சூரியன் 3-ல் இருந்தால் (3il Suriyan)
3-ல் சூரியன் நிற்பவர்கள் விடாமுயற்சி உடையவர்கள்.தனித்து சூரியனால் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. சூரியனுடன் புதன் சம்பந்தம் பெறும்போது அரசின் சட்ட திட்டங்களுக்கான முக்கிய முறையான ஆவணங்களை தவற விடுவார்கள்.
புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு வாங்க விற்க முயற்சிப்பவர்கள். நிலத்தை அடமானம் வைத்து பணம் பெறுபவர்கள் சிலருக்கு அசலும் வட்டியும் கட்டியும் நிலத்தை கடனுக்காக இழக்கும் நிலையும் உருவாகிறது.
இது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருப்பவர்கள் சுய ஜாதக அமைப்பை அறிந்து நிலத்தை அடமானம் வைக்க வேண்டும் .சூரியன் புதன் ராகு சம்பந்தம் பெறும்போது அரசின் ஆவணங்களில் தானே திருத்தம் செய்து பயன்படுத்துவார்கள், பாஸ்போர்ட், பள்ளி சான்றிதழ்களை தங்களுக்கு சாதகமாக திருத்திக்கொள்வார்கள் . இந்த கிரக சேர்க்கை 8க்கு 8 எட்டாம் இடமான மூன்றாம் இடத்தில் இருப்பதால் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் அரசு தண்டனையை அனுபவிப்பார்கள்.
3-ல் சந்திரன் இருந்தால் (3il Chandiran)
மூன்றில் சந்திரன் நின்றால் அடிக்கடி வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள். பயணத்தில் ஆவணங்களை தொலைப்பார்கள். அல்லது வைத்த இடம் மறந்து போகும், அல்லது ஆவணங்களில் திருத்தம் இருக்கும். சிலர் எப்பொழுதும் ஒரே மாதிரியாக கையெழுத்திடாமல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக கையெழுத்திட்ட பிரச்சனை சந்திப்பார்கள்.
சிலருக்கு ஆவணங்களின் பெயரின் எழுத்துப்பிழை இருக்கும். சந்திரனுடன் புதன் சம்பந்தம் பெறும் போது தாய் மாமனுடன் சொத்தில் உரிமை மாற்றம் செய்யும்போது கருத்து வேறுபாடு வரும்.
சந்திரனுடன் புதன் ராகு சம்பந்தம் பெறும்போது ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகளால் மன நோய் ஏற்படுகிறது.
3-ல் செவ்வாய் இருந்தால்(3il Sevvai)
மூன்றில் செவ்வாய் இருந்தால் உடன்பிறந்த சகோதரர்களுக்கு சொத்தை மாற்றி எழுத நேரும், செவ்வாய்க்கு புதன் ராகு சம்பந்தம் இருக்கும் போது சொத்தில் அல்லது பாத்திரத்தில் அல்லது சொத்தை மாற்றி எழுதுவதில் வில்லங்கம் ஏற்படும்.இதனால் சகோதர சகோதரிகள் ஒற்றுமை குறைவு ஏற்படும்
3-ல் புதன் இருந்தால்(3il Pudhan)
மூன்றில் புதன் இருப்பவர்களுக்கு அடையாள அட்டையில் இருக்கும் முகவரியும் குடியிருக்கும் முகவரியும் ஒன்றாக இருக்காது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பார்கள் அல்லது அடிக்கடி வங்கிக் கணக்கை மாற்றிக் கொண்டிருப்பார்கள் அல்லது பராமரிக்காத வங்கிக் கணக்கு வைத்திருப்பார்கள்.
பெற்றோர்கள் வைத்த பெயரை மாற்றுவார்கள். திருமணப் பத்திரிக்கையில் பிழை இருக்கும். அடிக்கடி பள்ளிக்கூடத்தை மாற்றிக்கொள்வார்கள். செல்போன் நம்பரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பத்திரப்பதிவில் பிரச்சனை இருக்கும்.
புதனுக்கு ராகு சம்பந்தம் இருப்பவர்கள் நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஜாமீன் பத்திரத்தாள் அல்லது ஒப்பந்த பத்திரம் வகையில் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த கிரக சேர்க்கை இருக்கும் சில திருமணமான ஆகாத மற்றும் திருமணமான இளம் பெண்கள் தவறான நட்பில் கடிதங்கள் அல்லது போட்டோக்கள் மற்றும் நட்புக்கு அடையாளமான ஆவணங்கள் மிரட்டப்படுகிறார்கள்.
3-ல் குரு இருந்தால்(3il Guru)
மூன்றில் குரு இருப்பவர்கள் ஆவணங்களை முறையாக கவனமாக பாதுகாப்பவர்கள். கோவில் மற்றும் தர்ம ஸதாபனங்களில் ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள். மாமனாரின் ஆவணங்களை பாதுகாப்பவர்கள்.
குருவுடன் புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்கள் பேராசையில் நிர்வாகத்தில் முறைகேடு செய்து கெட்ட பெயரைத் தேடிக் கொள்வார்கள்.
3ல் சுக்கிரன் இருந்தால்(3il Sukkiran)
3ல் சுக்கிரன் இருப்பவர்கள் நகை சீட்டு மற்றும் ஏல சீட்டு கட்டிய ரசீதை தொலைப்பவர்கள். சுக்கிரனுக்கு புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்கள் போலி கவுரவம் மற்றும் ஆடம்பர வருமானத்திற்கு சம்பந்தமில்லாத பெரும் கடனை வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டு வாங்குதல், மதிப்புமிக்க நகைகளை நண்பர்கள் மூலம் அடமானம் வைத்தல், போன்றவற்றால் வெளியே சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
3-ல் சனி இருந்தால்(3il Sani)
மூன்றில் சனி இருப்பவர்கள் சம்பந்தமில்லாத பழைய ஆவணங்களை எல்லாம் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். முன்னோர்களின் முக்கியமான ஆவணங்களை வைத்து இடத்தை மறப்பவர்கள் .வேலைக்கான நேர்காணல் அட்டையை, அப்பாயின்மென்ட் ஆடரை தவற விடுபவர்கள்.
சனிக்கு புதன் ராகு சம்பந்தம் இருப்பவர்கள் தொழில் கூட்டாளிகளால் ஜாமீன் போடுதல் மற்றும் போலி ஆவணங்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.தொழில் போட்டியாளர்கள் விரிக்கும் மாய வலையில் சிக்கி சட்ட சிக்கலை சந்திக்க நேர்கிறது. தொழிலுக்காக வெற்றுக் காசோலை கொடுப்பது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்து வம்பில் சிக்கி மன உளைச்சலை சந்திப்பது போன்ற இன்னல்களை அடைகிறார்கள்.
3-ல் ராகு இருந்தால்(3il Rahu)
மூன்றில் ராகு இருப்பவர்கள் ஆவணங்களில் சட்டத்திற்குப் புறம்பான திருத்தம் செய்பவர்கள். சட்டத்திற்குப் புறம்பான ஏலச்சீட்டு நடத்துதல் தவறான பணபரிமாற்றம் பணத்தை பன்மடங்காக பெருக்கித் தருதல், ஏடிஎம் கார்டு இல்லாமல் மற்றவர்கள் கணக்கில் உள்ள பணத்தை சுவாகா செய்வது போன்ற ஆதாரம் இல்லாத தொழில் செய்து சட்டம் சிக்குபவர்கள்.
நல்லவர்களாக நடித்து பிறரை ஏமாற்றுபவர்கள். ஒரு குடும்பத்தை வாழ விடாமல் செய்பவர்களுக்கு பரிகாரம் சொன்னால் பிரபஞ்சம் ஏற்றுக்கொள்ளாது.
3-ல் கேது இருந்தால்(3il kethu)
மூன்றில் கேது உள்ள ஜாதகருக்கு ஆவணங்கள் சட்ட சிக்கல் மற்றும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது .கேதுவிற்கு புதன் சம்பந்தம் இருந்தால் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சிக்கல் போன்ற சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேர்கிறது.
மேற்கூறியவைகள் இல் இருந்து நாம் ஒன்றை தெளிவாக உணரமுடிகிறது அதாவது மூன்றாம் இடத்தில் நிற்கும் தனித்த கிரகம் ஏற்படுத்தும் பாதிப்பை விட புதன் மற்றும் ராகு இணைவதால் ஏற்படும் பாதிப்பு ஜாதகருக்கு போராட்டமான வாழ்க்கையை தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.