்கு மலர்களையும் அரிசியையும் அர்ப்பணித்து , ” ஓ க்ரவ்யதா ! உயிர்களின் மூலமாய் இருப்பவனே , பிரபஞ்ச காரணனே . உயிர்களை உருவாக்கவும் , காக்கவும் , அழிக்கவும் செய்பவனே , மரித்த இவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வாயாக ! ‘ என்று சொல்லி , மரித்தவன் உடலை க்ரவ்யதனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
மரித்தவன் உடலைச் சிதையில் வைக்கும்போது , சிதையில் சிறிதளவு நெய்யை ஊற்றி , ” யமயா , அந்தகயா , ஸ்வாஹா ! ” என்று சொன்ன பிறகே உடலைச் சிதையில் வைக்க வேண்டும் .
பிறகு ம்ருத்யுதேவன் , பிரம்மதேவன் , அக்னிதேவன் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அர்ப்பணிக்கும் பொருட்டு , சடலத்தின் வாயில் நெய்யை ஊற்ற வேண்டும் . அதன் பிறகே கிழக்கு திசையிலிருந்து சிதைக்கு தீமூட்ட வேண்டும்.
பிறகு , இறந்தவனை நினைத்து அக்னி தேவனிடம் , “ அக்னி தேவனே ! இவன் இப்போது உனக்குப் பிறந்தவனாகி விட்டான் . தயைகூர்ந்து இவனை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்வாயாக ! ” என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
சிதைக்குத் தீயிடும் புத்திரன் அவ்விடத்திலேயே வாய்விட்டு அழ வேண்டும்.அதன் மூலம் இறந்தவனின் ஜீவன் மனஆறுதல் கொள்ளும் .