குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கடகம்
யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பு கொண்ட கடகராசி நேயர்களே, சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6, 9 க்கு அதிபதியான குருபகவான் வரும் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மாற்றம் உண்டாகும்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் எல்லாம் முழுமையாக விலகி எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையக்கூடிய ஒரு நிலையும், நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க கூடிய குருபகவான் 3, 5, 7 ஆகிய ஸ்தானங்களை தனது சிறப்பு பார்வையாக பார்ப்பதால் உங்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் பரிபூரண வெற்றி கிடைக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்து வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலமும், புது மணத் தம்பதிகளுக்கு அழகிய குழந்தைகள் பிறக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு.
திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு நல்லவரன் அமைந்து மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட மங்களகரமான சுபகாரியங்கள் தற்போது கைகூடக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 3ம் இடம் (தைரியம் ,பங்குச்சந்தை),5ம் இடம் (பூர்வ புண்ணியம் ,காதல் ),7ம் இடம் (நட்பு ,திருமணம் ) |
உங்கள் ராசிக்கு 3-ல் கேது 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலமாக ஆதாயம் தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி நல்ல வாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இவ்லா விட்டாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
தொழில்ரீதியாக இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். தொழில் அபிவிருத்திக்காக எதிர்பார்க்கின்ற பொருளாதார உதவிகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமும் புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் விலகி நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியினுடைய பாராட்டுதலை பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சிறப்பாக கையாளுவீர்கள்.
உங்கள் ராசிக்கு இக்காலத்தில் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சனி அமையப் பெற்று அஷ்டமச்சனி நடப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் நல்லது. முடிந்தால் வீண் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடுகள் எடுத்துக் கொள்வது உத்தமம். இயற்கை உணவுகளை உட்கொள்வதும், சிறு உடல் பாதிப்பு என்றாலும் உடனடியாக அதற்கு முக்கியத்துவம் தருவதும் நல்லது. அஷ்டமச்சனி நடப்பதால் இரவு நேரங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் சனி 8-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதாரரீதியாக சற்று நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் கேது 3-ல், ராகு 9-ல் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும் வாய்ப்பு, பெரிய மனிதர்களின் உதவியால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் விலகும் சூழ்நிலை ஏற்படும்.
குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்கள் தக்க. சமயத்தில் உதவுவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு கெளரவமான பதவி உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும் உடன் பணிபுரிபவர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பொதுவாக கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசிக்கு 8ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது. ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது. சனிப்ரீதியாக அனுமனை யும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9
நிறம்: வெள்ளை, சிவப்பு
கிழமை: திங்கள், வியாழன்
கல்: முத்து
திசை: வடகிழக்கு
தெய்வம்: வெங்கடாசலபதி.