திவ்ய தேசம்- திருபுள்ளம் பூதங்குடி
திவ்ய தேசம்-10
இந்த பூவுலகில் பிறந்த அனைவருக்கும் எல்லாவிதமான சௌகரியங்களும் வேண்டும் என்றால் அந்த பரிபூரண பாக்கியத்தை அள்ளித் தருபவர் பகவான் ஸ்ரீ நாராயணன் மட்டும்தான்.படைத்தலை பிரம்மா செய்தாலும் அழித்தலை சிவபெருமான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலமாக ‘ காப்பாற்றுதலை ‘ விஷ்ணுவே பொறுப்பேற்று செய்வதால் அவரை வணங்கினால் வாழ்வு , வசதி , யோகம் , அதிர்ஷ்டம் போன்ற அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதோடு பெறுதற்கரிய மோட்சத்தையும் தருபவர் அவர்தான்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல ஜடாயுக்கும் மோட்சம் அளித்தாரே , அந்த புனிதமான இடம்தான் திருபுள்ளம் பூதங்குடியாகும்.
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக – திருவைகாவூர் பேருந்து பாதையில் சுவாமி மலைக்கு 4 கிலோமீட்டர் தொலைவில் , ஸ்ரீ அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் திருபுள்ளம் பூதங்குடி வல்வில் இராமன்கோயில் இருக்கிறது.
- பகவான் புஜங்க சயம்.கிழக்கே முகதரிசனம்.
- தாயார் பொற்றாமரையாள்,ஹேமா அம்புஜவல்லி ,
- தீர்த்தம் ஜடாயுதீர்த்தம்,க்ருத்ர தீர்த்தம்.
- சோபன விமான சேர்வை. பகவான் ஸ்ரீராமபிரானுக்கும் க்ருத்ர ராஜனுக்கும் நேரடியாக தரிசனம் கொடுத்த புண்ணிய ஸ்தலம்.
சீதாபிராட்டியைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஸ்ரீராமனுக்கு ‘ ஜடாயுவின் முனகல் சப்தம் கேட்டது . ஓடிப்போய் ஜடாயுவை ஆசுவாசப்படுத்த முயலும் பொழுது ஜடாயு , ‘ ஸ்ரீராமா உன் பதிவிரதை இராவணேஸ்வரனால் கடத்தப்பட்டு இவ்வழியே சென்றாள். நான் இடைமறித்து வானத்தில் பறந்து கொண்டிருந்த இராவணனோடு போராடி சீதா தேவியைக் காப்பாற்ற நினைத்தேன். ஆனால் இராவணனோ என் இரண்டு சிறகுகளையும் வெட்டி விட்டான் . உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். உன் கையால் எனக்கு மோட்சத்தைக் கொடு ‘ என்று விருப்பப்பட்டுக் கேட்டான் ஜடாயு .
கழுகின் அரசனான ஜடாயுவைக் கட்டித் தழுவி அவன் படும் கஷ்டத்தைக் கண்டு கலங்கிய இராமன். ஜடாயுவின் விருப்பப்படியே மோட்சத்தைத் தந்தான். எனினும் ஜடாயுவின் மரணம் ஸ்ரீராமனை கலக்கிக் கொண்டே இருந்தது.அதனால் உள்ளமும் உடலும் வாட அப்படியே இந்த தலத்தில்தான் சிலகாலம் சிரமபரிஹாரம் செய்து கொண்டதாக வரலாறு.
சீதை இல்லாத ஸ்ரீராமன் என்பதால் – ஸ்ரீராமனுக்கு அருகில் அவனுக்கு உற்றத் துணையாக பூமிபிராட்டி அமர்ந்திருக்கிறாள்.உற்சவ மூர்த்தியான ஸ்ரீராமனுக்கு சதுர்புஜங்கள் உள்ளது.
ஜீயர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்திர மஹாதேசிகனுடைய பிருந்தாவனம் ஒன்று இங்கு உள்ளது.திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் இந்த கோயிலைப் பற்றி இயற்றி இருக்கிறார்.
பரிகாரம்
பதவி உயர்வுக்காக பிரார்த்திப்பவர்கள், பிரகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், உத்யோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்
நேர்மையாக நடந்து எந்தவித நன்மையும் பெறாதவர்கள் ; போட்டி . பொறாமை வஞ்சகத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கும் ஆத்மாக்கள் , பதவி உயர்வு கிடைக்காமல் அவஸ்தை படுபவர்கள் . தேவையில்லாத வம்பு வழக்கில் மாட்டிக் கொண்டு நீதி கிடைக்காமல் திண்டாடுபவர்கள் . இருக்கிற செல்வத்தை தொலைத்து விட்டு மன நிம்மதியின்றி அலைபவர்கள் அனைவரும் – இந்த திரு புள்ளம் பூதங்குடி கோயிலுக்கு வந்து ஸ்ரீராமனுக்கு அபிஷேகம் செய்து பாயாசம் நைவேத்தியம் செய்து உண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் – அவர்களது அனைத்துக் கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி !
கோவில் இருப்பிடம்