விசாகம் நட்சத்திரம்
இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினாறாவது இடத்தைப் பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1, 2, 3-ஆம் பாதங்கள் துலா ராசிக்கும், 4-ஆம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும். இதில் 1, 2, 3-ஆம் பாதங்கள் வயிற்றின் கீழ்ப்பகுதி, சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. 4-ஆம் பாதம் சிறுநீர்ப்பை, பிறப்பு உறுப்பு, குதம், சிறு குடல் போன்றவற்றை ஆள்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்கவேண்டிய முதல் எழுத்துக்கள் தி, து, தே, தோ; தொடர் எழுத்துக்கள் தூ, தை ஆகியவை.
குண அமைப்பு:
விசாக நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர், வேண்டாதவர் என பிரித்துப் பார்க்காத குணம் கொண்டு இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டான உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள். நல்ல நீதிமானாகவும், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேசக் கூடியவராகவும் இருப்பார்கள்.
பல கலைகளையும் கற்றுவைத்திருப்பார்கள். தன்னுடைய கொள்கைகளிலிருந்து எந்த நெருக்கடியான நேரத்திலும் மாறமாட்டார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சூட்சும புத்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும். பெரியவர்களை மதிக்கும் பண்பும்,பல பெரிய மனிதர்களின் தொடர்பும் சமுதாயத்தில் பெயர், புகழை உயர்வடையச் செய்யும். பலகோடி கொட்டிக் கொடுத்தாலும் பொய் பேசமாட்டார்கள்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் சுயநலம் கொண்டவர்கள்.பேராசை மிக்கவர்கள்.சிலர் கலகத்தை உண்டாக்குவார்கள்.மனதில் நினைத்ததை பேசுவார்கள்.பிறருக்கு அடங்கி நடக்க மாட்டார்கள்.கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள்.தேடல் குணம் இருக்கும்.விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.உறுதியான மனதுடன் எதையும் செய்வார்கள். எதையும் அலசி ஆராய்வார்கள்.கலைஞர்களாக இருப்பார்கள்.வாத,விவாதம் செய்வார்கள்.போராடும் குணம் கொண்டவர்கள்.நல்ல பணவசதி இருக்கும்.சில நேரங்களில் இவர்களில் சிலர் செய்யும் செயல்கள் கோமாளித்தனமாக தோன்றும்.
குடும்பம்:
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்துதான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால், சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்யக் கூடிய நிலையும், ஏற்கனவே மணமானவர்களை மணம் முடிக்கக் கூடிய நிலையும் உண்டாகும். நல்லவருக்கு நல்லவராகவும், தீயவருக்கு தீயவராகவும் நடந்து கொள்வார். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வார். எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டையிடக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல்நலத்தைப் பேணுவதில் அக்கறை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமையிருக்கும். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்சனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.
யோனி-யானை
கணம்-ராட்சஸ கணம்
நாடி-அனந்த நாடி
அதிபதி-இந்திரன், அக்னி;
கிரகம்-குரு
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாவதற்கு 3நாளிலிருந்து 13 நாட்கள் ஆகும்.நோய் குணமாக இந்திரன், அக்னி ஆகியோருக்கான மந்திரத்தை கூற வேண்டும்.பசு,தங்கம் தானம் அளிக்க வேண்டும்.நாகலிங்க மரத்தை வழிபட வேண்டும்.
- பிறக்கும் பொழுதே ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. உடல்நிலை நன்றாக இருக்கும்.
- குரு சந்திரனுடன் சேர்ந்து கடகம் அல்லது மற்ற வீடுகளில் இருந்தால் அது கஜகேசரி யோகம் உண்டாகும். அதனால் பணம் வசதியுள்ள குடும்பத்தில் பிறப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.
- குரு,சனியுடன் 8-ல் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும்.
- குரு செவ்வாயுடன் 6-ல் இருந்தால் காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது.
- குரு, செவ்வாய் சூரியனுடன் 5-ல் இருந்தால் புகழுடன் வாழ்வார்.
- குரு 10-ல் இருந்து 2-ல் உள்ள சுக்கிரனை பார்த்தால் வாக்கு சித்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.
தொழில்:
விசாக நட்சத்திரக்காரர்கள் நல்ல கல்விமான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோவில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடைப் பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ, பெரிய கம்பெனிகளில் வர்த்தகரீதியாக பிரதிநிதிகளாகவும் பணிபுரிவார்கள். நீதித்துறையிலும், கல்லூரிப் பேராசிரியர்களாகவும், அரசியல் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை, கணிதம்போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். சிறு வயதில் சில சங்கடங்களை சந்தித்தாலும் 23 வயதிற்கு மேல் நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். தேவை அதிகரிக்கும்போதுதான் பணம்மீது அதிக நாட்டம் உண்டாகும். மதகுரு, சித்தர்கள்மீது அதிக ஈடுபாடு இருக்கும்.
நோய்கள்:
உடல் நலத்தின்மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாத காரணத்தால் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். பலமற்ற இதயம் கொண்டவர்கள் என்பதால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகங்களில் பாதிப்புகள் உண்டாகும்.
திசைப் பலன்கள்:
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் குரு திசை மொத்த வருட காலங்கள் 16 என்றாலும், பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள தசா புத்திகளைப் பற்றி அறியலாம். பிறக்கும்போதே சுபகிரகமான குருவின் திசை வருவதால் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம், பெரியோர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
இரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துகளின் சேர்க்கை, வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்ப்பட நேரிடும்.
மூன்றாவதாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இந்த காலங்களில் ஜாதகருக்கு ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறமுடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
நான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் நாட்டமும் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
ஐந்தாவதாக வரும் சுக்கிர திசைக்காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இந்த காலங்களில் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.
ஸ்தல மரம் :
விசாக நட்சத்திரக்காரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும்.இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும். குயவன் சக்கரத்தை போல ஐந்து நட்சத்திரங்கள் கொத்தாக இருக்கும். இதை கார்த்திகை மாதத்தில் இரவு பன்னிரண்டு மணியளவில் வானத்தில் காணலாம்.
செய்யவேண்டிய நல்ல காரியங்கள்
சிற்பக்கலை கற்றல், நாட்டியம் பயிலுதல், அக்கினி காரியங்கள் செய்தல், மந்திரம் கற்றல், தேவதா பிரதிஷ்டை புஜை, விதை விதைத்தல், கிணறு, குளத்தை சீர் படுத்துதல், வியாதிக்கு மருந்துண்ணுதல் போன்றவற்றை செய்யலாம்.
வழிபாட்டு ஸ்தலங்கள்
அத்தாளநல்லூர்:
நெல்லை மாவட்டம், வீரநல்லூருக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள ஆனையக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவரதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
திருநின்றியூர்:
மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள லட்சுமி புரீசுவரர்- உலகநாயகி அருள்பாலிக்கும் திருஸ்தலம்.
கபிஸ்தலம்:
தஞ்சை, பாபநாசத்துக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் கும்பகோணம், திருவையாறு சாலையில் விளாமரங்கள் நிறைந்த ஸ்தலம். மூலவர் கஜேந்திர பெருமாள், தாயார் ரமாமணிவல்லி.
கூற வேண்டிய மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹோஸேநாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
விசாக நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
கிருத்திகை, உத்திரம், புனர்பூசம், உத்திரம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் திருமணத்திற்குப் பொருந்தாது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயம் :
கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
தல வரலாறு:
பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.
சிறப்பு:
விசாகம் என்றால் “மேலான ஜோதி’. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
இருப்பிடம்:
மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.