குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-மகர ராசி
சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!!!
இது வரை உங்களுடைய ஜென்ம ராசியான மகரத்தில் இருந்த குருபகவான். தற்போது இரண்டாம் இடமான கும்பத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். இது ஜென்ம குருவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் அமைப்பு என்று சொல்லலாம்.
இந்த சமயத்தில் குருவின் விசேஷ பார்வைகளான 5, 7, 9-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு முறையே 6,8, பத்தாமிடத்தில் பதியும். இத்தகைய அமைப்பின் காரணமாக இது உங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். இந்த சமயத்தில் வாக்கில் இனிமையும், செயல்களில் நேர்மையும் இருந்தால் எதிர்காலம் ஏற்றம் பெறும்.
மகர ராசியினரின் பொதுவான குணநலன்கள்:
- மகர ராசியின் அதிபதி சனி என்பதால் மகர ராசியினர் எவ்வளவு படித்திருந்தாலும் சற்று மந்தமானவர்களாக இருப்பார்கள்.
- பலரது குடும்பம் சற்று மூடு மந்திரமாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத குடும்பமாக இருக்கும்.
- இவர்களுடைய இளைய சகோதரர் படிப்பாளியாக, அலைச்சலில் விருப்பம் உடையவராக இருப்பார்.
- சிலரது தாய் சற்று கோபம் குணம் கொண்டவராக இருப்பார்.
- இவர்களுடைய பரம்பரை அழகுணர்ச்சி உடையது.
- இவர்களுடைய வேலை புத்தியை அடிப்படையாகக் கொண்டது .
- வாழ்க்கைத்துணை வெகு சுறுசுறுப்பாக-பரபரப்பாக எப்போதும் அலைந்து கொண்டே இருப்பார்.
- இவர்களுக்கு ஏற்படும் அவமானம் தந்தை அல்லது அரசு, அரசியல் சார்ந்தாக இருக்கும்.
- தந்தையின் நிலை மிக மேன்மையானதாக இருக்கும்.
- இவர்களுடைய தொழில் கலை, கட்டடம், பயணம், சார்ந்ததாக அமையும்.
- சிலரது மூத்த சகோதரர் சற்று தீய குணம் கொண்டவராகவும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவராகவும் இருப்பார்.
கும்ப குருவின் பலன்கள்:
இதுவரையில் குரு மகர ராசியில் அமர்ந்து இருந்தார் இப்போது இரண்டாம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி ஆகிறார். குரு மகர ராசிக்கு 12 மற்றும் மூன்றாம் வீட்டின் அதிபதி.
இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். எனவே இந்த குருபெயர்ச்சியில் மகர ராசியினரின் வருமானம் பெருக போகிறது. வாக்கில் தெளிவு உண்டாகும். வாக்கில் தெளிவு எனில் மனமும் புத்தியும் ஒரு நிலைப்படுத்தபடுகிறது என்று அர்த்தமாகிறது. குடும்பம் மேன்மையடையும்.
வாகனத் தொழில் கொண்டோர் நல்ல லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் பணப்புழக்கம் அதிகரிக்க காண்பர். மறுமணம் வேண்டுவோர் நல்லவிதமாக நடக்க காண்பர். பள்ளிக் குழந்தைகள் கல்வி விஷயமாக நினைத்த விதத்தில் நினைத்தபடியே நன்மை பெறுவர்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் அத்தனையும் செலவழிந்து விடும். வீடு மாறுவது விஷயமாக செலவு உண்டு .சிறிய, பெரிய பயணங்கள் செலவை தரும். சிறு முதலீடுகள் உண்டு. கைபேசி மாற்ற வேண்டி வரும். இளைய சகோதரம் சம்பந்தமான செலவுகள் உண்டு. சில ஒப்பந்த,குத்தகைக்கு வைப்புத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
குருவின் பார்வை பலன்கள்
குருவின் 5-ம் பார்வை பலன்:
மகர ராசிக்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்த குரு பகவான் தனது 5ம் பார்வையால் 6-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 6-ஆம் இடம் என்பது கடன், நோய், எதிரி ஸ்தானம்.
குருவிற்கு பார்த்த இடத்தை பெருக்கும் குணம் உண்டு. எனில் இந்த பார்வையால் கடனை அதிகரிப்பரா? நோயை பெருக்குவாரா ? எதிரிகளை எகிற செய்வாரா? அதிக வேலை சுமையை தருவாரா? என கேட்பவர்களுக்கு ‘ஆம்’என்பதே பதில்.
குருவின் பார்வைக்கு சுபத் தன்மை உண்டு. முதலில் வீடு வாங்க கடன் வாங்க செய்வார். சிலர் வீட்டில் புனரமைப்புக்கு கடன் வாங்குவீர்கள். ஒரு வாகனத்தை கொடுத்து வேறு வசதியான புது வாகனம் வாங்குவீர்கள்.
ஆறாமிடம் ரோக ஸ்தானம் இதனை 12மிட குரு பார்க்கும்போது சற்று மருத்துவ செலவுகளை கொடுப்பார். எனினும் பயப்படும்படியாக இல்லாமல் நோயின் ஆரம்பத்தில் இருக்கும் போது மருந்து எடுத்துக் கொள்வதால் தீவிரமான நோய் இருக்காது. இருப்பினும் உங்களின் பயம் மருத்துவரையும் மருந்தகங்களையும் செழிப்பாகும்.
குருவின் 7-ம் பார்வை பலன்:
மகர ராசியில் இரண்டாம் இடத்தில் அமர்ந்த குரு தனது ஏழாம் பார்வையால் 8-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 8-ஆம் இடம் என்பது நஷ்டம், அவமானம் அபகீர்த்தி ஸ்தானம். இத்தகைய தன்மை கொண்ட ஸ்தானத்தை குரு பார்வையால் அளவிடுகிறார். குருவின் பார்வை சுபமானது. பாதுகாப்பைத் தருவது. காப்பாற்றுவது . குரு பார்க்க கோடி நன்மை அல்லவா?
மகர ராசியினர் சிலருக்கு இந்த குரு கும்பத்துக்கு வரும்வரையில் ஒரு வித உயிர் பயம் இருக்கும். ஏதாவது ஆகிவிடுமோ? நம் குடும்பத்தின் கதி என்ன? யார் பார்த்துக் கொள்வார்கள்? என எப்போதும் குழம்பிய வண்ணம் பயந்து கொண்டே இருப்பர். இந்த குருபெயர்ச்சி நடந்தவுடன் இவர்களையுமாறியாமல் மன தைரியம் வந்துவிடும்.
அரசு சம்பந்த வரி, வட்டி, கிஸ்தி என எல்லாவற்றையும் பாக்கியில்லாமல் கட்டிவிடுங்கள். இதனால் அரசு மூலம் ஏற்படும் அவமானத்தில் இருந்து தப்பிக்கலாம். குரு பார்வை பெற்ற எட்டாம் இடம் ஆயுள் விருத்தியை குறிக்குமென்பது என்பது ஜோதிட விதி. இந்த விதியின் மூலம் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவை தவிர்க்கப்படும்.
குருவின் 9-ம் பார்வை பலன்:
மகர ராசிக்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்த குருபகவான் தனது 9ம் பார்வையால் 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். இந்த ஒரு பார்வைதான் நல்ல இடத்தில் பதிகிறது.
பெருக்கத்திக்குரிய குரு 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும்போது தொழில் வளம் பெருகும். தொழில் செய்யும் இடம் விஸ்த்திரமாகும்.கொழிக்கும்.
நீங்கள் செய்யும் செயல் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும். இதன் மூலம் அரசாங்க சன்மானம், பதவி, பட்டம் தேடி வரும். சமையல் போட்டியில் பங்குபெறும் மகர ராசியினர் வெற்றிபெற வாய்ப்புண்டு. அது அசைவ சமையல் மூலம் கிடைக்கும். தொழிலில் வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். நீங்கள் பிறந்த பூர்வீக இடம் உங்களது செயலால் கௌரவம் அடையும்.
பரிகாரம்:
ஒருமுறை பஞ்சவடி திருத்தலத்திற்கு சென்று அனுமனை ஆராதியுங்கள். முடிந்தால் வெண்ணெய், வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.
மாதம் ஒரு சனிக்கிழமை பக்கத்திலுள்ள நரசிம்மரை வணங்குங்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கை உன்னதமாகும்.