ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026
மகரம்
சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாவது இடத்தில் சனி பகவான் இருக்கிறார். வருடத்தின் நடுவே ஜூன் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்துக்கு வருகிறார். அவர் ஏழாம் பார்வை உங்கள் ராசியிலே பதிகிறது. மேலும் வருடத்தின் கடைசியில் உங்கள் ஜென்ம ராசிக்கு ராகுவும், ஏழாம் இடத்துக்கு கேதுவும் வர இருக்கிறார்கள். இத்தகைய அமைப்பின் காரணமாக இது உங்கள் வாழ்வில் எதிர்பார்ப்புகள் ஈடேறும் காலகட்டமாக இருக்கும். அதே சமயம் வார்த்தைகளில் நிதானமும், செயலில் பொறுமையும் உயர்வுகளை நிலைக்கச் செய்யும்.
அலுவலகத்தில் இதுவரை சந்தித்து வந்த இன்னல்கள் நீங்கத் தொடங்கும். திறமைக்கு உரிய மேன்மை தடை நீங்கி கைகூடும். உங்கள் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மற்றவர்கள் குறையை பெரிது படுத்துவதை தவிர்த்தால் உங்கள் பெருமை தொடர்ந்து உயரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்புகளால் பெருமை ஏற்படும்.
இல்லத்தில் இனிமை நிறையும். இதுவரை இருந்த சங்கடங்கள் படிப்படியாக குறையும். தடைபட்டிருந்த விசேஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்கும். பழைய கடன்கள் பைசலானாலும், புதிதாக சுபகாரிய கடன்கள் ஏற்படும். தேவையில்லாத கேளிக்கைகளை தவிர்த்தால் சேமிப்பு நிலைக்கும். உறவுகள் இடையே இருந்த சுனக்கம் மறையும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.வாரிசுகளுடன் மனம் விட்டு பேசுங்கள். புதிய பொருள் எதையும் உரிய பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துங்கள்.
அரசு மற்றும் அரசியல் துறை சார்ந்தவர்கள் ஆதரவை நிரந்தரமாக தக்க வைத்துகலாம். சிலருடைய மறைமுக சூழ்ச்சி உங்கள் தகுதிகளை திரையிட்டு மறைக்க பார்க்கும், அதை உணர்ந்து பொறுமையாக இருப்பதும், எந்த சமயத்திலும் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
கலை மற்றும் படைப்புத் துறையினருக்கு திறமைகள் பளிச்சிடும் வருடமாக இந்த வருடம் இருக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரத் தொடங்கும். திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் பெருமையை ஊரே பேசும்.
பெண்களுக்கு சீரான நன்மைகள் ஏற்படக்கூடிய ஆண்டாக இந்த வருடம் அமையும். அந்த நிம்மதி நிலைக்கிற வார்த்தைகளில் நிதானம் ரொம்பவே அவசியம். எந்த சமயத்திலும் குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியசம் செய்ய மூன்றாம் நபரை கூப்பிட வேண்டாம். வாரிசுகளை நண்பர்களாக பாவித்து நாசுக்காக எதையும் எடுத்துச் சொல்லுங்கள். பணி புரியும் பெண்கள் குடும்ப விஷயம் அலுவலகத்தில் பேசுவதை தவிருங்கள். எதிர்பாலரிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.
உடல் நலத்தில் தொண்டை, வயிறு, பற்கள், உணவுக்குழாய், தொற்று நோய் உபாதைகள் வரலாம் கவனமுடன் இருங்கள்.
இந்த வருடம் முழுவதும் விநாயகரையும், இஷ்ட மகானையும் வழிபடுங்கள். முடிந்தால் ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை வழிபட்டு வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் மிகுதியாக இருக்கும்.













