குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மேஷம்
தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்தில் இருந்தும் காப்பாற்றக் கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷ ராசி நேயர்களே, செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமும் ஆண்டு கோள் என வர்ணிக்கபடக்கூடிய ‘குரு பகவான்’ திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
இந்த தருணத்தில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான ‘சனி பகவான்’ உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், சாயா கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும்.
உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேற இருக்கிறது. பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையக் கூடிய அமைப்புகள் வரும் நாட்களில் உண்டு.
அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் அமையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தற்போது இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்க கூடிய குருபகவான் 6, 8, 10 ஆகிய ஸ்தானங்களை தனது சிறப்பு பார்வையாக பார்வை செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வம்பு,வழக்குகள் எல்லாம் விலகக் கூடிய அமைப்பும், மன நிம்மதியுடன் எதிலும் செயல்படக்கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 6ம் இடம் (நோய் ,கடன் ,வம்பு ),8ம் இடம் (திடீர் அதிஷ்டம் ,அவமானம் ),10ம் இடம் (தொழில் ) |
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். மனைவி,பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும்.
தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். தொழில் நிறுவனத்துக்கு புதிய நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது என கூறினால் மிகையாகாது. புதியவாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும்
பெண்களுக்கு மனமகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக ஆதாயம் தரக்கூடிய செய்திகள் கிடைக்கும் பூர்வீக சொத்துவகையில் நீங்கள் எதிர்பார்த்த நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகி சுமூக நிலை உண்டாகும்.
குரு பகவான் வக்ர கதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும்.
பணம் பலவழிகளில் தேடிவரும் பொன், பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் எதையும் எதிர் கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க தாமதநிலை ஏற்பட்டாலும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 12-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது; அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, விஷ்ணுவை வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9
நிறம்: ஆழ்சிவப்பு,
கிழமை: செவ்வாய்,
கல்: பவளம்,
திசை : தெற்கு,
தெய்வம்: முருகன்