ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025-சிம்ம ராசி
சிவபெருமானின் பரிபூரண அருள் பெற்ற சிம்மராசி அன்பர்களே!! உங்கள் அனைவருக்கும் ‘இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ வரும் 2025-ம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரப் போகிறது, என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
இந்த புது வருடத்தில் பொறுப்புடன் செயல்பட்டால் நன்மைகள் அதிகரிக்க கூடிய ஆண்டாக இந்த வருடம் உங்களுக்கு அமையும். எந்த சமயத்திலும் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் ஏனோதானோ செயல்களும் இல்லாமல் இருந்தால், ஏற்றம் எதிர்காலத்தை வெளிச்சமாக்கும்.
வேலை
வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை உணரப்படும். அதேசமயம் பொறுப்புகளும் அதிகரிக்கலாம். அவற்றை சுமையாக புலம்ப வேண்டாம், மறைமுக எதிரிகளின் பலம் அதிகரிக்கலாம், அதனால் எதையும் முழு கவனத்துடன் முன்னெடுத்துச் செய்யுங்கள். கோல் சொல்லும் நபர்களால் கோளாறுகள் உங்களுக்கு தேடி வரலாம், உடனடியாக உணர்ந்து விலகிக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளுடன் எந்த சமயத்திலும் வாக்குவாதம் வேண்டாம். நிதானத்தை கடைபிடியுங்கள்.
குடும்பம்
குடும்பத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் படிப்படியாக வர தொடங்கும். குறிப்பாக திருமணம், புது வீடு வாங்குதல் அல்லது புது வீடு கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகள் படிப்படியாக நடக்கும். வீட்டில் இனிமை நிறைய வேண்டும் என்றால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குலதெய்வத்தை தினமும் கும்பிடுவது அவசியம். குறிப்பாக பெற்றோர்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குழந்தை பேர் இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.குழந்தை பேருக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நண்பர்கள், அந்த சிகிச்சையை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலில் மிக கவனமுடன் இருக்க வேண்டும் .நீங்கள் கொடுக்கும், வாங்கும் ஒவ்வொரு பணத்தையும் உடனடியாக குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
தொழில்
செய்யும் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். முழுமையான கவனம் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் உறுதியாக இருக்கும். பங்கு வர்த்தகம், யூக வணிகம், போட்டி பந்தயத்தில் பெருந்தொகையை முடக்க வேண்டாம். அரசுக்கு உரிய வரி முதலானவற்றை முறையாக செலுத்தி உரிய பத்திரங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அரசு, அரசியல் துறையினர் எதையும் நிதானமாக செய்வதும், ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பேசுவதும் அவசியம். துறை சார்ந்த கோப்புகளில் கையெழுத்து போடும் முன் முழுமையாக படித்துப் பார்த்து கையெழுத்திடுவது அவசியம். எந்த சமயத்திலும் யாருடைய குறுக்கு வழிக்கும் துணை போக வேண்டாம்.
கலை, படைப்பு துறையினருக்கு முயற்சிக்கு ஏற்பவே வாய்ப்புகள் வரும். அனுபவத்தை பாடமாக வைத்துக் கொண்டால் வாய்ப்புகள் நழுவாமல் இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் சற்று தொய்வு ஏற்படலாம். ஆகையால் அதிகாலை எழுந்து மிக கவனமுடன் படித்தால் மட்டுமே வரும் வருடம் உங்களுக்கு சிறப்பான வருடமாக அமையும்.
அறிவுரை
வெளியூர், வெளிநாடு செல்லும் போது தேவையில்லாத கூடாத நட்பு உங்களுக்கு தேடி வரலாம், அதை கேடாக நினைத்து உடனே ஒதுக்கி விடுங்கள். பிறர் தரும் எந்த ஒரு பானத்தையும், உணவையும் அறவே தவிர்த்து விடுங்கள். ஹார்மோன் உபாதை, கொழுப்புச் சத்து அதிகரிப்பு, ரத்த அழுத்தம் மாறுபாடு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆலய வழிபாடு
ஒருமுறை மேல்மலையனூர் அங்காளம்மனை தரிசித்து விட்டு வாருங்கள். மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாள், தாயாரையும் ,அனுமனையும் கும்பிட்டு வாருங்கள். முடிந்த அளவுக்கு ஏழை மாற்று திறனாளிகளுக்கு உதவுங்கள். உங்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடமாக அமையும்.
மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு 50 சதவீத பலன்களை மட்டுமே தரக்கூடிய வருடமாக இருக்கும் மிக மிக கவனமாக கடக்க வேண்டிய வருடமாக 2025 உங்களுக்கு உள்ளது…