குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கும்பம்
உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு தன லாப ஸ்தானாதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த பொருளாதாரரீதியான நெருக்கடிகள் இனி படிப்படியாக குறையும்.
பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களின் அன்றாடத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். கடந்தகால நெருக்கடிகள் சற்றுக் குறைய கூடிய நிலையானது வரும் நாட்களில் உண்டு. ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடக்கிறது. சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 2-லும், கேது 8-லும் சஞ்சாரம் செய்வதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எந்த ஒரு செயலில் ஈடுபடுகின்ற பொழுதும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் உத்தமம்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டால் தான் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது
தொழில், வியாபாரத்தில் கடந்த ஆண்டு ஒப்பிடுகின்றபொழுது வரும் நாட்களில் படிப்படியான முன்னேற்றங்கள் இருக்கும் என்றாலும் வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் ஒரு சில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் சில முக்கிய செயல்களை குறித்த நேரத்தில் செய்துமுடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் தவறவிடாமல் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த சட்ட தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் அசையும் அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு வண்டி வாகனங்கள் மூலமாக தேவையில்லாத விரயங்கள் உண்டாகும். ஒரு சிலர் வீடுகளை பழுது பார்ப்பதற்காக செலவு செய்ய நேரிடும்.
உத்தியோக ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து தற்போது மன நிம்மதியுடன் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான சன்மானம் கிடைக்கவில்லையே என்று ஏங்காமல் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதும், மற்றவரிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பதும் நல்லது குறிப்பாக வயது மூத்தவர்களிடம் அதிலும் குறிப்பாக அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு உங்களுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிக மிக நல்லது. ஒரு சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
குரு பகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களைச் சிறப்புடன் செய்து முடிக்கமுடியும் கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது பணவரவுகள் சுமாராக இருக்கும். கடன்கள் படிப்படியாகக்குறையும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 12ம் இடம் (விரயம்),10ம் இடம் (தொழில்) ,8ம் இடம் (ஆயுள்) |
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் வேலையாட்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும் கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்நீச்சல் போட்டாவது இலக்கினை அடைந்துவிடமுடியும் உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் பணியில் திருப்தியான நிலையினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலை வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது பொதுவாக பேச்சுகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம் மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் விரதமிருந்து நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது எழை எளிய மாணவர்களுக்கு ஆடைகள் புத்தகங்கள் போன்றவற்றை தாளம் செய்வது உத்தமம் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது நல்லது.
ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்து ஜென்மச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்துவழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வதும் நல்லது.
உங்களுக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. சர்பேஸ்வரரை வழிபடுவது, பைரவரை வணங்குவது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8,
கிழமை: வெள்ளி, சனி
திசை: மேற்கு
கல்: நீலக்கல்,
நிறம்: வெள்ளை நீலம்.
தெய்வம்: ஐயப்பன்