திருவெம்பாவை பாடல் 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ்
சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ
றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்
பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
பொருள் :
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் ==== அண்ணாமலையாரின்
திருவடி மலர்களை, தேவர்கள் தொழுகின்றனர்.
இறைவனின் திருவடிகளின் பிரகாசத்தில், தேவர்கள் சிரத்தில் அணிந்திருக்கின்ற கிரீடங்களில் இருக்கும் ரத்தினங்கள் ஒளியிழந்து விடுகின்றன.
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகல=கண்களுக்கு நிறைவான சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்து இருளை நீக்கும் போது, குளிர்ச்சியான ஒளி பொருந்திய நட்சத்திரங்கள், ஒளி மங்கி மறைகிறது ..
அந்த வைகறைப் பொழுதில்,
‘பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்
பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி=== பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் ஆகி, ஒளி நிரம்பிய ஆகாயமாகி, இந்நிலவுலகு முழுதுமாகி, இவை அனைத்திலிருந்து நீங்கியும் விளங்குகிற.
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் .==== நம் அகக்கண்ணால் கண்டு மகிழத்தக்க அமுதமாய் இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பாடி, பெண்ணே, பூக்களால் நிரம்பியுள்ள இந்தப் பொய்கையில் மகிழ்ந்து நீராடுவாயாக !!