சனி தசா பலன்கள்
சனி தசா(Sani Dasa) பலன்கள் மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும்.
சனி மக்களுக்குகாரகன் என்பதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியலில் உயர் பதவிகளும் தேடிவரும். லட்ச லட்சமாக சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும். சனி கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க முடியாது. இந்த தசா காலங்களில் பூமி, மனை, வண்டி வாகன சேர்க்கைகள், செல்வம் செல்வாக்கு யாவும் அமையும். நிறைய கடன் வாங்கும் தைரியமும் அதனால் வாழ்வில் முன்னேற கூடிய வாய்ப்பு, கடன்களை அடைக்க கூடிய வல்லமை உண்டாகும்.
கீழே கொடுக்க பட்டுள்ள Vote பொத்தானை ஐ அழுத்தி உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள்….❤️
பலரை வழி நடத்தி செல்லும் வாய்ப்பு, வேலையாட்களால் அனுகூலம், பழைய பொருட்கள், இரும்பு சம்பந்தப்பட்டவை போன்றவற்றாலும் அனுகூலம் உண்டாகும்.
சனி பலமிழந்து இருந்து தசா நடைபெற்றால் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் எலும்பு தொடர்பான நோய்கள் உண்டாகும். அதிலும் சூரியன் வீட்டிலோ, சாரத்தில் சனி அமைந்தால் தாய் தந்தையருக்கு பாதிப்பு, கல்வியில் தடை, தகுதிக்கு குறைவான வேலைகளை செய்யும் அமைப்பு, வேலையாட்களால் பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை உண்டாகும். நிறைய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் அதை அடைக்க முடியாமல் அவப்பெயரும் உண்டாகும். மற்றவர்களால் வெறுக்கக் கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையும் மந்தம் அடையும்.
இளம் வயதில் சனி தசா(Sani Dasa) நடை பெற்றால் நல்ல அறிவாற்றல், எவ்வித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் அமைப்பு, கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.
மத்திம வயதில் நடைபெற்றால் கடின உழைப்பு மேற்கொண்டு பல்வேறு வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையாட்களால் அனுகூலம், பலரை வைத்து வேலை வாங்கும் யோகமும், சமுதாயத்தில் செல்வம் செல்வாக்குடன் வாழும் அமைப்பும் கொடுக்கும்.
12 பாவங்களில் சனி இருந்து தசா நடந்தால் ஏற்படும் பலன்கள்:
- சனி லக்னத்தில் அமர்ந்து தசா நடைபெற்றால் உடலில் வாத நோய்கள், குடும்பத்தில் விரோதம் ஏற்படும். அரசாங்க வழியில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உற்றார் உறவினர்களிடம் வீண் விரோதம் உண்டாகும்.
- சனி 2-ல் இருந்து தசா நடந்தால் பணவிரயம், மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் கலகம், அன்னியர் வீட்டில் குடியிருக்க வேண்டிய அவலநிலை, அடுத்தவர் சொத்துக்கு பேராசை படும் குணம் போன்றவை உண்டாகும்.
- சனி 3-ல் இருந்து தசா நடைபெற்றால் பல நல்ல காரியங்களில் ஈடுபாடு, தாராள தனவரவுகள், உற்றார் உறவினர்களால் மதிக்கப்படும் அமைப்பு, பெயர், புகழ், உயரும் யோகம், புத்திரர்கள் பிறக்கும் யோகம், அதிகாரமிக்க பதவிகளை வகிக்கும் யோகம், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும்.
- சனி 4-ல் இருந்து தசா நடைபெற்றால் உறவினர்களால் மேன்மை, உயர்வான பதவிகளை வகிக்கும் யோகம், கிராம தலைவராகும் அமைப்பு, வண்டி, வாகன யோகம், பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு கிட்டும். பண வரவுகளும் அற்புதமாக இருக்கும்.
- சனி 5-ல் அமைந்து தசா நடைபெற்றால் குடும்பத்தில் கஷ்டம், வேலையாட்களால் பிரச்சனை, வண்டி வாகனம், வீடு, மனை போன்றவற்றால் நஷ்டம், அரசாங்கத்தால் தொல்லைகள், மன அமைதி குறைவு, புத்தி தடுமாற்றம் ஏற்படும்.
- சனி 6-ல் அமர்ந்து தசா நடைபெற்றால் நல்ல குண அமைப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல், அரசாங்க வழியில் அனுகூலம், வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் அமைப்பு, தன தான்ய சேர்க்கை, அதிக ஆட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு, மனைவி புத்திரர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
- சனி 7-ல் அமர்ந்து தசா நடைபெற்றால் பெயர், புகழ், உயரும் அமைப்பு, பொருளாதார மேன்மை, அரசு வழியில் அனுகூலம், வீடு, மனை ஆடை, ஆபரணம் நவீன பொருட்கள் அமையும்,கணவன்-மனைவி ஒற்றுமை பாதிக்கும், திருமணத்தடை ஏற்படும்.
- சனி 8ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் ஆரோக்கிய பாதிப்பு, பணவிரயம், புத்தி கெடும் அமைப்பு, இடம் விட்டு இடம் செல்லும் அமைப்பு உண்டாகும். எதிர்பாராத விபத்துக்கள், அரசாங்க வகையில் தொல்லை, எடுத்த எந்த காரியமும் நிறைவேறாத நிலை, வண்டி வாகன இழப்பு, குடும்பத்திலுள்ளவர்களை இழக்க வேண்டிய நிலை, களத்திர வழி உறவினர்களிடம் பகை விரோதம் உண்டாகும்.
- சனி 9-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் பணம், பொருள் அதிகம் சேரும், சிறப்பான ஆலய தரிசனம், பொருளாதார நிலையில் லாபங்கள், வீடு விருத்தியாகும் நிலை ஏற்படும். அரசாங்க உதவிகள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளியூர் வெளிநாடு மூலம் லாபம் ஏற்படும்.
- சனி 10-ல் அமைந்த தசா நடைபெற்றால் நல்ல புகழ், நல்ல லாபம், எல்லாவகையிலும் வெற்றிகள், அறிவை வளர்த்திடும் அமைப்பு, நல்ல பண்புகளுடன் வாழும் யோகம், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும்.
- சனி 11-ல் அமைந்து தசா நடந்தால் நல்ல பண லாபம், பகைவரை அழிக்கும் ஆற்றல், வீடு விருத்தி அடையும் யோகம், அதிக பயிர் விளைச்சல், வண்டி வாகன யோகம், பங்காளிகளால் அபிவிருத்தி உண்டாகும். மனைவி, புத்திரர்களுக்கு நலமும், வளமும் ஏற்படும்.
- சனி 12-ல் அமர்ந்து தசா நடைபெற்றால் வேலையாட்களால் பிரச்சனை, பிரிவு, பணவிரயம், மனைவிக்கு கண்டம், உடல் நல பாதிப்பு ஏற்படும். என்றாலும் வெளியூர் வெளிநாடு தொடர்புகளால் சாதகப் பலன்கள் உண்டாகும்.