விருச்சிக ராசி
செவ்வாய் பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!… வரும் 2025 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரப் போகிறது? என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்..
தன்னம்பிக்கையால் தடைகளை தகர்த்து முன்னேற வேண்டிய வருடம் இது. இந்த சமயத்தில் “உங்கள் முயற்சியும் பயிற்சியும் தான்” முழுமையான முன்னேற்றத்தை தரும்.
வேலை
அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்போர் யாருடைய தவறையும் நீங்கள் பெரிதுபடுத்தி பேச வேண்டாம். சின்ன சின்ன வேலையாக இருந்தாலும் சின்சியராக செய்தால், சிறப்பான எதிர்காலத்துக்கு அதுவே அஸ்திவாரமாக அமையும். கோப்புகளில் கையெழுத்திடும் சமயத்தில் கவனமாக இருங்கள். யாருடைய கட்டாயத்துக்காகவும் முழுமையாக படிக்காமல் கையெழுத்திடாதீர்கள். பணிகள் எதையும் திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செய்தீர்கள் என்றால் உங்கள் எதிர்பார்ப்பான ஏற்றங்கள் அனைத்தும் நிச்சயம் கைகூடும்.
குடும்பம்
உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்
குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். வெகுகாலமாக பிரிந்து இருந்த உறவுகளும், நட்புகளும் தேடி வந்து பேசுவார்கள். தம்பதியிடையே இணக்கம் உருவாகும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். எதிர்பார்த்த சுப காரியங்கள் குலதெய்வ வழிபாட்டால் கைகூடிவரும். பிறருக்கு வாக்குறுதிகளை தரும் முன் அது அவசியமா? என்று யோசியுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். வரவை சுபசெலவாக்கி சேமிக்க பழகிக் கொள்ளுங்கள். 40 வயதை கடந்த பெண்கள் ஹார்மோன் உபாதை தெரிந்தால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
தொழில்
செய்யும் தொழிலில் செழிப்பான பாதை உருவாகும். அது தொடர வேண்டும் என்றால், நீங்கள் அதில் நேர்மையும் நேரடி கவனத்தையும் கடைபிடிக்க வேண்டும். அயல் நாட்டு வர்த்தகத்தில் உரிய சட்ட நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து செயல்படுங்கள். பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் லாபம் வரும். அதே சமயம் “இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைத்தால்” ஏமாற்றம் தான் மிஞ்சும். புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
அரசு, அரசியல் துறையினருக்கு அனுகூல காற்று வீசும். மேலிடத்தின் தயவால் சிலருக்கு பதவி பொறுப்புகள் கிட்டவும் வாய்ப்புகள் உண்டு.உடனிருப்போரின் தவறான வழிகாட்டுதலுக்குத் தலையாட்டாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருங்கள்.எதிர்பாலினரிடம்ர எல்லை வகுத்து பழகுங்கள். தேவையற்ற வாக்குறுதி எதையும் பொது இடத்தில் தரவேண்டாம். பிறரோட தவற்றுக்கு நீங்கள் பழி ஏற்க நேரிடலாம். எந்த சமயத்திலும் அறிமுகம் இல்லாத யாருக்கும் ஜவாப், ஜாமீன் கொடுக்காதீர்கள்.
மாணவர்களுக்கு உயர்வுகளும் உத்தரவாதமும் கிட்ட கூடிய காலகட்டம். இந்த சமயத்தில் சோம்பலை விரட்டினால் சாதனைகள் படைக்கவும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற சவகாசத்தை உடனே உதருங்கள். பெற்றோர், பெரியோர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். சிலருக்கு வெளிநாட்டு கல்விக்கான வாய்ப்புகள் வரும்.
கலை, படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். “பலகால முயற்சிகள் பலிக்கும்போது” செயல்களில் முழு கவனம் இருக்க வேண்டும். தேவையற்ற ரோஷமும், வேண்டாத விவாதமும் தவிர்க்க வேண்டும். படைப்பு சார்ந்த ரகசியங்களை வீண் பந்தாவுக்காக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்.
அறிவுரை
வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. தொலைதூரப் பயணத்தை இயன்றவரை பகலிலேயே மேற்கொள்ளுங்கள். வழிப்பாதையில் சுகாதாரமில்லா உணவை தவிருங்கள். வயது முதிர்ந்தவர்கள் இரவு பயணம் செய்தால் தகுந்த துணையோடு செல்லுங்கள்.
காது, மூக்கு, தொண்டை உபாதைகள், தூக்கமின்மை பிரச்சனைகள் தலை தூக்கலாம். தினமும் சிறிது நேரமாவது நடை பயிற்சி அல்லது எளிமையான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
ஆலய வழிபாடு
ஒருமுறை மந்திராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர மஹானை மனதார வணங்கி விட்டு வாருங்கள். முடிந்தால் தங்கத்தேர் தரிசனம் செய்யுங்கள். மாதம் ஒருமுறை பக்கத்து கோயிலில் உள்ள சுவாமி, அம்பாளை வணங்கிவிட்டு தட்சிணாமூர்த்தி ஆராதியுங்கள். இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னமும் நீரும் தானம் செய்யுங்கள். ஏழை நோயாளிகளுக்கு இயன்ற மருந்து வாங்கி கொடுங்கள்.
மொத்தத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு 60% நற்பலன்களை நல்கும் புத்தாண்டாக இருக்கும். எதிலும் எச்சரிக்கையும், உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டிய வருடமாக 2025 இருப்பதால், கவனமுடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!…