திருவெம்பாவை பாடல் 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண்
ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்.
பொருள்:
இப்பாடல், தோழியர் எல்லாம் ஒருங்கு கூடி நீராடுங்கால், இறைவனின் பெருமையைப் போற்றி உரைத்தது ..
ஆரழல்போல் செய்யாவெண் ணீறாடி
நிறைந்து ஒளி வீசும் நெருப்பு போன்ற செந்நிறம் உடையவனே !!.. வெண்மை நிறமான திருநீற்றில் மூழ்கியவனே !!…
செல்வா, சிறுமருங்குல் மையார் தடங்கண்
மடந்தை மணவாளா, ஐயா
எங்கள் செல்வமாகிய ஈசனே !!.. சிற்றிடையையும், மை பூசிய கருவிழிகளையும் உடைய மடந்தையான உமையின் மணவாளனே !!.. அழகனே !!!..
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா
வழியடியோம் வாழ்ந்தோங்காண்
வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்களையுடைய அகன்ற தடாகத்தில், ‘முகேர்’ என்ற ஒலி எழும்படி, புகுந்து, கரங்களால்,
குடைந்து, குடைந்து மூழ்கி எழுந்து, உன் திருவடிகளைப் பாடி, பரம்பரை அடியவர்களாகிய நாங்கள் வாழ்ந்தோம் ..
நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்,
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம்
நீ எங்களை ஆட்கொண்டருளும் பொருட்டுச் செய்யும் விளையாடல்களினால், துன்பங்கள் நீங்கி இன்பம் பெறுபவர்கள், அவற்றை எந்தந்த வகைகளில் பெறுவார்களோ, அந்தந்த வகைகளில் எல்லாம் பெற்று முடித்தோம் !!..
எய்யாமற் காப்பாய் எமைஏலோர்
எம்பாவாய் .
இந்தப் பிறவிச் சுழலில் அழுந்தி இளைக்காமல் எங்களைக் காப்பாயாக !!!…