மகாலட்சுமி
நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்தால் போதும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். ஆலயத்தில் செல்வந்தர் ஒருவர் அம்மனுக்கு எல்லா அபிஷேகமும் செய்து, தனது வீட்டுக்கு மகாலட்சுமி குடி வர வேண்டும் என்று வேண்டுவார். அவருடன் வந்த ஊர்தி ஓட்டுநரும் தனக்கு செல்வம் வர வேண்டும் என்று வேண்டுவார்.
மகாலட்சுமி யார் வீட்டுக்கு செல்வாள்? ஏழை-எளியவர்கள், பணக்காரர்கள் அனைவருக்கும் மகாலட்சுமி துணைக்கு வர தயாராக இருக்கிறாள். ஆனால் ஏன் அவள் எல்லா இல்லங்களுக்கும் வருவதில்லை என்றாள், பொதுவாக நமது எண்ணம் கடலளவு ஆசை கொண்டதாக உள்ளது. பணத்தின் மேல் மட்டுமே பற்று உள்ளது. உற்றார், உறவினர்கள் மீது பற்று இருப்பதில்லை. நமது குழந்தைகள் மீது மட்டும் அதிக பற்றிருக்கும்.மற்ற குழந்தைகளின் மீது இருக்காது. நமது தேவைக்காக மட்டுமே எதையும் செய்கிறோம்.
பெரும் தனவந்தர் ஒருவர் இருந்தார் .அவரிடம் பல தலைமுறைகளாக சேர்த்து வைத்த பெரும் செல்வம் இருந்தது. மகாலட்சுமி அவரது கனவில் தோன்றி “தனவந்தரே,உமது முன்னோர்கள் செய்த புண்ணியங்களால் உங்கள் வீட்டில் நான் குடிகொண்டு வறுமை என்பதை அறியாமல் வயது முதிர்ந்த இந்த காலம் வரை உமக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தேன். உமது முன்னோர்கள் செய்த புண்ணியம் அனைத்தும் நாளையுடன் தீர்ந்துவிடும். நீ புண்ணியம் எதுவும் செய்யாமல் வாழ்ந்து வருவதால் நான் உமது வீட்டை விட்டுப் போய் விடுவேன். அதற்கு முன் ஒரு வரம் மட்டும் நீ கேட்கலாம் என்று சொன்னாள்.உடனே தனவந்தர் ,”தாயே பொன்னும் பொருளும் வேண்டும்” என்று கேட்டார். அத்தனையும் மகாலட்சுமி கொடுத்தாள்.
மறுநாள் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டாள் மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியவுடன் அவள் வழங்கிய செல்வங்கள் அனைத்தும் நிலைக்காமல் போய்விட்டன. இது கதை போன்று தோன்றினாலும் பணக்காரர்களாக இருந்து ஏழைகளாக மாறிய பல குடும்பங்களை இன்றும் நாம் காண முடிகிறது. எனவே மகாலட்சுமி நம் வீட்டில் குடியேற வேண்டும் என்றால் அதிக செலவில் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை. எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்கின்றார்களோ, எந்த குடும்பத்தில் சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி குடியிருப்பாள். வறுமையற்ற வாழ்வு அமையும்.
பரிகாரம்
மகாலட்சுமி வீட்டில் தங்கிட நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை பழக்கங்கள் போதும் அதையே பரிகாரமாக கொள்ளலாம்.
குருக்களை(ஆசிரியர்களை) வழிபட வேண்டும். அனைவரிடமும் நாகரிகமான முறையில் மரியாதையுடன் பழக வேண்டும். மற்றவர்களின் செய்கையால் நமக்கு கோபம் ஏற்பட்டாலும் சண்டை எதுவும் போடக்கூடாது. மனைவி,மக்களை நேசிக்க வேண்டும். அதுபோல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுபவர்களின் வீட்டில் எப்போதும் மகாலட்சுமி குடியிருக்கிறாள்; குடியேறுவாள்.