திருவெம்பாவை பாடல் 13
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப்
பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும்
புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
பொருள்:
இந்தப் பாடலில், நீராடும் பொய்கையையே உமையாகவும் சிவனாகவும் உருவகப்படுத்திக் கூறுகிறார் அடிகள்.
‘பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப்
பைம்போதால்
‘கரிய குவளை மலர்களாலும், செந்தாமரை மலர்களாலும் பொய்கை நிரம்பி இருக்கிறது. இது உமையம்மையின் சியாமள நிறத்தையும், சிவனின் சிவந்த நிறத்தையும் குறிக்கிறது .. குவளை மலர்கள் அம்மையின் திருவிழிகளையும், தாமரை மலர் சிவனின் திருவிழிகளையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
‘அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
பொய்கையில் ஆங்காங்கு நாரை முதலான நீர்ப்பறவைகள் சத்தமிடுகின்றன … நீராடுவோர், நீராடும் போது ஏற்படும் ஒலி, அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்கள் ஏற்படுத்தும் ஒலி, ஐந்தெழுத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி இவ்வாறாக, மேலும் மேலும் எழும்பும் ஒலியலைகளாலும் நிரம்பி இருக்கின்றது பொய்கை. இதையே ‘அங்கு அங்கு உருகும் இனத்தால்’
என்று விரித்து, பொய்கையில், ஆங்காங்கே பக்தி மேலிட உருகி நிற்கும் தொண்டரினத்தால் என்றும் பொருள் கொள்ளலாம் ..
‘குருகு’ என்பது உமையம்மையின் ‘வளையலை’யும் குறிக்கும். ‘பின்னும் அரவத்தால்’ என்பதை, பெருமானின் திருமேனியெங்கும் ஆபரணமாக ஊர்ந்து விளையாடும் நாகங்களையும் குறிக்கும்.
‘தங்கள் மலங்கழுவு வார்வந்து
சார்தலினால்’
மலம் என்பது இவ்விடத்தில் ‘அழுக்கு’ எனப் பொருள்படும் .. தங்கள் அழுக்குகளை நீக்கிக் கொள்ள குளத்தில் மூழ்குதற்காக வந்து சேர்கிறார்கள் மானிடர்கள். மும்மலங்களாகிய, ‘ஆணவம், கன்மம், மாயை’ ஆகியவற்றை நீக்குதற் பொருட்டு, அம்மையப்பனின் இணையடி சேர்பவர்களையும் இது குறிக்கிறது .. சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ‘திரிபுர
சம்ஹார’த்தின் தத்துவ விளக்கம் இதுவே !!.
‘எங்கள் பிராட்டியும் எங்கோனும்
போன்றிசைந்த’
இவ்வாறான ஒற்றுமைகளினால், குளமானது, அம்மையைப்பனை ஒத்திருக்கிறது.
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப
ஊற்றிலிருந்து பொங்கும் நீரானது மேலும் மேலும் அலையலையாய் எழும்பி வரும் மடுவில், நாம் மூழ்கி, நம் சங்கு வளையல்களும், சிலம்பும் சேர்ந்து ஒலிக்கும் படியாக,
‘கொங்கைகள் பொங்கக் குடையும்
புனல்பொங்க
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.’
இறைவனது நினைவால் நம் மார்புகள் பூரித்து விம்ம, பொங்கி வரும் நீரையும் தாமரை மலர்களையும் உடைய இந்தப் பொய்கையில் நாம் மூழ்கி நீராடுவோமாக.