ஜென்ம நட்சத்திரத்தின் ரகசியங்கள்:
ஜோதிடத்தில் அஸ்வினி முதல் ரேவதி வரை என மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. சந்திரன் தினமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பெயர்ந்து செல்வது வழக்கம். அப்படி நாம் பிறக்கும் நாளில் அந்த நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கின்றாரோ அதுதான் நம்முடைய பிறந்த நட்சத்திரம் அல்லது ஜன்ம நட்சத்திரம் என்று சொல்கின்றோம்.
ஒவ்வொரு ராசிக்கும்,நட்சத்திரத்திற்கும் அதற்கான ஒவ்வொரு அதிபதிகள் உள்ளனர். அப்படி நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குவார்.
நம் கர்மவினைக்கு ஏற்றவாறு நம் உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு காரணமாக திகழ்வார். இதற்கும் ஜென்ம நட்சத்திர அதிபதிகள் காரணம் ஆவார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம்:
நாம் தற்போது கொண்டாடும் பிறந்தநாள் விழா ஆங்கிலேயர்கள் முறைப்படி ஒவ்வொரு ஆண்டின் அதே தேதியில் கொண்டாடி வருகின்றோம். ஆனால் அது தவறு என்கிறது நம் ஜோதிட குறிப்புகள்.
ஒருவர் தன் பிறந்த மாதத்தில் அவர் பிறந்த நட்சத்திரத்தை தான் முக்கியமானதாக கொள்ள வேண்டும். அவர் தனது பிறந்த நாள் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த மாதத்தின் அதே நட்சத்திரத்தில் கொண்டாடுவதுதான் நல்லது. அப்போது தான் கிரகங்கள், நட்சத்திரங்கள் அவர் பிறப்பின் போது இருந்தது போலவே அமைந்திருக்கும்.
ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியது:
குறிப்பாக ஆலய வழிபாடு செய்வதற்கு ஒவ்வொரு மாதத்தில் வரும் அவரின் ஜென்ம நட்சத்திரத்தில் செய்வது மிகவும் விசேஷமானது.
ஒவ்வொரு மாதமும் வரும் உங்களுக்கான நட்சத்திரத்தில் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்வதன் மூலம் உங்களின் துன்பங்களை பெருமளவு குறைக்க முடியும்.
ஜென்ம நட்சத்திரத்தில் ஒருவர் இறைவனை வழிபட்டால் அவருக்கு அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். பிறந்த நட்சத்திர வழிபாட்டின் ரகசியமும் இதுதான்.
இதன் காரணமாக நீங்கள் உங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தை ஒருபோதும் தவறவிட்டு விடாதீர்கள்.
அன்றைய தினம் இறைவனுக்கு அர்ச்சனை செய்தால் நலம். குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது நல்லது. உங்கள் ஜாதகத்தை பொறுத்து நீங்கள் எந்த கடவுளை வழிபட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி உங்கள் நட்சத்திரத்தில் வழிபாடு செய்வதால் தீமைகள், தோஷங்கள், கர்ம வினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
பரிகாரம் செய்ய:
ஒருவர் ஏதேனும் ஒரு காரணத்திற்காக பரிகாரம் செய்ய விரும்பினால் ஒவ்வொரு மாதத்தில் வரும் அவரின் ஜென்ம நட்சத்திரத்தில் பரிகாரம் செய்வதால் அனைத்து தோஷங்களும் விலகும் உகந்த நாளாக இருக்கும்.
பல்வேறு பலன்கள்:
உங்களின் ஜென்ம நட்சத்திரத்தில் தெய்வத்திற்கு பூஜை முடித்து ஏழை எளியோருக்கு உங்களால் முடிந்த தானங்களை செய்தால் பிதுர்களின் ஆசி கிடைக்கும்.
பிறந்த நட்சத்திரத்தில் தொடர்ந்து இறைவனை வழிபாடு செய்து வந்தால் அவர்களுக்கு கண்திருஷ்டி ஏற்படாது.
உங்களுக்கு ஏற்படும் தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.
உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் உங்கள் தகுதிக்கு ஏற்ப கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை, பூஜைகள், அர்ச்சனை செய்வது நலம்
வசதி இருப்பவர்கள் அந்த தினத்தில் ஹோம வழிபாடு கூட செய்து கூடுதல் பலனை பெறலாம்.