குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-கன்னி
கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) பாக்கிய ஸ்தனமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள்.
குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 5 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் எல்லாம் குறையும்.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எல்லா செயலிலும் முழுமையான வெற்றியினை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் மூலமாக சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உத்தரவுகளை பெறமுடியும். தொழில் தொடர்பாக இருந்து வந்த வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும்.
உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலை பளு குறைந்து மன மகிழ்ச்சியுடன் பணிபுரிய முடியும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்து முடிக்க முடியும். விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உங்களுடைய தனித்திறனை சிறப்பாக வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். ஒரு சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு.
வெளியூர், வெளிநாடு மூலமாக கூட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும் அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் கூட வரும் நாட்களில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியிலிருந்து வந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து நிம்மதி ஏற்படும். இந்த நேரத்தில் சர்ப கிரகமான ராகு 7-லும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒருசில நேரங்களில் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்த்துவிட்டு வளமான பலன்களை அடைய முடியும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 1ம் இடம் (ஜென்மம்),3ம் இடம் (தைரியம் ),5ம் இடம் (பூர்வ புண்ணியம் ) |
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நன்மை, தீமை கலந்த பலன்களை அடைய முடியும் என்றாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிபெறுவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.
பொருளாதாரநிலை சற்று சாதகமாக அமைவதால் எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளலாம். புத்திரவழியில் இருந்த கவலைகள் மறையும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் பிரச்சினைகளின்றி வசூலாகும்.
‘தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளின்றி செயல்படமுடியும். வேலையாட்களை சற்று கவனத்துடன் கையாண்டால் தொழிலில் முன்னேற்றமான பலனை அடைய முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேச்சுக்களில் கவனமுடன் செயல் பட்டால் நற்பலனை அடையமுடியும். வெளியூர் பயணங்களால் பொருளாதாரரீதியாக வளர்ச்சி அடைவீர்கள்.
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 7, 8
நிறம்: பச்சை, நீலம்
கிழமை: புதன், சனி
கல்: மரகத பச்சை.
திசை: வடக்கு.
தெய்வம்: ஸ்ரீவிஷ்ணு.