பார்த்தன்பள்ளி பெருமாள் கோவில்
காவிரியாற்றின் கரையோரத்தில் அமைந்த இன்னொரு பெருமை பெற்ற ஸ்தலம் திருபார்த்தன்பள்ளி. அமைதியான சூழ்நிலையில் இந்த ஸ்தலம் காட்சி அளிக்கிறது. திருமால் பரிபூரண ஆனந்தக் கோலத்தோடு காட்சியளிப்பதை எவ்வளவு நேரமானாலும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பகவான் விரும்பி அமர்ந்த ஸ்தலங்களில் இந்த தலமும் ஒன்று என்பதால் அனைவரும் தரிசித்து பகவான் திருவருள் பெற தினமும் வந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருபார்த்தன் பள்ளி என்ற பெயருடைய இந்த ஸ்தலம் சீர்காழியிலிருந்து பதிமூன்று கி.மீட்டர் தொலைவில். (காவிரியாற்றைக் கடந்தால்) அமைந்திருக்கிறது. மூலவர் தாமரையாள் கேள்வன். நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மேற்கே பார்த்து தரிசனம் தாயார் தாமரை நாயகி உத்ஸவர் பார்த்தசாரதி தீர்த்தம் சங்க ஸரஸ் (கங்கா தீர்த்தம் என்று வேறொரு பெயர்) விமானம் நாராயண விமானம். வருண பகவாலுக்கும் ஏகாதசத்ருரர்களுக்கும் அவர்களின் வேண்டுகோள்படி காட்சி தந்த புனித ஸ்தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
மூலவருக்கும் சரி, உத்ஸவர்க்கும் சரி ஸ்ரீதேவி, பூ தேவி, நீளா தேவி’ என்று மூன்று தேவிகள் உண்டு என்பது சிறப்பு அம்சம். உத்ஸவர் பார்த்த ஸாரதி என்றாலும் கோலவல்லி இராமர் என்று மற்றொரு அழகிய உத்ஸவர் உண்டு. சங்கு சக்கர கதையுடன் நிற்கும் இவருக்கு வில்லும் அம்பும் சாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோலவல்லி இராமரின் மூலவர் சிறிது தூரம் தள்ளி இருக்கும் ஒரு தோப்பில் தனிக் கோயில் கொண்டிருக்கிறார்.
ஒருசமயம் வருண பகவான் மனநிம்மதியின்றித் தவித்த பொழுது அமைதி வேண்டுமானால் திருநாங்கூருக்கு அருகேயுள்ள திரு பார்த்தன் பள்ளிக்குச் சென்று அங்குள்ள கங்காதீர்த்தமென்று அழைக்கப்படும். சங்கஸரஸ் புஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கித் தவம் செய்தால் மனநிம்மதி கிடைக்கும். யாராலும் எவராலும் எத்தனை பெரிய சக்தியினாலும் எக்காலத்திலும் இடையூறு இல்லாமல் பக்கத்தில் இருந்து பார்த்தன் காப்பாற்றுவார் என்று சொன்னதின் பேரில் வருணன் இங்கு வந்து முறைப்படி பிரார்த்தனை செய்து மனநிம்மதியைப் பெற்றார். வருணனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தது போல பத்துவகை ருத்ரர்களுக்கும் திருமால் தரிசனம் தந்து அவர்களது வாழ்க்கையை ‘ஒளி வீசச் செய்தார்.
பலன் தரும் பரிகாரம்
ஆரோக்கியம் குன்றியவர்கள், வியாபாரத்தில் நம்பி ஏமாத்தி போனவர்கள். வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள்,இளைஞிகள், வேலை கிடைத்தும் அதில் முன்னேற முடியாமல் அவதிப்படும் அலுவலகப் பணியாட்கள், பாலியல் தொல்லையால் தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள், குழந்தைகளினால் வெறுக்கப்பட்டு போக்கிடம் இல்லாமல் அனலில் பட்ட புழுவெனத் துடிக்கும் வயதானவர்கள் ஆகியோர் இந்த ஸ்தலத்திற்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்தால் கஷ்டங்கள் விலகி மனநிம்மதியோடு வாழ்நாட்களைக் கழிப்பார்கள்.
கோவில் இருப்பிடம் :