வலிப்பு நோய் நீக்கும் ,மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், திருப்பாச்சிலாச்சிராமம்(திருவாசி)
காவிரி வடகரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 67-வது தலமாக விளங்குவது திருப்பாச்சிலாச்சிராமம். இன்றைய நாளில் திருவாசி என்று அறியப்படும் இத்தளத்தில் முயலகன் என்ற கடுமையான வலிப்பு நோயால் அவதிப்பட்ட பெண்ணின் நோயை பதிகம் பாடி திருஞானசம்பந்தர் நீக்கினார். முயலகன் என்பது மிகக் கொடிய நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வு இல்லாமல் கிடப்பர், காக்கை வலிப்பு என்ற நோயாலும்,பிற வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இறைவன் பெயர்: மாற்றுரை வரதீஸ்வரர்,சமீவனேஸ்வரர்
இறைவி பெயர்: பாலம்பிகை,பாலசுந்தரி
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …
வலிப்பு நோய் நீக்கிய வரலாறு
இப்பகுதியை ஆண்டுவந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன்(வலிப்பு நோய்)எனும் தீராத நோய் இருந்தது. எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதையடுத்து பெரியவர்களின் ஆலோசனைப் படி பெருமான் அருள்புரியும் கோயிலில் அவளை கிடத்தி அவன் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை இத்தல இறைவனிடமே விட்டுவிட்டுச் சென்றான்.அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டை சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தளத்திற்கு எழுந்தருளினார். இதை அறிந்த மன்னன் சம்பந்தரை அன்புடன் வரவேற்று, தன் மகளின் நோயை நீக்கி அருள வேண்டினான்.
அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க’ எனும் பதிகம் பாடி இறைவனை வணங்கினார். பதிகத்தின் கடைசி பாடலை பாடி முடித்தவுடன் அந்தப் பெண் முயலகன் நோயிலிருந்து விடுபட்டு மெல்ல எழுந்து தனது தந்தையிடம் சென்றாள்.
சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது.
நரம்புத்தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய் சர்ப்பதோஷம், மாதவிலக்குப் பிரச்சனைகள் போன்றவை இத்தல இறைவனை வழிபட்டு திருஞானசம்பந்தர் இயற்றிய இத்தல பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதினால், நோய் குணமாகும். இவ்வாலயத்தில் உள்ள ஆவுடைய பிள்ளை மண்டபத்தில் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாறு விளக்கும் சிற்பங்களும் உள்ளன.
இத்தலத்தில் இறைவன் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் இந்த பெயர் வரக்காரணமாக உள்ள வரலாறு சுவையானது.
இத்தலம் வந்த சுந்தரர் சிவனிடம் பொன் கேட்டார். அவரைச் சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர் சிவன் இருக்கிறாரா இல்லையா என்ற அர்த்தத்தில் இகழ்ந்து, வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.
பதிகத்தின் கடைசி பாடலில் திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரான் இவரை பேசிய பேச்சுக்கள் உண்மையிலே ஏசினவும் அல்ல,இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின் அவற்றை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அது செய்யாராயினும் அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரின்றி வேறொருவர் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
சிறிது நேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன் பொன்முடிப்பு தரவே அந்தப் போன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்து தருவதாக சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்து சோதித்துப் பார்த்துவிட்டு பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார் பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்ற போது சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியத்தையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்ந்தார். தங்கத்தை உரைத்து காட்டியதால் சிவனுக்கு ‘மாற்றுரைவரதர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், கடவூர் ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப் பெற்ற இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு சுவாமிக்கு தினசரி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 48 நாள்கள் இத்தலத்திலுள்ள நடராசருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள் வலிப்பு நோய், வயிற்றுவலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம்.
கோயிலில் உள்ள மாற்றுரைவரதேஸ் வரரை திங்கள் கிழமைகளில் இலுப்பை,நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை உயரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வலிப்பு நோயை நீக்கியருளிய திருஞானசம்பந்தரின் இத்தல பதிகம்:-
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க
சுடர்சடை சுற்றி முடித்து
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ,
ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம்எலாம் செய்து,
பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ! மங்கையை வாட மயல்
செய்வதோ இவர் மாண்பே?
நாணோடு கூடிய சாயினர் எனும்
நகுவர் அவர்,இருபோதும்
ஊணொடுகூடிய உட்குநகையால்
உரைகள் அவைகொளவேண்டா,
ஆணொடுபெண்வடிவு ஆயினர், பாச்சில்
ஆச்சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ ,பூங்கொடி வாடாப்
புனைசெய்வதோ, இவர்பொற்பே.
Google Map :